No menu items!

ஐபிஎல் ஏலம் – யார் காட்டில் மழை?

ஐபிஎல் ஏலம் – யார் காட்டில் மழை?

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் நாளை நடக்கவுள்ளது. இந்த ஏலத்தில் யாருடைய காட்டில் எல்லாம் பணமழை பெய்யப் போகிறது என்று பார்ப்போம்…

ஷாரூக் கான் (அடிப்படை விலை ரூ.40 லட்சம்)

2022-ம் ஆண்டில் நடந்த ஏலத்தில் 9 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டவர் ஷாரூக் கான். ஆல்ரவுண்டரும் பினிஷருமான ஷாரூக் கான், கடந்த ஐபிஎல்லில் சிறப்பாக ஆடவில்லை என்ற காரணத்தால் பஞ்சாப் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். அப்படி பஞ்சாப் அணி கழற்றி விட்டது ஷாரூக் கானுக்கு நல்லதுதான் என்கிறார்கள் கிரிக்கெட் பண்டிட்கள். கடைசி ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்யக் கூடியவரான ஷாரூக் கான், சமீபத்தில் நடந்த டிஎன்பிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்து வீச்சாளராகவும் சாதனை படைத்தது அவரது மதிப்பை உயர்த்தியுள்ளது.

கடந்த ஏலத்தில் கடைசிவரை அவரை வாங்க முயற்சி செய்த சென்னை சூப்பர் கிங்ஸ். ஆர்சிபி உள்ளிட்ட பல அணிகள் அவரை வாங்க இந்த ஏலத்தில் கோடிகளை அள்ளி இறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அணிகளை விடுங்கள், தற்போது ஷாரூக் கானை விடுவித்துள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியேகூட அவரை மீண்டும் வாங்க முயற்சிக்கலாம். அதனால் 10 கோடி ரூபாய்க்கு மேல் ஷாரூக் கான் ஏலம் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிட்செல் ஸ்டார்க் (அடிப்படை விலை ரூ.2 கோடி):

2015-ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டில் மீண்டும் ஐபிஎல் பக்கம் தலை வைத்துள்ளார் மிட்செல் ஸ்டார்க். இந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை தட்டித் தூக்க காரணமானவர்களில் ஒருவர் என்பதால், ஏலத்தில் அவரது கிராஃப் ஏகத்துக்கு எகிறலாம்.

பவர் ப்ளே என்று சொல்லப்படும் முதல் 6 ஓவர்களிலும், கடைசி 4 ஓவர்களிலும் மிகச் சிறப்பாக பந்து வீசும் ஆற்றல் அவரது விலையை அதிகரிக்கும் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார்.

ரச்சின் ரவீந்திரா (அடிப்படை விலை ரூ.50 லட்சம்)

இந்த உலக்க் கோப்பையின் சூப்பர் ஹீரோக்களில் ஒருவர் ரச்சின் டெண்டுல்கர். அத்துடன் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்பதும் இந்த ஏலத்தில் ரச்சினுக்கு நல்ல ரேட் கிடைக்க வழி செய்யும். அதிரடியான தொடக்க ஆட்டக்காரர் என்பதுடன் சிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும் இருப்பதால், இவரை ஏலத்தில் வாங்குவதைப் பற்றித்தான் ஒவ்வொரு அணியும் விவாதித்துக்கொண்டு இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் ஆர்சிபி அணி இவர் மீது ஒரு கண் வைத்திருக்கிறது. அதே நேரம் தோனியின் சிஎஸ்கேவுக்கும் இவரை வாங்க ஆசை இருக்கிறது. இப்படி ஒவ்வொரு அணியும் போட்டி போடுவதால் 15 கோடிக்கு மேல் இவர் விலைபோக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

ஷர்துல் தாக்குர் (அடிப்படை விலை ரூ.2 கோடி)

வேகப்பந்து வீச்சாளர்களில் அடுத்து இந்தியாவின் சிறந்த ஆண்ரண்டராக (வேகப் பந்து வீச்சாளர்களில்) பார்க்கப்படுபவர் ஷர்துல் தாக்குர். கடந்த ஐபிஎல்லில் ஒரு போட்டியில் 29 பந்துகளில் 68 ரன்களைக் குவித்தும், இவரை ஏனோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கழற்றி விட்டது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கழற்றி விட்டாலும், கோடிக்கணக்கான ரூபாயை கொட்டிக் கொடுத்து இவரை வாங்க பல அணிகள் தயாராக இருக்கின்றன. மிக முக்கியமாக இவரை நட்சத்திர வீரராக உருவாக்கிய சிஎஸ்கே அணி, இந்த ஏலத்தில் மீண்டும் ஷர்துல் தாக்குருக்கு வலை வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாட் கம்மின்ஸ் (அடிப்படை விலை ரூ.2 கோடி)

இந்த ஆண்டுக்கான உலகக் கோப்யை ஆஸ்திரேலியா வெல்ல, அதை வழிநடத்திய கேப்டன் பாட் கம்மின்ஸ். ஐபிஎல் ஏலத்தில் அவரது ரேட் அதிகரிப்பதற்கு இந்த ஒரு தகுதியே போதும். ஆனால் இந்த தாகுதியுடன் ஆக்ரோஷமான பந்துவீச்சாளர், அதிரடியான பினிஷிங் பேட்ஸ்மேன் என எக்கச்சக்க தகுதிகளை கூடுதலாக வைத்திருக்கிறார் பாட் கம்மின்ஸ்.

தோனி எல்லா போட்டிகளிலும் ஆடுவாரா மாட்டாரா என்ற குழப்பத்தால் மாற்று யுக்தியாக ஒரு கேப்டனைத் தேடும் சிஎஸ்கேவின் ராடரில் பாட் கம்மின்ஸ் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. சிஎஸ்கே மட்டுமின்றி டெல்லி கேபிடல்ஸ், கேகேஆர் போன்ற அணிகளும் பாட் கம்மின்ஸுக்கு குறிவைப்பதால் அவரது ரேட் 10 கோடி ரூபாயைத் தாண்ட அதிக வாய்ப்புகள் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...