No menu items!

பருத்தி வீரன் சர்ச்சை The Real Complete Story

பருத்தி வீரன் சர்ச்சை The Real Complete Story

தமிழ் சினிமாவில் இப்படியொரு பிரச்சினை இதுவரை எழுந்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்லுமளவிற்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெடித்திருக்கிறது ‘பருத்திவீரன்’ சர்ச்சை.

அமீர் பற்றி தயாரிப்பாளர் ஞானவேல் கூறிய கருத்துகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமீருக்கு ஆதரவாக பல குரல்கள் எழுந்து கொண்டே இருக்க, எதிர்ப்புறம் பெரும் அமைதி நிலவிக்கொண்டிருக்கிறது.

உண்மையில் பருத்திவீரன் சர்ச்சையின் பின்னணி என்ன? அந்தப் பிரச்சினை முதல் முறையாக எழுந்த போது தனது குரலைப் பதிவு செய்த அமீர் சொன்னவை இந்த கட்டுரையில் இடம் பெறுகிறது.

’’’பருத்தி வீரன்’ ஞானவேல் ஆரம்பிச்ச படம். பணம் கொடுக்க முடியாம பாதியிலேயே விட்டுட்டு போயிட்டார். வேறு வழியில்லாம என் கையில இருந்து பணத்தைப் போட்டு படத்தை முடிச்சேன்.

படத்தை முடிக்கும்போது, ‘எனக்கு படம் வேணும்’னு சூர்யா கேட்டார். பருத்திவீரனுக்காக நான் செலவு பண்ணின தொகையை கொடுத்துட்டு படத்தை எடுத்துக்கலாம்னு சொன்னேன்.

சூர்யா இன்னோரு படமும் தொடங்கினதால ஃபைனான்ஸ் செட்டாகல. அதனால சூர்யா திரும்பவும் படத்தை என்கிட்ட கொடுத்துட்டார். ‘இல்ல ஜி. அவர் தப்பான ஆளாக இருக்கார். கணக்குவழக்கு எல்லாம் கொஞ்சம் தப்பாக இருக்கு. கம்பெனியை க்ளோஸ் பண்ணிடலாம்னு இருக்கோம்’னு சொன்னார்.

படத்தை என்கிட்டயே கொடுத்துட்டு ரிலீஸ் பண்ண சொன்னார். என்கிட்ட பணம் இல்லாததால, அவரே பணம் தர்றதா சொன்னார் சூர்யா. அப்ப அவருக்கு கல்யாண வேலைகள் நடந்திட்டு இருந்த நேரம். அந்த நேரங்கள்ல சூர்யா மிகவும் நேர்மையாக, உண்மையான மனத்தோடுதான் பழகிட்டு இருந்தார்.அதை மறக்கவே முடியாது.

ஆத்மார்த்த நட்பாக இருந்த நேரம் அது. எல்லாமே உள்ளத்துல இருந்து வெளிப்பட்ட வார்த்தைகளாகதான் இருந்துச்சு. அதனாலேயே எனக்கு ஒரு கோடி கொடுங்க. படத்தை ரிலீஸ் பண்ணிட்டு உங்க பணத்தை எடுத்து கொடுத்துடுறேன்னு சொன்னேன். உடனே என்னை அவரோட வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய் முப்பது லட்ச ரூபாய்க்கான செக்கை கொடுத்தார். அப்படிதான் ஆடியோ ரிலீஸ் ஃபங்கஷனை நடத்தினோம்.

இந்த விழாவுக்கு இந்த ஆளு வரவே இல்ல. நல்லவராக இருந்தா வந்திருக்கணுமே. அப்படி இல்லைன்னாலும் இவங்களாவது கூட்டிட்டு வந்திருக்கணுமே. ஆடியோ ரிலீஸ் முடிஞ்சதும் வியாபாரத்தை ஆரம்பிச்சோம்.

அப்பதான் தமிழ் சினிமாவுல இருக்குற முக்கியப் புள்ளியான அந்த கரும்புள்ளி அவர் வாங்கணுங்கிறதுக்காக என்.எஸ்.சி. வியாபாரத்தை பண்ணவிடாம கெடுத்துகிட்டே இருந்தார்.

படத்தோட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை முடிச்ச நேரத்துல எனக்கு நாற்பத்தஞ்சு லட்சம் தேவைப்பட்டுச்சு. புரொடக்‌ஷனை பார்த்துகிட்ட கஃபார் அண்ணன் சூர்யா தரப்புல பணம் தேவைன்னு கேட்டிருக்காரு. உண்மையில நான் கேட்க சொல்லல. அவராகதான் போய் கேட்டிருக்கார்.

நான் தான் பணம் கேட்குறேன் நினைச்சிட்டுதான் அவங்க கவுன்சிலில் புகார் கொடுத்தாங்க.

தொன்னூறு நாள் டப்பிங். ரெண்டேகால் லட்சம் அடி ஷூட் பண்ணியிருக்கேன். கடுமையான உழைப்பும் அதுக்கான பணமும் சேர்ந்துதான் இந்த அஞ்சு கோடியே இருபது லட்சம் ரூபாய்க்கான பட்ஜெட். சில இடங்கள்ல கொஞ்சம் வெட்டியாக செலவு பண்ணியிருப்பேன். அதை நான் மறுக்கவும் இல்ல.

அரசியல் ப்ரஷர் காரணமாக என் பெயர்ல இருந்த சென்சார் சர்டிஃபிகேட்டை ஞானவேல் ராஜா பேருக்கு மாத்தச் சொல்லி எனக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தாங்க. வேற வழியில்லாம எழுதிக் கொடுத்துட்டேன். அப்ப போட்ட ஒப்பந்தபடி, படம் வெளியானதும் என்னோட கணக்கு வழக்குகளையெல்லாம் தயாரிப்பாளர் கவுன்சிலில் கொடுத்துடணும். படம் ஓடினால், கணக்கு வழக்குகளை செக் பண்ணிட்டு அவங்க தரப்புல இருந்து எனக்கு பணம் கொடுப்பாங்கன்னு பேசி முடிவாச்சு. கொடுத்துட்டேன்.

படம் ஹிட். என்னோட பணத்தைக் கேட்டப்ப, கணக்கை எல்லாம் பார்த்தோம். அதுல சில வவுச்சர் டபுள் எண்ட்ரி ஆகியிருக்கு, அது இதுன்னு முப்பத்தியேழு லட்ச ரூபாயை தள்ளுபடி பண்ணிட்டாங்க. மீதி எண்பது லட்சத்தை 31-5-2007-ல் தயாரிப்பாளர் சங்கம் ‘அமீருக்கு எண்பது லட்சம் ரூபாய் ஞானவேல் ராஜா கொடுக்க வேண்டும்’னு ஒரு தீர்மானம் போட்டுச்சு. அது தயாரிப்பாளர் கவுன்சிலோட மினிட் புக்குல இன்னிக்கும் இருக்கு.

என் பணத்தைக் கேட்டா, ‘அங்கிள் ஊருக்குப் போயிருக்கார்’னு சிவகுமார் சார் பெயரைச் சொல்லியே ஏமாத்திட்டே இருந்தார். யார் தயாரிப்பாளர்னு பெயர் போட்டிருக்கோ அவங்ககிட்டதான் கேட்கணுங்கிறது என்னோட கணக்கு. இதனாலேயே நான் வேற யாரையும் கேட்கவே இல்ல.

எங்களுக்குள்ளே போட்ட ஒப்பந்தத்தின்படி எனக்கும், ஞானவேல் ராஜாவுக்கு இடையே இருக்குற பிரச்னை முடியற வரைக்கும் ‘பருத்திவீரன்’ படத்தோட சாட்டிலைட் உரிமையை யாருக்கும் விக்கக் கூடாது. மத்த மொழிகளுக்கு டப்பிங் பண்ணி வெளியிடக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருந்தோம்.

இதுக்கு பிறகுதான் ‘பருத்திவீரன்’ படத்தோட ரைட்ஸை கலைஞர் டிவிக்கு வித்துட்டாங்க. இதுலயும் நான் ஏமாந்துப் போயிட்டேன். விஷயம் கோர்ட்டுக்கு போச்சு. கோர்ட்டுல சூயாரிட்டி டாகுமெண்ட்ஸை கொடுத்தாங்க. அப்படியே சாட்டிலைட் ரைட்ஸை விக்கலன்னு சொல்றாங்க. இருபது லட்ச ரூபாய் மதிப்புள்ள டாக்குமெண்டை கொடுத்தாங்க. அதை கோர்ட் தள்ளுபடி பண்ணிடுச்சு. திரும்பவும் இருபது லட்ச ரூபாய் டாக்குமெண்டை கொடுத்தாங்க. இப்ப கோர்ட் இவங்க ரெண்டு பேரோட பிரச்னையில நீங்க என்ன பண்ணீங்கன்னு தயாரிப்பாளர் கவுன்சிலில் விளக்கம் கேட்குது. ஆனால் அதை இழுத்தடிச்சு, கவுன்சில் சார்புல ஒரு அஃபிடவிட்டை தாக்கல் பண்ணினாங்க. அந்த அஃபிடவிட்டில் எனக்கு என்ன தொகை கொடுக்கணுங்கிறதை போடாமல், கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டும் என்கிற ரீதியில தாக்கல் பண்ணிட்டாங்க.

கோர்ட் இந்த பிரச்சினை சம்பந்தமான விவரங்களைக் கேட்க, சரியான தகவல்களை இவங்க கொடுக்கவே இல்ல. தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலில் நிக்கலாம்னு நினைச்ச என்னை சிலர் பேசி பேசி சமாதானப்படுத்தி விலக வைச்சிட்டாங்க. அப்படி பண்ணியும் என் பிரச்னைக்கு முடிவே கிடைக்கல. பழையபடி ஏமாத்திட்டாங்க. இது எனக்கு வந்து சேரவேண்டிய எண்பது லட்ச ரூபாய் பிரச்னையில நடந்தது.

’பருத்திவீரன்’ படத்தோட டப்பிங் வேலைகள் ஆரம்பிச்சிடுச்சுங்கிறது எனக்கு ரெண்டு மாசம் முன்னாடியே தெரியும். உடனே கவுன்சிலுக்கும், சேம்பருக்கும் இது சம்பந்தமா நடவடிக்கை எடுக்கச் சொல்லி லெட்டர் கொடுத்தேன். ஒண்ணும் நடக்கல. காரணம் சம்பந்தப்பட்டவங்களோட பணபலம்.

எல்லோரும் சொல்ற ஒரு நொண்டி சாக்கு என்னன்னா, இவங்க கேஸ் கோர்ட்டுல இருக்குங்கிறதுதான். கோர்ட்ல இருக்குறது எனக்கு செட்டில் பண்ணவேண்டிய எண்பது லட்சம் சம்பந்தபட்டது.

இப்போ நான் கமிஷனர் ஆபிஸ்ல புகார் கொடுத்தது ‘பருத்திவீரன்’ படத்துக்கான தெலுங்கு டப்பிங் படம் எனக்கு தெரியாமலேயே வெளியானதுக்கும், எனக்கு தரவேண்டிய டப்பிங் படத்துக்கான உரிமையையும் கேட்டுத்தான்.

சுப்ரீம் கோர்ட் கூட, உங்களுக்கிடையேயான வழக்கு நிலுவையில இருந்தாலும் கூட நீங்கள் சமாதானமாக போக விரும்பினால் அதுக்கான முயற்சிகளை பண்ணலாம்னு தீர்ப்பே இருக்கு.

இது கொலை கேஸ் இல்லயே. பணத்துக்காக போட்ட கேஸ்தானே அப்படின்னா சங்கம் ஏன் தயாரிப்பாளர்களான எங்களை கூப்பிட்டு பிரச்னையை தீர்த்து வைக்கல? ஜெமினி லேப்ல ஒரு மாசத்துக்கு முன்னாடியே, புகார் கொடுத்தேன். எனக்குத் தெரியாமல் டப்பிங்குக்காக படத்தின் நெகட்டிவை கொடுக்கக்கூடாதுன்னு அதுல குறிப்பிட்டு இருந்தேன். என்ன காரணத்தினாலோ அவங்களும் எனக்கு தெரியாம நெகட்டிவை கொடுத்துட்டாங்க.

உலகத்துல உள்ள மொழிகள்ல எல்லாத்திலும் ‘பருத்தி வீரனை’ டப் பண்ணி வெளியிடுவாரா? அப்படீன்னா அந்த உரிமையை அவருக்கு கொடுத்தது யாரு? இல்ல யாரையும் கேட்காமல் தயாரிப்பாளரே படத்தை எந்த மொழியில வேணுமானாலும் டப் பண்ணி வெளியிடலாம்னு சட்டம் எதுவும் இருக்கா?

’பருத்தி வீரன்’ என் குழந்தை. அதுக்கான ‘இண்டெலக்க்சுவல் ப்ராபர்ட்டி’ ரைட்ஸ் எனக்கு கிடைக்கலலையே. இதுல பணம் மட்டுமே இல்ல. என்னுடைய உரிமை, தன்மானம் எல்லாமே அடங்கின விஷயம் இது. அதை எப்படி நான் விட்டுக் கொடுக்க முடியும். இதேபோல நாளைக்கே இன்னொரு படைப்பாளிக்கு இப்படியொரு கதி நேரலாம். அதுக்கு இது முன்னுதாரணம் ஆகக்கூடாது என்பதற்காகவே தொடர்ந்து சட்ட ரீதியாக போராடுறேன்.

பத்துகோடி ரூபாய்க்கு அந்தப் படம் போகும் என்றால் என்னுடைய ரைட்ஸூக்கு ரெண்டரைக் கோடி ரூபாய் வரை வரும். இதைக் கேட்டா கோர்ட்ல கேஸ் இருக்கு.. கோர்ட்ல கேஸ் இருக்குன்னு சொல்றாங்க. இதை நான் சொன்னா அமீர் கோபமாக பேசுறாருன்னு சொல்லிடுறாங்க.

பருத்திவீரன் தெலுங்குல ரிலீஸாகுறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி தயாரிப்பாளர் சங்கத்தோட முக்கிய நிர்வாகிகள்கிட்ட இப்படி விஷயம்னு சொல்றேன். இதோ பேசிட்டு கூப்பிடுறேன்னு சொன்னாங்க. ஆனால் யாரும் மறுபடி பேசவே இல்ல. லேபர் ஆபிஸர், ‘அமீருக்கு சேரவேண்டிய பணத்தை வாங்கிக் கொடுக்கல்லையா?’ கேட்டார். அதுக்கு உடனே ’நாங்க பேசி வாங்கிக் கொடுத்துறோம்’னு உத்திரவாதம் கொடுத்த பின்னாடியும் யாரும் அதைப் பத்தி பேசவே இல்ல. நீங்க யாருமே சம்பந்தபட்ட எங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு பேசவே இல்ல. உண்மையைத் தோலுரிச்சு காட்டாமவிட மாட்டேன்.

சமூகத்துல கடந்த அஞ்சு வருஷமாக சமூக பிரச்னைகள்ல போராடுகிற எனக்கே இவ்வளவு பிரச்னைன்னா, சராசரி ஆளு ஒருத்தர் மாட்டினார் அவரோட கதி என்னன்னு நினைச்சுப் பாருங்க. என்கிட்ட உள்ள டாக்குமெண்டையும் பாருங்க, அவர்கிட்ட உள்ளதையும் பாருங்க. நான் போர்ஜரி பண்ணின டாக்குமெண்ட் வைச்சிருந்தா, தம்பி இது தப்பு. ஒண்ணும் பண்ண முடியாது என்றாவது சொல்லணும்ல. ஆனால் பிரச்னையை பேசி தீர்க்க உட்காரவே யாரும் தயாராக இல்லைன்னா அவங்களோட நோக்கம் என்ன?

எண்பது லட்சம் என்பதை விட அது என்னுடைய உரிமை. மானம். மரியாதை எல்லாமும் அடங்கியிருக்கு. அப்படியே நான் பண்ணினது தப்புன்னா சொல்லுங்க, தமிழ் நாட்டுல இருக்கிற எல்லா மீடியாவையும் கூப்பிட்டு அவங்க முன்னாடி நான் பண்ணினது எல்லாமே தப்புன்னு சொல்லிட்டு கிளம்ப தயாராக இருக்கேன். என் பக்கம் உண்மை இல்லைன்னா ஆறு வருஷமா இந்த பிரச்னையை பிடிச்சிட்டு தொங்கிட்டு இருப்பேனா? ’யோகி’ படத்துல எனக்கு ரெண்டு கோடியே எண்பது லட்சம் நஷ்டம். நான் இப்பவும் வாழல்லையா?

பருத்திவீரனோட தெலுங்கு உரிமையில எனக்கு எந்த உரிமையும் இல்லைன்னு அவர் சொன்னார்னா, அவருக்கு அந்த உரிமையை யார் கொடுத்தாங்க? என்னோட இண்டலெக்ச்சுவல் ப்ராபர்ட்டியில அவருக்கு யார் உரிமையைக் கொடுத்தாங்க.? அதுக்கு டாக்குமெண்ட் எதுவும் வைச்சிருக்காரா? இதை ஏன் யார் கேட்க மாட்டேங்கிறாங்க?

என்கிட்ட பணம் இல்ல. நேர்மை இருக்கு. தைரியம் இருக்கு. கடைசி வரைக்கும் போராடுவேன்.

சேட்டிலைட் ரைட்ஸை விக்க மாட்டேன்னு அவர் எழுதிக் கொடுத்தது என்கிட்ட இருக்கு. அதை ஏன் யார் கேட்க மாட்டேங்கிறீங்க. கட்டுப்பாடு இருக்கணும்னுதானே சங்கம் இருக்கு. அதுக்குள்ளேயே இப்படி கட்டுப்பாடு இல்லாம இருந்தா என்ன அர்த்தம்?’’

பின் குறிப்பு : பருத்திவீரன் சர்ச்சை முதன்முதலில் வெடித்த போது இயக்குநர் அமீர் தனது மனக்குமுறலைப் பகிர்ந்திருந்தார். அவரது நேர்க்காணலில் இருந்து சர்ச்சை குறித்து பேசியவை இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...