No menu items!

ஐபிஎல் 2022 – இந்தியாவுக்கு தந்த நட்சத்திரங்கள்

ஐபிஎல் 2022 – இந்தியாவுக்கு தந்த நட்சத்திரங்கள்

இந்திய கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் மிகப்பெரிய அளவில் சேவை செய்துள்ளது. ஒருபக்கம் கோடிக்கணக்கில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வருவாயைப் பெருக்கிய ஐபிஎல், மறுபுறம் ஒவ்வொரு ஆண்டும் திறமையான பல வீரர்களை இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த சில நட்சத்திரங்களைத் தெரிந்துகொள்வோம்:

உம்ரான் மாலிக்:

கடந்த ஐபிஎல் போட்டியிலேயே ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தாலும், இந்திய கிரிக்கெட்டில் உம்ரான் மாலிக் ஸ்திரமாய் தடம் பதித்தது இந்த ஐபிஎல் தொடரில்தான். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உம்ரான் மாலிக், கிரிக்கெட் பந்தை பயன்படுத்தி பந்துவீசத் தொடங்கியதே தனது 17-வது வயதில்தான். இந்த சூழலில் மிகக்குறுகிய காலத்தில் கிரிக்கெட்டில் முன்னேறிய உம்ரான் மாலிக், இந்த ஐபிஎல்லில் 155 கிலோமீட்டாருக்கும் அதிக வேகத்தில் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.

150 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச மாட்டார்கள் என்ற மாயையை இதன்மூலம் உடைத்த உம்ரான் மாலிக், இந்த ஐபிஎல்லின் லீக் போட்டிகளில் மட்டும் 22 விக்கெட்களை வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயினால் பட்டை தீட்டப்பட்ட உம்ரான் மாலிக், இப்போது இந்திய அணிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் ஒரு சாதாரண பழ வியாபாரியின் மகனாகப் பிறந்த இவர், கடுமையாக உழைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார்.

மோஷின் கான்:

உம்ரான் மாலிக்குக்கு அடுத்ததாக இந்த ஐபிஎல் தொடரில் பலரது கவனத்தையும் ஈர்த்த மற்றொரு இளம் வேகப்பந்து வீச்சாளர் மோஷின் கான். கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் வசம் இருந்த மோஷின் கானை இந்த ஆண்டு வெறும் 20 லட்சம் ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியது. மும்பை அணியால் கடந்த ஆண்டில் சரியாக பயன்படுத்தப்படாத மோஷின் கான் மீது இந்த ஐபிஎல்லின் ஆரம்பத்தில் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

ஆனால் ஐபிஎல் தொடர் ஆரம்பித்த சில போட்டிகளிலேயே லக்னோ அணியின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிப்போனார் மோஷின் கான்.

லக்னோ அணிக்காக 8 லீக் ஆட்டங்களில் ஆடிய மோஷின் கான், அதில் 13 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

விக்கெட்களை எடுப்பதுடன், எதிரணி வீரர்களுக்கு ரன்களைக் கொடுக்காமல் கட்டுப்படுத்துவதிலும் மோஷின் கான் முக்கிய பங்காற்றி வருகிறார். ஒவ்வொரு ஓவரிலும் 6 ரன்களுக்கும் குறைவாக (5.93) விட்டுக் கொடுத்துள்ளார் என்பது மோஷின் கானின் சிறப்பான பந்துவீச்சுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. இதன்மூலம் இந்தத் தொடரில் மிகக் குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக மோஷின் கான் இருக்கிறார். அவரது இந்த பந்துவீச்சு, இந்திய அணியின் எதிர்கால திட்டங்களில் அவரது பெயரை இடம்பெற வைத்துள்ளது.

ஜிதேஷ் சர்மா:

இந்த ஐபிஎல்லில் மிக குறைவாக, அடிப்படை விலைக்கு ஏலம் போனாலும், மிகப்பெரிய அளவில் சாதித்த மற்றொரு வீரர் ஜிதேஷ் சர்மா. இந்த ஆண்டுக்கான ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, வெறும் 20 லட்ச ரூபாய்க்குத்தான் ஜிதேஷ் சர்மாவை ஏலத்தில் எடுத்தது. ஆனால் அந்த அணியின் அதிரடி வீரர்களான லிவிங்ஸ்டன், பேர்ஸ்டோ, ஷிகர் தவான், மயங்க் அகர்வால், ஒடியன் ஸ்மித் ஆகியோருக்கு இணையாக 12 போட்டிகளில் 234 ரன்களைக் குவித்தார்.

பொதுவாக பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர்கள் போன்றோர்தான் ஐபிஎல் மூலம் இந்தியாவுக்கு கிடைப்பார்கள். ஆனால் ஜிதேஷ் சர்மா ஒரு துடிப்பான விக்கெட் கீப்பராக இந்த ஐபிஎல் மூலம் இந்திய அணிக்கு கிடைத்துள்ளார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் இத்தொடரில் மட்டும் 9 கேட்ச்கள் மற்றும் 2 ஸ்டம்பிங்க்குகளை செய்துள்ளார். இது தேர்வாளர்கள் உட்பட பலரையும் கவர்ந்துள்ளது. இந்தியாவின் நீலநிற ஜெர்சியில் அவர் ஆடும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.

“இந்த சீசனில் இத்தனை சிறப்பாக ஆடுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனது இந்த வெற்றிகளுக்கு, பேட்டிங் நுணுக்கத்தை எனக்கு கற்றுக்கொடுத்த வீரேந்தர் சேவாக்கும் ஒரு முக்கிய காரணம்” என்று அடக்கத்துடன் சொல்கிறார் ஜிதேஷ் சர்மா.

அபிஷேக் சர்மா:

இந்த ஐபிஎல்லில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த மற்றொரு வீரர் அபிஷேக் சர்மா. பஞ்சாப்பை சேர்ந்த 21 வயது வீரரான இவர், இந்த ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக ஆடினார்.

அந்த அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய அபிஷேக் சர்மா, 14 போட்டிகளில் 426 ரன்களைக் குவித்தார். இதில் 2 அரை சதங்களும் அடங்கும்.

வெறும் அதிரடி ஆட்டம் மட்டுமின்றி நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனிடம் இருந்து பொறுமையான பேட்டிங்கையும் கற்றுக்கொண்டுள்ள அபிஷேக் சர்மா, எதிர்காலத்தில் திராவிட் போல் சிறந்த வீரராக உருவாக வாய்ப்புகள் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...