No menu items!

Weekend ott – வார இறுதியில் என்ன படம் பார்க்கலாம்?

Weekend ott – வார இறுதியில் என்ன படம் பார்க்கலாம்?

ஜெயிலர் (தமிழ்) – அமேசான் ப்ரைம்

தியேட்டர்களில் கடந்த மாதம் வெளியாகி வசூலில் அசுர சாதனை படைத்த ரஜினிகாந்த்தின் ஜெயிலர் திரைப்படம் இப்போது அமேசான் ப்ரைம் ஓடியில் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் ஒய்வுப் பெற்ற உளவு காவல்துறை அதிகாரி. அவரது மகன் வசந்த் ரவியும் காவல்துறையில் நேர்மையான அதிகாரியாக இருக்கிறார். அவரது நேர்மையைப் பிடிக்காமல் வில்லனின் ஆட்கள் அவரை கொன்றுவிடுகிறார்கள். மகனின் கொலைக்கு பழிவாங்க தனது பழைய கூட்டாளிகளுடன் கைகோர்க்கிறார் ரஜினி. அதுவரை அமைதியாக இருந்தவர், அதிரடி ஆக்‌ஷனில் விஸ்வரூபம் எடுக்கிறார். அவர் எப்படி பழிவாங்கினார் என்பதுதான் கதை.

ஆக்‌ஷன், காமெடி, செண்டிமெண்ட் எல்லாம் சரிவிகிதமாக கலந்த ஜெயிலர் திரைப்படம் நிச்சயம் வீக் எண்ட் ட்ரீட்டாக இருக்கும்.


டர்லா ( Tarla – இந்தி) – ஜீ5

இந்தியாவின் முன்னணி சமையல் கலை வல்லுநராக விளங்கிய டர்லா தலாலின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஜீ5 ஓடிடியில் வெளியாகி இருக்கும் படம் டர்லா.

வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண் டர்லா. ஆனால் தன்னால் எந்த துறையில் சாதிக்க முடியும் என்ற நிச்சயம் இல்லாதவள். நன்றாக சமைக்கத் தெரிந்த அவள், வேறு எந்த துறையிலும் கெட்டிக்காரி இல்லை. அதனால் ஒரு கட்டத்தில் கனவுகளுக்கு மூட்டை கட்டிவிட்டு திருமணம் செய்துகொள்கிறாள். திருமணமாகி 12 ஆண்டுகள் முடிந்த நிலையில் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு டர்லா சமையல் கற்றுக்கொடுக்க, அவள் வாழ்க்கையில் மாற்றம் வருகிறது.

பல பெண்கள் டர்லாவிடம் சமையல் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். இந்த நேரம் பார்த்து கணவருக்கு வேலை போக, சமையல் குறிப்புகளை புத்தகமாக அச்சடித்து விற்றால் என்ன என்ற யோசனை வருகிறது. அந்த முயற்சியில் டர்லா வெற்றி பெற்றாளா என்பதுதான் கதை.


ஆதிபுருஷ் (Adipurush – தெலுங்கு) – நெட்பிளிக்ஸ்

ராமாயணத்தை அடிப்படையாக்க் கொண்டு தெலுங்கில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது. பிரபாஸை நாயகனாக கொண்டு பெரும் பொருட்செலவில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியை தழுவியது. இந்த சூழலில் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

ராமாயணத்தின் கதையிலிருந்து வெகுஜன சினிமா ரசனைக்குத் தோதான பகுதியை எடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஓம் ராவத். ஆனால் படத்தில் நடிகர்களையும், கதையையும்விட கிராபிக்ஸ் காட்சிகளை இயக்குநர் அதிகம் நம்பியிருப்பதால் சலிப்பு தட்டுகிறது.

பெரியவர்களுக்கு போர் அடித்தாலும், வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இந்த ராம சரிதத்தை போட்டுக் காட்டலாம்.


நல்ல நிலாவுள்ள ராத்திரி (Nalla Nilavulla Rathri – மலையாளம்) – மனோரமா மேக்ஸ்

மர்பி தேவஸி இயக்கத்தில் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் வெளியாகி இருக்கும் படம் நல்ல நிலாவுள்ள ராத்திரி.

நடுத்தர வயதைக் கடந்த நெருக்கமான 5 நண்பர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகாவில் ஒரு நிலத்தை வாங்குவது பற்றி பேசுவதற்காக செல்கிறார்கள். காட்டுப்பகுதியில் உள்ள அந்த நிலத்துக்கு நடுவில் அமைந்திருக்கும் மாளிகையில் இரவில் தங்குகிறார்கள். மது விருந்துடன் உற்சாகமாக தொடங்கும் அந்த இரவு, மெல்ல மெல்ல திகிலான இரவாக மாறுகிறது. 5 நண்பர்களும் பரஸ்பரம் ஒருவர் மீது வன்மம் கொண்டவர்களாக இருப்பது மது விருந்துக்கு பின் தெரியவருகிறது. ஒருவரை ஒருவர் கொல்லும் அளவுக்கு அவர்களுக்குள் கோபம் இருக்க, அந்த இரவில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இந்த படத்தில் நாயகி இல்லை, பிரபலமான நட்சத்திரங்கள் இல்லை இருந்தாலும் கடைசி வரை பரபரப்பைக் கொண்ட கதை பட்த்துக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.

முதல் அரை மணி நேரம் கொஞ்சம் போர் அடித்தாலும் அதன் பிறகு கதை விறுவிறுப்பாக போகிறது. த்ரில்லர் கதைகளை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...