No menu items!

இந்தியா – பாகிஸ்தான் – மீண்டும் கிரிக்கெட் யுத்தம்

இந்தியா – பாகிஸ்தான் – மீண்டும் கிரிக்கெட் யுத்தம்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும்போது வழக்கமாக மைதானத்தில்தான் அனல் பறக்கும். ஆனால் இந்த முறை போட்டிக்கு முன்னதாகவே அனல் பறக்கிறது.

“2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடந்தால் அதில் பங்கேற்க இந்திய அணியை அனுப்ப மாட்டோம்” என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதுதான் நெருப்பின் ஆரம்பம்.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும், ஜெய் ஷா மீதும், இந்திய அணி மீதும் அனல் கக்கி வருகிறார்கள். ஆசியக் கோப்பைக்கு இந்தியா செல்லாவிட்டால், இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பாகிஸ்தான் அணியை அனுப்பக் கூடாது” என்று முஷ்டியை உயர்த்துகிறார்கள். இதனால் இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே இப்போதே மோதல் நெருப்பு பற்றிக்கொண்டுள்ளது.

ஒருபுறம் அந்த தீ பற்றிக்கொண்டு இருக்க, அதற்கும் தங்களும் சம்பந்தம் இல்லை என்ற தோரணையில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள் இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள். ஒருபுறம் இந்தியாவின் விராட் கோலியும், பாகிஸ்தானின் பாபர் ஆசமும் பக்கத்துப் பக்கத்து நெட்களில் பேசிக்கொண்டே பேட்டிங் பயிற்சி செய்கின்றனர். மறுபுறம் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரீடிக்கு பந்துவீச்சு நுணுக்கங்களை சொல்லிக்கொடுக்கிறார் அனுபவ பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார்.

இந்தச் சூழலில் உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி வரும் 23-ம் தேதி மெல்பர்ன் நகரில் நடக்கவுள்ளது. ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மெல்பர்ன் நகரில் போட்டி நடக்கும் நாளன்று பலத்த மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த போட்டிக்கு முக்கிய தடையாக மழை உள்ளது. இந்த மழை எச்சரிக்கையையும் மீறி ஆட்டம் நடக்கும் பட்சத்தில் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தானிடம் ஒரு முறைகூட இந்தியா தோற்றதில்லை என்ற வரலாறு கடந்த டி20 உலகக் கோப்பை வரை இருந்தது. ஆனால் கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் தோற்றதைத் தொடர்ந்து அந்த சாதனைப் பயணம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானை மீண்டும் வென்று தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் ஆவலில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

இந்த தொடரைப் பொறுத்தவரை இந்தியாவின் முக்கிய பலமே பேட்டிங்தான். அதிலும் கடந்த 3 ஆண்டுகளாக நன்றாக ஆடாமல் இருந்த கோலி மீண்டும் ஃபார்முக்கு வந்த நிலையில் பேட்டிங் ஆர்டர் வலுவடைந்துள்ளது. கோலிக்கு துணையாக இந்தியா நம்பியிருக்கும் மற்றொரு வீரர் சூர்யகுமார் யாதவ். இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமை சூர்யகுமார் யாதவுக்கு உண்டு. அதேபோல் டிவில்லியர்ஸப் போல் 360 டிகிரியிலும் பேட்டை சுழற்றும் லாவகமும் அவருக்கு உண்டு. இது இந்திய அணிக்கு கைகொடுக்கும்.

கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் வலுவாக இருக்கும் நிலையில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹர்த்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோரும் தோள்கொடுத்தால் இந்திய அணியால் அதிக ரன்களைக் குவிக்க முடியும்.

பேட்டிங்கில் வலுவாக உள்ள இந்திய அணி பந்துவீச்சில்தான் பலவீனமாக உள்ளது. சில காலமாகவே கடைசி ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவது இந்திய பந்துவீச்சாளர்களின் வழக்கமாகி உள்ளது. இது தொடர்ந்தால் ஆஸ்திரேலியாவில் தேறுவது கடினம். ஏற்கெனவே பும்ரா காயத்தால் வெளியேறிய நிலையில் புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ஹர்ஷல் படேல் ஆகியோர் அதை ஈடுகட்டுவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்திய அணியைப் பொறுத்தவரை வலுவான ஒரு இடதுகை பேட்ஸ்மேனை பேட்டிங் வரிசையின் நடுவில் இறக்கினால் நல்லது என்று கருத்து கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இப்போதைய நிலையில் ரிஷப் பந்த் மட்டுமே இந்த தகுதியுடன் இருக்கும் இடக்கை வீரர். சச்சினின் கருத்தை ஏற்று அவரை ஆடவைப்பார்களா அல்லது தினேஷ் கார்த்திக்கையே பயன்படுத்துவார்களா என்பது ரோஹித்துக்கும் திராவிட்டுக்கும்தான் வெளிச்சம்.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சில் அது வலுவாக இருக்கிறது. குறிப்பாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான அப்ரிடியைப் பார்த்து சர்வதேச பேட்ஸ்மேன்கள் பலரும் பயப்படுகிறார்கள். ஆனால் பேட்டிங்கில்தான் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வலு இல்லை. பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஃபகர் ஜமான் ஆகியோரையே அந்த அணி பெரிதும் சார்ந்துள்ளது. இந்த முதல் 3 விக்கெட்களையும் எடுத்துவிட்டால் வெற்றி இந்தியாவின் பக்கம்.

நம் வீரர்கள் செய்வார்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...