No menu items!

முட்டி மோதி போராடினேன் – செவாலியர் விருது பெறும் அருணா சாய்ராம்

முட்டி மோதி போராடினேன் – செவாலியர் விருது பெறும் அருணா சாய்ராம்

நான் முதன்முதல்ல பிரான்ஸ்ல கச்சேரி பண்ணபோது என்னோட ரசிகர்கள் கூட்டம் எவ்வளவு தெரியுமா? 30 பேர்! ‘சேம்பர் கான்சர்ட்’ என்பார்களே அப்படி… பக்க வாத்தியமெல்லாம் கிடையாது. தம்புராவோட பாடறேன். நம்ம சங்கீதத்தை ரசிப்பார்களா… மாட்டார்களா… தெரியாது. கண்ணை கட்டி காட்டில் விட்ட கதைதான்.

பாரிஸில் முப்பது வருஷம் முன்னாடி நடந்த கதை இது. இன்னிக்கு அவர்கள் அரசாங்கத்திடமே நாட்டின் உயர்ந்த விருது பெறுகிறேன்! ஒரு நிமிஷம் சீரடி சாய்பாபாவையும் மகா பெரியவரையும் நினைச்சுக்கிறேன்.” சொல்லும்போதே அவரது கண்கள் சற்று ஈரமாகிறது.

பிரான்ஸ் அரசின் உயர்ந்த ‘செவாலியர்’ விருதை பெற்றுள்ள கர்நாடக சங்கீத பாடகி அருணாவை அவரது சென்னை இல்லத்தில் ‘வாவ் தமிழா’ டாட் காமிற்காக சந்தித்தோம்! உற்சாகத்துடன் உண்ர்வுபூர்வமாகவும் பேசினார். ஒரு பக்கம் கைபேசி சிணுங்கிக்கொண்டே இருந்தது.

“என்னை தொடர்புகொண்டு அந்த நாட்டு அதிகாரிகள் விருது பற்றி சொன்னபோது முதலில் எனக்கு ஏற்பட்டது நம்ப முடியாத திகைப்பு! உண்மையா… என்ற குழப்பம். ஆச்சர்யம்! இன்னொரு நாட்டின் அங்கீகாரம் நமக்கு கிடைக்கிறது என்கிறபோது சொல்ல முடியாத சிலிர்ப்பு எனக்கு.

வாழ்க்கையில் என்னிக்காவது ஒரு நாள் விருதுகள் கிடைக்கும் என்று நம்பறது மனித இயல்பு. அது கிடைத்துவிட்டது என்கிற தருணம் இருக்கே…. அது ரொம்ப ஸ்பெஷல்! நாம இவ்வளவு நாளா ஊர் ஊராய் போய் பாடறோம். கை தட்டு வாங்கறோம். அதையும் சிலர் கவனிக்கிறார்கள் என்பது இதமான அதிர்ச்சி தரும் விஷயமல்லவா. மகிழ்ச்சி ஒரு பக்கம் என்றால், கடமையும் கூடவே சேர்ந்து வருகிறது. இன்னும் உழைக்கணும்.

சிலருக்கு வெற்றி சுலபத்தில் வந்துவிடுகிறது. என் கதை வேற. முட்டி மோதி மும்பைக்கும் சென்னைக்குமா அலைந்திருக்கேன். அதுவும் ஒரு வருஷமா இரண்டு வருஷமா… இன்னொரு பக்கம் கணவர், குழந்தைகள் படிப்பு முக்கியமில்லையா! ஆனால், ஒரு தடவைகூட என் தன்னம்பிக்கையை நான் இழந்துவிடவில்லை. என் போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரமா நினைச்சு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்…

முன்பு ‘பத்மஸ்ரீ’, ‘சங்கீத கலாநிதி’ உட்பட பல உயர்ந்த விருதுகள் வந்தன. இப்போது ‘செவாலியர்’….  ஆனால், இவை எல்லாத்துக்கும் முன்பு ரசிக பெருமக்களின் அங்கீகாரம் எனக்கு பெருமளவில் கிடைத்துவிட்டது.  மக்கள் அப்படி ஒரு அன்பை கொட்டுகிறார்கள்.  இது எவ்வளவு ஒரு பெரிய விஷயம்.  கச்சேரியில் வந்து உட்காரும் போது எதிரேயிருக்கும் ஆயிரக்கணக்கான முகங்களை பார்த்து  மனம் நெகிழ்ந்துவிடும்” என்றபோது வாழ்த்து சொல்ல கைபேசி விடாமல் அழைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...