தமிழின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரும் ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவருமான தங்கர்பச்சான், ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இது.
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்துல நான்கு இயக்குநர்களை நடிக்க வைச்சிருக்கீங்க. பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.வி. உதயகுமார், கவுதம் வாசுதேவ் மேனன் – நான்கு பேருமே நான்கு விதமான படங்களை எடுப்பவர்கள். இவர்கள் கதையை கேட்டுவிட்டு என்ன சொன்னார்கள்?
எல்லோருக்குமே ரொம்ப பிடிச்சிருந்திச்சி. முதல்ல பாரதிராஜா அண்ணன்டதான் சொன்னேன். நீங்கதாண்ணே காதாநாயகன். 80 சதவிகிதம் நீங்கதான் வர்றீங்கன்னு சொன்னேன். கேட்டுட்டு ரொம்ப உற்சாகமாயிட்டாரு. எல்லோருட்டயும் சொல்லியிருக்கார்.
பாரதிராஜா அண்ணன் என்னிடம் சொன்னது இது: ‘நான் நடிக்கத்தான் முதல்ல சென்னைக்கு வந்தேன். அப்புறம் எனக்கு தெரியாத ஒரு துறையில இறக்கி விட்டுட்டாங்க. அதுல வெற்றி பெற்றுட்டேன். முதல்ல இயக்கம்னாலே என்னன்னு எனக்கு தெரியாது; இப்ப அதுலயே பேர் வாங்கிட்டேன். கடைசி காலத்துல நடிக்கணும்னு இப்படியெல்லாம் வாய்ப்புகள் வருது. படத்தை பார்க்க ஆவலா இருக்கேன்’ அப்படின்னார்.
இப்படியொரு பாத்திரத்தை இவ்வளவு சிறப்பா அவரால மட்டும்தான் செய்ய முடியும். உண்மையிலயே, இந்த 83 வயசுல அவருடைய ஆர்வம் ஆச்சர்யமாத்தான் இருக்கு. அவர ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். இன்னமும் திட்டிட்டேதான் இருப்பாரு. ஆனால், இந்த கஷ்டங்கள் எல்லாம் எனக்காகவா, படைப்புக்காகத்தானே. ஒரு இயக்குநரா அவருக்கும் அது தெரியும்.
கெளதம் வாசுதேவ் மேனனும் கதைய கேட்டுட்டு ரொம்ப உணர்ச்சி வசமாயிட்டார். எல்லா படத்துலயும் அவர் ஒரு எதிர்மறையான பாத்திரம்தானே செய்றார். கெளதம்னா வில்லன்னு ஆயிடிச்சி. இதுல அப்படி இல்ல. முழுமையா ஒரு உணர்ச்சிகரமான, ஒரு மகனா, ஒரு தந்தையின் பிள்ளையா, நிச்சயம் எல்லாரையும் கண் கலங்க வச்சிருவாரு. ஏன்னா, எல்லா வீட்டுலயும் தந்தைக்கு ஒரு மகன் இப்படி இருக்கான்.
கெளதம் இந்த படத்துல அவ்வளவு ஈடுபாடாயிட்டார். நடிச்சோம் போனோம்னு இல்லாம தினமும் என்னிடம் பேசிருவார். அவரும் அவர் எடிட்டர் ஆண்டனியும் சேர்ந்து தனியா ஒரு டிரைலர் தயார் பண்றாங்க. அவர் இவ்வளவு ஈடுபாடு காட்ட காரணம், அவருக்கும் அவர் அப்பாவுக்குமான ஒரு பிணைப்பு இருக்கும்னு நெனைக்கிறேன்.
எஸ்.ஏ. சந்திரசேகர் அண்ணன் ஒரு ஐஏஎஸ்ஸா வர்றார். பாரதிராஜா அண்ணன் பாத்திரத்துக்கு ஏற்ற ஒரு பாத்திரம்; நீங்கதான் செய்யணும்னு சொன்னதும் மகிழ்ச்சியா வந்திட்டார். பொதுவா வயசாயிட்டா ஞாபக சக்தி குறைஞ்சி போயிரும்னு சொல்வாங்க. ஆனா, அது அவர்ட்ட இல்ல. ஒரு மாணவன் தேர்வுக்கு தயாராகி போற மாதிரி வருவாரு. அவர மாதிரியான ஆட்களை இனி வரும் தலைமுறைகள்ல பார்ப்பது எல்லாம் அபூர்வம்.
ஆர்.வி. உதயகுமாருக்கு ஒரு சிறிய பாத்திரம்தான். அண்ணன் என்னுடன் படிச்சவரு. என்னடா என்ன விட்டுட்டியே என கேட்டுட்டே இருப்பாரு. அதனால அவரையும் கூப்பிட்டேன்.
ஒரு இயக்குநராக இந்த நான்கு இயக்குநர்களை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?
இயக்குநர்கள்தான் சிறந்த நடிகர்கள். எப்படி நடிக்கணும்னு அவங்களுக்கு சொல்லிக் கொடுக்க அவசியமே இல்ல. மேலும், நான் திரைக்கதையிலயே ஒரு நடிகர் எப்படி பார்க்கணும், எப்படி உட்காரணும், எப்படி காலை அசைக்கணும்னு எல்லாத்தையும் எழுதிருவேன். காற்றின் திசை முதற்கொண்டு நான் எழுதியிருப்பேன். அதனால அவங்க அதை புரிஞ்சிகிட்டு சரியா செஞ்சிருவாங்க.
உலகளவில் நிறைய இயக்குநர்கள் ரொம்ப முன்னாலயே நடிக்க தொடங்கிட்டாங்க. ‘சினிமா பாரடைசோ’ இயக்குநர் ஜியுசெப்பி டோர்னேடோரின் ஒரு படத்துல பிரபல இயக்குநர் ரோமன் போலன்ஸ்கிதான் கதாநாயகன். ரஜினிகாந்த் மாதிரி பிரான்ஸ் சினிமால முன்னணியில இருக்கும் நடிகரும் அதுல நடிச்சிருக்கார். பாக்யராஜ் கதை தனி. அவரை விட்டுட்டு பார்த்தா, தமிழ்ல இது மாதிரி இயக்குநர்கள நடிக்க வச்சது முதல்ல ‘சொல்ல மறந்த கதை’தான். அதுக்கு பிறகுதான் எல்லோருமே நடிக்க ஆரம்பிச்சாங்க. மிஷ்கின எல்லாம் நான் நடிக்கச் சொன்னேன். ‘பள்ளிக்கூடம்’ படம் தொடங்க நாலு நாளு இருக்கும்போது ஆளு ஓடிப் போயிட்டான். தேடுனோம், எங்க போயி மறைச்சிட்டான்னு தெரியல. ‘பள்ளிக்கூடம்’ படத்துல கெளதமையும் நடிக்க கூப்பிட்டேன்.
உங்கள் இயக்கத்தில் அவர்களது தலையீடு இருந்ததா?
சொன்னதே இல்ல. பாரதிராஜா அண்ணன் எவ்வளவு பெரிய இயக்குநரு. ஒரு இடத்துலகூட சொன்னது இல்ல. கெளதம், டயலாக் திரும்ப வர்றது மாறி இருக்கே அப்படின்னார். வழக்கமா நாம பேசும்போது எத்தனை முறை சொன்னதையே திரும்ப சொல்றோம். அதுதான் அப்படின்னு நான் விளக்கி சொன்னதும் புரிஞ்சிகிட்டாரு. வாழ்க்கையில அப்படி இல்லயே. ஒருவன் வழவழன்னு பேசிகிட்டே இருப்பான்; ஒருவன் பேசாமலே இருப்பான். சினிமால மட்டும் எல்லோரும் அளவா பேசுறாங்க. அவர சிறந்த இயக்குநர்ங்குறான். எல்லோரும் குறைவா வசனம் பேசுறது போலியான படம்.