No menu items!

ஏற்றுமதியாகும் இலங்கை குரங்குகள் – சீனா சித்திரவதைக்கா?

ஏற்றுமதியாகும் இலங்கை குரங்குகள் – சீனா சித்திரவதைக்கா?

இலங்கைக்கு இப்போது இன்னொரு சிக்கல். சுமார் ஒரு லட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய இலங்கை அரசு திட்டமிட, அதற்கு எதிராக களத்தில் குதித்திருக்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். 

நம் ஊர் தெருநாய்கள்  போல் இலங்கையில் தெருவுக்கு தெரு குரங்குகள் அதிகம்.  toque macaques வகை  குரங்குகள் இலங்கையில் ஏராளமாய்  இருக்கின்றன. வனதவிலுவா, அனாமதுவா, அனுராதபுரா ஆகிய  மாவட்டங்களில்….ஆயிரம் இரண்டாயிரம் அல்ல…. சுமார் 30 லட்சம்  குரங்குகள் இருப்பதாக இலங்கை அரசு புள்ளிவிவரங்களுடன் சொல்லுகிறது.  இத்தனை லட்சம் குரங்குகள் இருந்தால் எப்படி சமாளிக்க முடியும்? வீட்டுக்குள் வந்து பொருட்களை எடுப்பது, விவசாய நிலத்தில் பயிர்களை அழிப்பது என ஏராளமான புகார்கள் இந்த குரங்குகளின் மேல் இருக்கின்றன.

இனிமேலும் குரங்குகளை சமாளிக்க முடியாது என்பதால் இந்தக் குரங்குகளில் ஒரு லட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்திருக்கிறது.

இந்த வகை குரங்குகள் மனிதர்களின் பல அம்சங்களுடன் ஒத்துப் போவதால் மருத்துவம் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் பரிசோதனைகளுக்கு ஆராய்ச்சி நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் குரங்குகளுக்கான தேவை இந்த நிறுவனங்களுக்கு அதிகம்.

சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம்தான் குரங்களை இலங்கையிலிருந்து இறக்குமதி செய்கிறது. முதல் கட்டமாக ஒரு லட்சம் குரங்குகளை இலங்கையில் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்காக பெரிய தொகை ஒன்றையும் இலங்கை அரசுக்கு கொடுப்பதாக முடிவாகியிருக்கிறது.

பொருளாதார மந்த நிலையாலும், குரங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் புலம்பலாலும் தவித்துக் கொண்டிருந்த இலங்கை அரசுக்கு சீன நிறுவனத்தின் இந்த டீல்  பிடித்துப்போக, உடனே குரங்குகளை பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

சில நாட்களுக்கு முன் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் விவாசயத்துறை அமைச்சர் மஹிந்தா அமரவீரா, “சீனாவைச் சேர்ந்த மிருகங்களை இனப்பெருக்கம் செய்யும் நிறுவனம் ஒன்று இலங்கையில் இருந்து குரங்குகளை வாங்க விரும்புகிறது. அதனால் விவசாயப் பயிர்களை அழிக்கும் குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது பற்றி யோசிக்கிறோம்” என்று கூறியிருந்தார்.  

இந்த செய்தி வெளியானதும்  இலங்கையின் விலங்குகள் நல ஆர்வலர்கள் கொதித்துப் போய்விட்டார்கள். “இலங்கை அரசு சொல்வதைப்போல் 30 லட்சம் குரங்குகளெல்லாம் இங்கே இல்லை. வெறும் 3 லட்சம் குரங்குகள்தான் இருக்கின்றன. அதுவும் கடந்த 1977-ல் 6 லட்சமாக இருந்த அந்த குரங்குகளின் எண்ணிக்கை இப்போது 3 லட்சமாக குறைந்துவிட்டது. இந்த குரங்குகளை வாங்கும் சீன நிறுவனம் அவற்றை இனப்பெருக்கம் செய்யப் போவதில்லை. மாறாக  ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப் போகின்றன. அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சிக் கூடங்களில் அந்த குரங்குகள் சித்தரவதைக்கு உள்ளாகப் போகின்றன. அவற்றின் தோல் மற்றும் கண்களை பொசுக்கப் போகிறார்கள். எனவே என்ன ஆனாலும் குரங்குகளை ஏற்றுமதி செய்ய விடமாட்டோம்” என்கிறார் இலங்கையின் மிருகவதை தடுப்பு செயற்பாட்டாளரான பாஞ்சாலில் பனபிட்டியா.

அவர் சொல்வதில் நிறைய உண்மைகள் இருக்கின்றன. மருத்துவம் மற்றும் அழகு சாதன பரிசோதனைக் கூடங்களில் குரங்குகள், முயல்கள், வெள்ளெலிகள் என பல உயிரினங்கள் சோதனைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

அந்த சோதனைகள் பல மிகவும் குரூரமானவை. உதாரணமாய் கண் மையிலுள்ள வேதிப் பொருட்கள் கண்ணை பாதிக்கிறதா இல்லையா என்பதை அறிய அந்த வேதிப் பொருட்களை குரங்குகளின் கண்களில் செலுத்தி சோதித்துப் பார்ப்பார்கள். நாட்கணக்கில் நடக்கும் பரிசோதனைகள் விலங்குகளுக்கு சித்திரவதைதான்.

மருந்துகளும் இந்த முறையில்தான் பல ஆராய்ச்சி நிறுவனங்களில் பரிசோதிக்கப்படுகின்றன. இதற்காக பல கட்டுப்பாடுகள் வந்தபோதும் இவை தொடர்கின்றன என்று புகார்கள் சொல்லுகிறார்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள்.

இலங்கை அரசு இந்த எதிர்ப்புகளையெல்லாம் கண்டுகொள்வதாக இல்லை. ஆளும்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளரான பலிதா ரங்க பண்டாரா, “குரங்குகளை ஏற்றுமதி செய்வதை எதிர்ப்பவர்கள் ஒருமுறை  அந்த குரங்குகளால் பாதிக்கப்படும் அனுராதபுரா உள்ளிட்ட பகுதிகளை ஒருமுறை சென்று பார்க்க வேண்டும். அங்கு அந்த குரங்குகளால்  பயிர்களுக்கு ஏற்படுத்தும் சேதத்தை தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது அவர்கள் எங்கள் முடிவுகளை ஏற்றுக் கொள்வார்கள்” என்கிறார்.

ஆனால் எதிர்ப்பாளர்களோ, “சேட்டை செய்கிறது என்பதற்காக நம் வீட்டு குழந்தைகளை கொலைக்களத்துக்கு அனுப்புவீர்களா?   சீனாவுக்கு குரங்குகளை அனுப்பும் முடிவைக் கைவிட்டு அவற்றின் குணாதிசயங்களை ஆய்வு செய்து பயிர்களுக்கு தீங்கு ஏற்படுத்தாதபடி அவற்றை சீரமைக்க வேண்டும். குரங்குகளுக்கு உணவளிப்பது, குப்பைகளை கண்ட இடத்தில் கொட்டுவது போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும்” என்கிறார்கள்.

குரங்குகளை ஏற்றுமதி செய்யவே இத்தனை எதிர்ப்புகள் உள்ள நிலையில் அடுத்ததாக மயில்களை இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்வது பற்றி இலங்கை அரசு யோசித்து வருகிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...