No menu items!

எடப்பாடி Vs அண்ணாமலை – சமாளித்த அமித்ஷா – மிஸ் ரகசியா

எடப்பாடி Vs அண்ணாமலை – சமாளித்த அமித்ஷா – மிஸ் ரகசியா

“அலுவலக வாயில் கதவு திறந்து கிடக்கிறதே?… எம் வருகைக்காக காத்திருக்கிறீரோ?” என்று செந்தமிழில் கேட்டபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பாத்துட்ட போல… நாக்குல செந்தமிழ் விளையாடுது.”

“தமிழ்நாட்டு அரசியலைப் பார்த்து போர் அடிச்சுடுச்சு. அதான் ஒரு சேஞ்சுக்கு சோழ அரசியலை பார்த்துட்டு வந்தேன்.”

”சோழ அரசியல் எப்படியிருக்கிறது? தற்போதைய அரசியலைவிட சூடாக இருக்கிறதா?”

“எப்போதுமே தற்கால அரசியலில்தான் சூடும் சூதும் அதிகம்” என்று சிரித்தாள் ரகசியா.

“எடப்பாடி பழனிச்சாமி ஒரு வழியா அமித் ஷாவை சந்திச்சுட்டாரே. அதிமுக – பாஜக உறவுல எல்லாம் சுமூகமா முடிஞ்சிருச்சா? அண்ணாமலையும் உக்காந்திருந்தாரே ”

“ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் விட முடியாத சூழல். Catch 22னு சொல்வாங்களே அதுமாதிரி. இந்த சந்திப்பை தள்ளிப்போட அண்ணாமலை நிறைய முயற்சிகள் செஞ்சிருக்கார். டெல்லில காய்லாம் நகர்த்தியிருக்கிறார். ஆனா எடப்பாடி இந்த சந்திப்பு விஷயத்துல தீவிரமா இருந்து அதை சாதிச்சு காட்டி இருக்காரு.”

“அண்ணாமலை எதிர்ப்பு தெரிவிக்கலையா?”

”அண்ணாமலை தன் அதிருப்தியை சொல்லியிருக்கிறாரு. ஆனா மேலிடம் அவருக்கு அழுத்தம் கொடுத்திருக்கு. எடப்பாடியை சந்திக்கும்போது அண்ணாமலையும் கூட இருக்கணுங்கிறதுல அமித்ஷா உறுதியா இருந்திருக்கார். இதன் மூலமா தமிழ்நாடு சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்கறதுல அண்ணாமலைக்கும் முக்கிய பங்கு இருக்குன்னு சொல்லாம சொல்லியிருக்கார். இதுல அண்ணாமலைக்கு சந்தோஷம்”

“பின்ன இருக்காதா?

டெல்லி பாஸ் கிட்டதான் பேசுவேன்னு எடப்பாடி சொன்னார். ஆனால் டெல்லி பாஸ் பக்கத்துல அண்ணாமலை உக்காந்திருப்பார்னு எடப்பாடி நினைக்கலை. அதுல எடப்பாடி பழனிசாமிக்கு கொஞ்சம் ஷாக்தான். அமித்ஷா கூட அண்ணாமலை இருக்கப் போறார்ன்ற நியூஸ் அவருக்கு முன்னாலேயே தெரிஞ்சிருச்சு. பரவாயில்லைனு போயிருக்கார்”

“பேச்சுவார்த்தையில என்ன பேசுனாங்களாம்?”

“40 நிமிஷம் நடந்த பேச்சுவார்த்தைல, திமுகவை எதிர்க்க, உங்க தனிப்பட்ட பிரச்சினைகளை ஓரங்கட்டி வைக்கணும்னு எடப்பாடி கிட்டயும் அண்ணாமலை கிட்டயும் அமித் ஷா அட்வைஸ் பண்ணியிருக்கார். போன தடவை 5 நாடாளுமன்ற தொகுதிகளைத்தான் பாஜகவுக்கு அதிமுக கொடுத்துச்சு. இந்த முறை அந்த எண்ணிக்கையை 10 தொகுதிகளா உயர்த்தணும்னு எடப்பாடிகிட்ட கேட்டிருக்கார். தாங்கள் போட்டியிட விரும்பற 20 தொகுதிகளோட லிஸ்டைக் கொடுத்து அதுல இருந்து 10 தொகுதிகளைக் கேட்டிருக்கார் அமித் ஷா. கட்சிக்காரங்ககிட்ட பேசிட்டு சொல்றோம்னு அதிமுக தலைவர்கள் வந்திருக்காங்க”

“10 தொகுதி கொடுப்பாங்களா? கூட்டணிக் கட்சிகளுக்கு வேற கொடுக்கணுமே?”

“அதிமுகவுக்கு இக்கட்டான சூழல்தான். ஆனா நாடாளுமன்றத் தேர்தல்ல ரொம்ப இறுக்கிப் பிடிக்க வேண்டாம்னு நினைக்கிறாங்க. அதனால 10 சீட் கொடுப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தயாராதான் இருக்கிறார்”

“ரொம்ப உற்சாகமாய் இருந்தாரே எடப்பாடி? செய்தியாளர்களிடம் பேசும்போது ரொம்ப சந்தோஷமா தெரிஞ்சாரே?”

”ஆமாம், ஓபிஎஸ் இல்லைனு ஆகிருச்சு. அமித்ஷாவை பார்த்து பேசுனதுனால அதிமுகனா எடப்பாடின்ற நிலை வந்திருக்கு. இங்க திமுகவுக்கு நிறைய சிக்கல்கள் வந்திருக்கு…அதனால எடப்பாடிக்கு செம்ம உற்சாகம்”

“அண்ணாமலை எப்படியிருக்கிறார்?”

”அவர் அத்தனை உற்சாகமாக இல்லை என்று கமலாலயத்துல பேசிக்கிறாங்க. போதாக் குறைக்கு அவர் பொறுப்பாளாரா இருக்கிற கர்நாடக தேர்தல்ல பாஜக ஜெயிக்காதுனு ரிப்போர்ட்ஸ் வருதாம். அதுனால கர்நாடகத்திலேயே சுத்திக்கிட்டு இருக்கிறார். தோத்தா தன்னுடைய பேரும் கெட்டுப்போயிடும்னு ஆதரவாளர்கள்கிட்ட சொல்லியிருக்கிறார்”

“கர்நாடகாவுல அவருக்கு பிரஷர் அதிகமா இருக்கா?”

“ஆமா, இந்தத் தேர்தல்ல பாஜகவுக்கு வெற்றி கிடைக்காதுன்னு அந்த மாநில பாஜக தலைவர்களே உறுதியா நம்பறாங்க. அப்படி தோத்தா யார் மேல பழிபோடலாம்னு யோசிச்ச அவங்க, கடைசியில அந்த தோல்வியை அண்ணாமலை தலையில கட்டிடலாம்னு முடிவு எடுத்திருக்காங்க. அண்ணாமலையோட நடவடிக்கைகள் பிடிக்காததாலதான் ஜெகதீஷ் ஷட்டர் உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் கட்சி மாறிட்டாங்க. அதனால கட்சி தோத்ததுன்னு அண்ணாமலைக்கு எதிரான குற்றப் பத்திரிகையை அவங்க இப்பவே தயார்படுத்திட்டு இருக்காங்க. இதுல இருந்து எப்படி தப்பிக்கறதுன்னு மண்டையை உடைச்சு யோசிட்டு இருக்காராம் அண்ணாமலை”

“முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு போனாரே ஏதும் புது விசேஷம் இருக்கா?”

“கிண்டி பல்நோக்கு மருத்துவமனை தொடக்க விழாவில் கலந்துக்க குடியரசுத் தலைவரை அழைக்கறதுக்காக அவர் டெல்லி போனார். அப்படியே விமான நிலயத்துல யதேச்சையா நிர்மலா சீதாரமனையும் அவர் சந்திச்சிருக்கார். திமுக தலைவரா பாஜகவை எதிர்த்தாலும், தமிழக முதல்வரா மத்திய அரசை அனுசரிச்சு போவேங்கிறதை இந்த சந்திப்பு மூலமா உணர்த்தியிருக்கார் ஸ்டாலின்.”

“பிடிஆரோட வீடியோ பார்த்தியா?”

“இந்த விவகாரம் பத்தி முதல்ல முதல்வரை சந்திச்சு விளக்கும் கொடுக்க பிடிஆர் விரும்பி இருக்கார். ஆனா அவருக்கு முதல்வர் நேரம் ஒதுக்கலை. டெல்லி போய்ட்டு வந்து பார்க்கிறேன்னு சொல்லியிருக்கிறார். தன்னை சந்திச்சு விளக்கறதுக்கு பதிலா, மீடியாகிட்ட விளக்கச் சொல்லிட்டாரு. அதைத் தொடர்ந்துதான் அவர் முதல்ல அறிக்கை வெளியிட்டு இருக்கார். அதுக்குள்ள ரெண்டாவது வீடியோ வந்துடுச்சு. அதுலயும் முதல்வரோட மகனையும் மருமகனையும் அவர் விமர்சிச்சு பேசறமாதிரி இருந்திருக்கு. இதுக்கு மறுப்பை தயார்செஞ்ச பிடிஆர், நிருபர்களை சந்திச்சா ஏதாவது ஏடாகுடம் ஆகும்னு வீடியோ அறிக்கையா வெளியிட்டிருக்கார். இதே மாதிரி இன்னும் 2 வீடியோக்களையாவது அண்ணாமலை வெளியிடுவார்னு உளவுத்துறை எச்சரிக்கை செஞ்சிருக்கறதால, அதை எப்படி எதிர்கொள்றதுன்னு முதல்வர் யோசிச்சுட்டு இருக்காராம். அதேநேரத்துல பிடிஆருக்கு எதிரா ஒரு க்ரூப் முதல்வர்கிட்ட லாபி பண்ணிட்டு இருக்கு”

”அண்ணாமலைக்கு எதிரா திமுக ஏதும் பண்ணலையா?”

“வார் ரூம் ரகசியங்கள் பற்றி சில விஷயங்களை திமுக அமைச்சர்கள் சேகரிச்சுட்டு இருக்காங்க. இதேபோல் ‘எனது மாத செலவுக்கு சில தொழிலதிபர்கள் உதவுகிறார்கள்’னு அண்ணாமலை ஏற்கெனவே சொல்லி இருக்கார்ர். யார் அந்த தொழிலதிபர்கள்? அவர்களுக்கு அண்ணாமலை மேல ஏன் இவ்வளவு கரிசனம்னும் விசாரிச்சுட்டு இருக்காங்க. இதையெல்லாம் வச்சு அண்ணமலைக்கு திமுக பதிலடி கொடுக்கும்னு எதிர்பார்க்கலாம்.”

“கம்யூனிஸ்ட் கட்சிகள் மேல முதல்வர் ஏதோ வருத்தத்துல இருக்காராமே?”

“12 மணி நேர வேலை மசோதா விவகாரத்துல திமுக ஏதோ தொழிலாளர் விரோத அரசு மாதிரி கம்யூனிஸ்ட் கட்சிகளும், தொழிற்சங்க தலைவர்களும் பேசினது முதல்வரை அப்செட் ஆக்கியிருக்கு. அறிக்கைகள் வெளியிடுறதுக்கு முன்னால என்னை வந்து பார்த்து பேசியிருக்கலாமே என்று வருத்தப்பட்டிருக்கிறார். அவசரப்பட்டுட்டிங்கனு சொல்லியிருக்கிறார். திமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எப்படியெல்லாம் உதவி செஞ்சிருக்கோம்னு ஒரு பட்டியலை முரசொலியில வெளியிட சொல்லியிருக்கிறார்”

”திமுகவுக்கு தொடர்ந்து ஏதாவது சிக்கல் வந்துக்கிட்டே இருக்கே”

”ஆமாம், அதனால அமைச்சர்களையும் கட்சி முக்கியஸ்தர்களையும் ஜாக்கிரதையா இருக்கச் சொல்லியிருக்கிறார் சிஎம். பார்ப்போம் என்ன நடக்குதுனு” என்று சொல்லி கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...