No menu items!

பொன்னியின் செல்வன் 2 – விமர்சனம்

பொன்னியின் செல்வன் 2 – விமர்சனம்

நந்தினி – கரிகாலன் இவர்கள் இருவரின் விடலைப் பருவத்தில் இருந்து படம் தொடங்குகிறது.

இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு என்ன.. என்ன நடந்தது.. எப்படி பிரிந்தார்கள்..

நந்தினி யார்..நந்தினிக்கும் பாண்டிய மன்னுக்கும் என்ன உறவு..,

பொன்னியின் செல்வரை இரண்டு முறை உயிரைக் காப்பாற்றிய மந்தாகினி யார்…

கரிகாலன் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது…

பாண்டிய ஆபத்துதவிகளின் முயற்சி வெற்றி பெற்றதா..

அருள்மொழி வர்மன் மகுடம் சூடினாரா….

இத்தனை கேள்விகளுக்குமான பதிலை, ஒரு சுமாரான திரைக்கதையில் கொடுக்க முயன்று இருக்கிறார் மணி ரத்னம்.

படத்தில் காதல், கோபம், துரோகம் என உணர்ச்சிகளைக்காட்டி கவர்ந்திருக்கிறார் விக்ரம். உலக அழகியின் பேரரழகில் மணி ரத்னம் & கோ-வுக்கு நம்பிக்கை இல்லை போலும், ஒரு ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் அப்ளிகேஷனில் மேக்கப் போட்டு ஐஸ்வர்யா ராய் லுக்கை முடி செய்திருக்கிறார்களோ என்று யோசிக்க வைக்கிறது அவரது தோற்றம். உண்மையைச் சொல்வதென்றால். நந்தினியின் அம்மா மந்தாகினியா வரும் ஐஸ்வர்யா ராய் கூட அழகாய் இருக்கிறார். வந்தியதேவன் கார்த்திக்கு இந்த பாகத்தில் சேட்டை செய்ய வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. ஆனால் ஆக்‌ஷனிலும், கிடைத்த இடைவெளியில் குறும்பிலும் ரசிக்க முடிகிறது. பொன்னியின் செல்வன் டைட்டில் கேரக்டராக இருந்தாலும், ஜெயம் ரவிக்கு போதுமான காட்சிகளே இல்லை. முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் அமெரிக்கா ரிட்டர்ன் மாப்பிள்ளை கேரக்டர்கள் இருக்கும். பார்க்க ஹேண்ட்சம்மாக இருந்தாலும், நடிக்கவோ அல்லது பெயர் வாங்கவோ வாய்ப்புகள் இருக்காது. அப்படியொரு சூழல் ஜெயம் ரவி. பூங்குழலி கதாப்பத்திரம் அப்படியொரு அழகான படைப்பு, ஆனால் ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை ஜூனியர் ஆர்டிஸ்ட் போல காட்டியிருக்கிறார்கள்.

வசனம் சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறது. வந்தியதேவனை பாண்டிய ஆபத்துதவிகள் தூக்கிவந்துவிட, அங்கே வரும் நந்தினி. ‘அருள்மொழி வர்மன் எங்கே என்று சொல்லாவிட்டால், உமக்கு கெளரமான சாவு கிடையாது’ என்று மிரட்ட, ‘உண்மையை சொல்லவேண்டுமென்றால் கெளரவமான வாழ்க்கை இல்லை’ என்று வந்தியதேவன் சொல்லும் காட்சிக்கு நல்ல வரவேற்பு.

ஆழ்வார்க்கடியான் வந்தியதேவனை மாறுவேடத்தில் வந்து காப்பாற்றும் போதும் கூட அவரை அடையாளம் கண்டுகொள்கிறான் வந்தியதேவன். ’என்னை எப்படி கண்டுபிடித்தாய்’ என போக்கிரி வடிவேலு கேட்பது போல கேள்விகேட்க, ‘நீர் வரும் முன் உமது தொப்பை வந்துவிட்டதே’ என்று சொல்லும் போதும், புத்தவிஹாரத்தில் இதே கேள்வியை ஆழ்வார்க்கடியான் கேட்க. ‘உமது புளியோதரை வாசம்தான்’ என்று வந்தியதேவன் கமெண்ட் அடிக்கும் போது கைத்தட்டல்கள் பறக்கின்றன.

டைட்டில் கார்டில் இசைக்கோர்பு, வடிவாக்கம், தயாரிப்பு ஏ.ஆர். ரஹ்மான் என்று போட்டிருக்கிறார்கள். இதற்கு பின்னணி என்ன என்று இனிமேல்தான் தெரியும்.

பாடல்கள் ரசிக்க வைத்தாலும், பின்னணி இசையில் ஏ.ஆர்.ஆர். தனித்து நிற்கிறார். இந்த தனித்து என்பதற்கு அர்த்தம் என்னவென்றால் பட ததின் களம் மற்றும் காலம் இவற்றைவிட்டு விலகி தனித்து இசையமைத்து இருக்கிறார். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு வரலாற்று கதை. ஆனால் பின்னணி இசையோ டிஜிட்டல் டெக்னாலஜியில் அதிர வைக்கிறது. ராஷ்டிரக்கூடர்களை அருள்மொழி வர்மன் போரில் வென்ற பின நடக்கும் மகுடம் சூட்டும் விழாவில் சண்டமேளத்தை அடித்து கலக்குகிறார்கள். தமிழர் இசைக்கான வாத்தியக்கருவிகளோ அல்லது இசைக்கருவிகளோ இல்லை.

இந்த பஞ்சாயத்தில் ரஹ்மான் போட்ட ட்யூனுக்காக மணி இப்படியொரு காட்சி வைத்தாரா, இல்லை மணி முடிவு செய்த காட்சியைப் பார்த்து சண்டமேளத்தை ரஹ்மான் பயன்படுத்தினாரா என்று தெரியவில்லை.

சினிமாவில் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு என எல்லாவற்றிலும் கில்லாடிகளை தன்னுடைய படத்தில் கூடவே வைத்து கொள்வது மணிரத்னத்தின் சக்ஸஸ் ஃபார்மூலா. ஏனென்றால் ஏதாவது ஒன்றில் மணி சறுக்கினால், இந்த கில்லாடிகள் கைத்தூக்கி விடுவார்கள்.

அப்படிதான் இருக்கிறது ரவிவர்மனின் ஒளிப்பதிவு. படத்தின் பலமே இவரது வேகமான, விவேகமான ஒளிப்பதிவுதான். சோழர்களுடன் நாமும் களத்தில் இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது ரவிவர்மனின் கேமரா. அடுத்து க்ரேக் டாவ்ன்லியின் சவுண்ட் மிக்ஸிங். ஐமெக்ஸ், டால்ஃபி அட்மாஸ் சவுண்ட்டில் கேட்டால், தரம் நிச்சயம் புரியும். ஆக்‌ஷனில் முக்கியமாம போர்க்காட்சிகளில் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்.

வரலாற்றுப் படமாக இருந்தாலும் கூட காதலை ரசிக்கும்படி காட்டுவதில், மணி ரத்னம் என்றைக்குமே ரசனைக்காரர்தான். வந்தியதேவனும், குந்தவையும் தனியாக சந்திக்கும் காட்சியில், கண்களைக் கட்டியபடி நிற்கும் வந்தியதேவன் வாளின் மீது மெல்ல மெல்ல கைவைத்து, பிறகு குந்தவை கையைப் பிடிக்கும் காட்சி ஒரு ஹைக்கூ காதல்.

நந்தினியும் கரிகாலனும் தனியாக சந்திக்கும் காட்சியில், ‘ஒரு உயிருக்குப் பரிகாரம் இன்னொரு உயிர்தான். என்னுயிரை நீயே எடுத்து கொள்’ என்று கரிகாலன் உருகுவது மணிரத்னத்தின் டச்.

பூங்குழலி, சேந்தன் அமுதன், வானதி போன்ற முக்கிய கதாபாத்திரங்களை சில காட்சிகளில் தலையைக் காட்டினால் போதுமென கட்டாய ஓய்வில் அனுப்பிவிட்டார்கள் போல. குடந்தை ஜோசியர் கதாபாத்திரத்தை படமெடுக்கும் முன்பே கதையில் இருந்து டிஸ்மிஸ் செய்துவிட்டார்கள்.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் இடையே உள்ள உறவை சொல்ல ஒரு சில காட்சிகளையாவது வைத்திருக்கலாம். கல்கியின் பொன்னியின் செல்வனைப் படிக்காதவர்களுக்கு இது ஒரு டியூட்டோரியல் மாதிரியாவது இருந்திருக்கும்.

மணிரத்னம் இரண்டாம் பாகத்தை விக்ரமை மட்டுமே நம்பி எடுத்திருக்கிறார். படத்தில் பிரதானமாக இருப்பது, கரிகாலனும், நந்தினியும்தான். கல்கியின் பொன்னியின் செல்வனில் அசத்தும் வந்தியதேவன், அருள்மொழி வர்மனின் பராக்கிரமம் மாதிரியான எதுவும் இரண்டாம் பாகத்தில் இல்லை.

இரண்டு பாகங்களையும் முதலிலேயே ஷூட் செய்திருப்பதால், எந்த காட்சியை வைக்கலாம், எதை வெட்டலாம் என்பதில் சிக்கல் இருந்திருக்கும் போல. ஒவ்வொரு காட்சிகளும் துண்டு துண்டாக நகர்கின்றன.

ஆனாலும் இந்த ’பொன்னியின் செல்வன்’ ரசிக்க வைக்கிறான். காரணம் ரொம்ப சிம்பிள் ’இது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்’!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...