தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நட்பு குறித்து எழுத்தாளர் இந்துமதி ‘வாவ் தமிழா’ யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சி…
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
உங்களுக்கு எப்போதிருந்து துர்கா ஸ்டாலினுடன் நட்பு. அவரது புத்தக வெளியீட்டு விழாவிலும் நீங்கள் பேசினீர்கள்? அவருடன் உங்கள் நட்பு தொடங்கியது எப்படி?
கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து வருடப் பழக்கம் எனக்கும் அவருக்கும். கலைஞர் இருந்த போதிலிருந்து, அவரது கணவர் துணை முதல்வராக இருந்த போதிலிருந்து பழக்கம். கலைஞருடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. அதன் மூலம் அவர் வீட்டில் எல்லோருடனும் எனக்கு நட்பு ஏற்பட்டது. கலைஞரை பார்க்கப் போகும்போதெல்லாம் துர்காவை சந்தித்திருக்கேன்; ஸ்டாலினையும் சந்தித்திருக்கேன்.
கலைஞரின் கோபாலபுரம் வீட்டில் ரொம்ப சின்ன ரூம்தான் துர்காவுடையது. அந்த வீட்டில் எல்லா அறைகளுமே சிறியதுதான். எட்டுக்கு பத்துதான் இருக்கும். அந்த வீட்டில்தான் முதன்முதலில் பார்த்தேன். முதல் பார்வையிலேயே மிகவும் பிடித்துப் போனது அவங்களை. அப்போதிலிருந்தே துர்கா எனக்குப் பிடித்தமானவர். மிகவும் பிரியமானவர். அவருடைய எளிமை எனக்கு மிகவும் பிடிக்கும். வெளிப்படையான பேச்சு பிடிக்கும். எல்லாவற்றிற்கும் மேலான பக்தி பிடிக்கும்.
உங்கள் இருவருக்கும் பொதுவான விருப்பு வெறுப்புகள் என்ன, உங்கள் சந்திப்புகளில் என்ன பேசிக்கொள்வீர்கள்?
எல்லா பெண்களும் என்ன பேசிக்குவாங்களோ அதைத்தான் நாங்களும் பேசிக்குவோம். உடுத்திக்கொண்ட புடவை, சமையல், ஆன்மிகம் இப்படித்தான் எங்கள் பேச்சு இருக்கும். அவங்க நல்ல சமைப்பாங்க. எளிமையான சமையல். சட்டிப் பானைகளில்கூட சமைப்பாங்க. எது செய்தாலும் நேர்த்தியா செய்வாங்க.
சில நேரங்களில் எங்கள் சந்திப்புகளில் அரசியலும் பேசிக்கொள்வோம். எதையும் வெளிப்படையாகப் பேசியே பழக்கப்பட்ட நான், அவரது கணவரான ஸ்டாலினை முதலமைச்சராக அறிவிக்காததற்காக அவரிடம் சண்டை கூடப் போட்டிருக்கிறேன்.
நீண்டகாலமாக அவருடன் நீங்கள் பழகியிருந்தாலும் அப்போதெல்லாம் அவரது கணவர் ஸ்டாலின் முதல்வரில்லை. இப்போது முதல்வர். இந்த மாற்றம் பழகும் விதத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?
இல்லவே இல்லை. அன்றைக்கு எப்படி பழகினாங்களோ அப்படித்தான் இன்னைக்கும் பழகுறாங்க. ஒரு வித்தியாசத்தையும் நான் அவங்களிடம் பார்க்கவில்லை. இது ரொம்ப அபூர்வமானது. அவங்களுடைய சிறப்பு அம்சமா இதை நான் பார்க்கிறேன். முதல்வர் மனைவி என்ற கர்வம் கொஞ்சமும் அவங்களிடம் இல்லை.
அவரது கணவர் ஸ்டாலின், மகன் உதயநிதி இவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். இது குறித்து அவர் எப்போதாவது பேசியிருக்கிறாரா?
இல்லை. அவர்களது கொள்கைகளை, அரசியலை துர்கா மதிக்கிறார். அது மாதிரி இவங்களின் கடவுள் நம்பிக்கையையும் அவர்கள் மதிக்கிறார்கள். ஒருமுறை சீரடி போய்விட்டு திரும்பியதும் அவங்க வீட்டுக்கு பொய் பிரசாதம் கொடுத்தேன். அப்போது ஸ்டாலின் இருந்தார். அவரிடம் கொடுத்ததும், ‘அவங்களிடம் கொடுங்கள்’ என்று துர்காவை வாங்கிக்க சொன்னார். கலைஞர் மாதிரி ஸ்டாலினும் மற்றவர்களின் நம்பிக்கைகளை மதிக்கக்கூடியவர். தனது மனைவியானாலும், கட்சி கொள்கைகள் படிதான் நடந்துகொள்ள வேண்டும் என்று இல்லாமல், துர்காவின் எண்ணங்களை மதிக்கிறார். எனக்கு ஸ்டாலினிடம் பிடித்தமானவற்றில் இதுவும் ஒன்று.
துர்கா ஸ்டாலின் என்பதுதான் அவர்களுக்கு வீட்டில் வைத்த பெயர். ஆனால், திருமணத்துக் பிறகு சாந்தா ஸ்டாலின் என்று அவருக்கு கலைஞர் பெயர் வைத்தார். ஆனால், இப்போது துர்கா ஸ்டாலின் என்றே அழைக்கப்படுகிறார். துர்கா என்ற பெயரைதான் அவர் விரும்புகிறாரா?
இரண்டு பெயருக்குமே பொறுத்தமானவர் அவர். சாந்தா என்ற பெயருக்கேற்ப அவ்வளவு சாந்தமானவர். அதே நேரம் துர்கா என்ற பெயருக்கேற்ப அவ்வப்போது துர்கையாகவும் மாறக்கூடியவர். நியாயமான காரணங்களுக்கு மிகவும் கோபப்படுவார். அதுபோல் தனது மனதிற்கு சரி என்று பட்டதை செய்யக் கூடியவர். மிக தைரியமானவர். “மாமா எனக்குக் கடவுள் பக்தி உண்டு. அதனால் வீட்டில் சிறிய பூஜை அறை வைத்துக்கொள்கிறேன்” என்று கலைஞரிடமே மனம் விட்டுப் பேசியவர்.
துர்கா ஸ்டாலின் பொழுதுபோக்குகள் என்ன?
பொழுதுபோக்கும் அளவுக்கு அவங்களுக்கு நேரம் கிடையாது என்பதுதான் உண்மை. அவ்வளவு பெரிய வீட்டைப் பார்க்கணும். முதல்வர் வீடு… எவ்வளவு பேர் தினம் வந்து போவார்கள். அவர்களை எல்லாம் கவனிக்கனும். எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்வாங்க. வீட்டை மிக அழகாக வைத்திருக்காங்க. சின்ன பூஜையறைதான். ஆனால், அவ்வளவு தெய்வீகமாக இருக்கும். இதையெல்லாம் பார்ப்பதற்கே அவங்களுக்கு நேரம் சரியாக இருக்கும். உதயநிதி நடித்த படங்களை பார்க்க ஸ்டாலினுடன் போவது மட்டும்தான் அவங்களுக்கு ஒரே பொழுதுபோக்காக இருக்க முடியும்.
துர்கா ஸ்டாலின் உங்கள் வீட்டுக்கு மீண்டும் வரும்போது தயாளு அம்மாளை பார்த்துவிட்டுதான் வந்திருக்கிறார்கள். தயாளு அம்மாள் எப்படி இருக்காங்க, எதுவும் சொன்னார்களா?
தயாளு அம்மாள் நன்றாக இருக்காங்க என்றுதான் சொன்னாங்க. இந்த வயதுக்கு எல்லோருக்கும் வரக்கூடிய பிரச்சினைகள்தான் அவங்களுக்கும் உள்ளது. மற்றபடி பிரச்சினைகள் எதுவும் இல்லை. தயாளு அம்மாளையும் எனக்கும் தெரியும். ராஜாத்தி அம்மாளையும் தெரியும். கலைஞரை பார்க்கப் போகும்போது பார்த்திருக்கேன். கலைஞர் மறைவுக்கு பிறகு கோபாலபுரம் வீட்டுக்கு போகவே இல்லை. எனவே, தயாளு அம்மாளை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. தயாளு அம்மா நிறைய பேசமாட்டாங்க, எப்பவும் அமைதியாக இருப்பாங்க. பெரும்பாலும் சமையல் கட்டுதான். கதவை லேசாகத் திறந்து எட்டிப் பார்ப்பாங்க. அவ்வளவுதான்.