No menu items!

பிராமணர்களை இனப்படுகொலை செய்யச் சொன்னாரா பெரியார்? – ரஞ்சனி காயத்ரி சொல்வது சரியா?

பிராமணர்களை இனப்படுகொலை செய்யச் சொன்னாரா பெரியார்? – ரஞ்சனி காயத்ரி சொல்வது சரியா?

கர்நாடக இசை இரட்டையர்களான ரஞ்சனி – காயத்ரி சகோதரிகள், டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மியூசிக் அகாதமி தலைவர் முரளிக்கு எழுதிய இரண்டு கடிதங்களில், ‘பிராமணர்களை இனப் படுகொலை செய்யச் சொன்னவர் பெரியார்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். உண்மையில் பெரியார் அப்படி சொன்னாரா?

ரஞ்சனி – காயத்ரி என்ன சொல்கிறார்கள்?

கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மியூசிக் அகாதமி தலைவர் முரளிக்கு இரண்டு கடிதங்களை எழுதியுள்ளார்கள், கர்நாடக இசை இரட்டையர்களான ரஞ்சனி – காயத்ரி சகோதரிகள்.

இதில் முதல் கடிதத்தில், ‘‘பிராமணர்கள்’ இனப்படுகொலையை வெளிப்படையாக ஆதரித்த, பிராமண சமூகத்தின் ஒவ்வொரு பெண்ணையும் பலமுறை கேவலமான தகாத வார்த்தைகளால் அழைத்து துஷ்பிரயோகம் செய்த, சொற்பொழிவுகளில் இழிமொழியை இடைவிடாமல் பாடுபட்ட ஈவெரா போன்ற ஒரு நபரை டி எம் கிருஷ்ணா புகழ்வதை கவனிக்காமல் இருப்பது ஆபத்தானது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டாவது கடிதத்தில், “இனப்படுகொலை வெறியர்களுக்கும் நியாயமான சொற்பொழிவுகளுக்கும் மறைமுக மன்னிப்புக் கேட்பவர்களாக இருக்க மறுத்துவிட்டோமா? ஆம்” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

முதல் கடிதத்தில் ஈவெரா என்று குறிப்பிட்டு எழுதிய ரஞ்சனி – காயத்ரி சகோதரிகள் இரண்டாவது கடிதத்தில் பெரியார் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், ‘இனப்படுகொலை வெறியர்கள்’ என்று அவரையேக் குறிப்பிடுகிறார்கள்.

இதற்கு பெரியாரிஸ்ட்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். பெரியாரியவாதியும் ‘கறுப்புப் பிரதிகள்’ பதிப்பக உரிமையாளருமான நீலகண்டன், “பிராமணர்களை படுகொலை செய்ய நினைத்தவர் பெரியார்’ என கூறியுள்ள இருவர் மீதும் பெரியார்  எங்கு அப்படி சொல்லியுள்ளார் என ஆதாரம் கேட்டு திராவிடர் கழகம் வழக்கு தொடரவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், “டி.எம். கிருஷ்ணாவிற்கு விருது வழங்கப்படுவதை சாக்காக வைத்து பெரியார் பெரிய அளவில் தாக்கப்பட்டு வருகிறார்! பெரியார் இனப் படுகொலை செய்யத் துண்டியதாக அபாண்ட பழி சுமத்துகிறார்கள். மீண்டும், மீண்டும் இந்தப் பழியை ரஞ்சனி, காயத்ரி, துஷ்யந்த் ஸ்ரீதர், விசாகா ஹரி, திருச்சூர் சகோதரர்கள் மட்டுமல்ல, பாஜகவின் அண்ணாமலை, உமா ஆனந்த் உள்ளிட்ட பலர் பெரியாரை இழிவு படுத்தும் வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை மாற்றுகிறார்கள்! ஆனால், பெரியார் அப்படிப்பட்டவரல்ல, இவர்கள் புரிதலே தவறு’ என்கிறார் சாவித்திரி கண்ணன்.

எழுத்தாளரும் ஜெயகாந்தன் மகளுமான தீபலஷ்மி, “பெரியார் காலம் தொட்டு இதுவரைக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கிடையாது. கேட்டாலும் தர மாட்டார்கள். ஆனால், வதந்தியை வாந்தி எடுத்துக்கொண்டே இருப்பார்கள்” என்கிறார் காட்டமாக.

உண்மையில் பெரியார் என்ன சொன்னார்?

இது தொடர்பாக ‘பெரியார் பிராமணர்களின் எதிரியா?’ நூலின் ஆசிரியர்  சோழ. நாகராஜன் எழுதியுள்ள பதிவில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

‘அது காந்தியார் படுகொலை செய்யப்பட்டிருந்த சமயம்.  திருவாரூர் பக்கம், நன்னிலத்தை அடுத்த சன்னா நல்லூரில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம். வழக்கம்போல பிராமணியத்துக்கு எதிராகப் பேசிக் கொண்டிருந்த ஒரு இளம் பேச்சாளர், காந்தி படுகொலைச் சம்பவத்தைத் தொடுகிறார். கோட்ஸே ஒரு பிராமணர் என்பதை அம்பலப்படுத்தும் அவர், தமிழ்நாட்டு பிராமணர்களை விமரிசிக்கத் தொடங்குகிறார்.

உடனே மேடையில் அமர்ந்திருந்த பெரியார் பலகைகொண்டு அமைக்கப்பட்டிருந்த மேடையின் தரையைத் தன் கைத்தடியால் தட்டி ஒலியெழுப்புகிறார். பெரியார் இப்படித் தடியைக்கொண்டு தட்டினால் அது ஒரு எச்சரிக்கை சமிக்ஞை. அதற்கான பொருள் கழகத்தினருக்குத்தான் தெரியும்: ‘இந்தப் பேச்சு தவிர்க்கப்பட வேண்டியது, முடித்துக்கொள்!’ – என்பதே அதன் அர்த்தம்.

பேச்சை முடித்துக்கொண்ட அந்த இளைஞர் முகம் வாடியிருக்கிறது. பிராமணியதின் தீமையை மக்களுக்கு உணர்த்த இது எவ்வளவு நல்ல சந்தர்ப்பம்… அதைப்போய் பெரியார் தடுத்துவிட்டாரே என்று.

அப்போது அந்தப் பேச்சாளரிடம் பெரியார் இப்படிச் சொல்லியிருக்கிறார்: ‘நமக்கு பார்ப்பனியத்தோடுதான் முரண். தனிப்பட்ட பார்ப்பனர்களோடல்ல. தவிரவும், நாடு இப்போது இருக்கிற நிலையில் இப்படிப் பேசலாமா? மக்கள் ஏற்கெனவே கொந்தளிப்பில் இருக்கிறபோது அதைத் தூண்டிவிடுற மாதிரிப் பேசுவது கலவரங்களை உண்டாக்காதா? சமூகத்தைப் பிளவுபடுத்துவதா நம் நோக்கம்?” என்று கூறியதாக அவர் பதிவு செய்துள்ளார்.

மேலும், 7.2.1948 அன்று ‘குடிஅரசு’ ஏட்டில் பெரியார் இப்படி எழுதினார்: “காந்தியாரின் இடத்தை நிறைவுசெய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை. மக்கள் தங்களது அரசியல், மத வேறுபாடுகளைக் கடந்து சகோதர பாவத்துடன் நடந்துகொள்வதே நாம் காந்தியாருக்குச் செய்யும் மரியாதையாகும். தென்னாட்டு திராவிடர்கள் இயல்பாகவே நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவ வைப்பர்!” 

அச்சமயம் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி அகில இந்திய வானொலியில் அவர் உரையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

அதனையடுத்து 22.2.1948 அன்றைய ‘விடுதலை’யில் இதுபற்றி விரிவாக எழுதினர் பெரியார். அதில், ‘பார்ப்பான் ஒருவன் சுட்டான் என்ற காரணத்திற்காக அந்தப் பார்ப்பனரைத் திட்டிவிடுவதாலோ அல்லது அந்தப் பார்ப்பன சமூகத்தையே அழித்துவிடுவதாலோ எத்தகைய உருப்படியான பலனும் ஏற்பட்டுவிடாது.

நான் கூறுகிறேன், சுட்டது பார்ப்பான் அல்ல, சுட்டது கைத் துப்பாக்கி. அந்த பார்ப்பான் மீது கோபித்துக் கொள்வதாயிருந்தால், அந்த அளவுக்கேனும் அந்தப் பார்ப்பானின் கைக்கருவியாக இருந்த அந்தத் துப்பாக்கியின் மீது நாம் கோபித்துக்கொண்டாக வேண்டும்; அதை முதலில் துண்டு துண்டாய் உடைத்துத் தூள்தூளாக்க வேண்டும்.

காந்தியாரைச் சுட்டுக்கொல்ல உதவியாயிருந்த துப்பாக்கியின் மீது நாம் எவ்வளவு கோபப்படலாமோ, எவ்வளவு பழிக்கலாமோ அந்த அளவுக்குத்தான் அதை உபயோகப்படுத்திய பார்ப்பான் மீதும் நாம் கோபித்துக்கொள்ள முடியும்; பழிக்க முடியும். அவனைப் பழிப்பதாயிருந்தால் அதே அளவுக்கேனும் அவன் பின்னாடி இருந்துகொண்டு, அவனுக்கு ஆதரவாய் இருந்த மற்றவர்களையும் பழிக்க நாம் சித்தமாயிருக்க வேண்டும்.

அவனும் அந்தத் துப்பாக்கிபோல், அவர்களுக்கு ஒரு கருவியாக அமைந்துவிட்டான். மதத்தின் பேரால் உள்ள மூடநம்பிக்கைக் கருத்துகளும் சாதியின் பேரால் உள்ள ஆசார அனுஷ்டானங்களும் மற்றும் கடவுள் சாஸ்திரம் இவைகள் பேரால் உள்ள அறியாமையுந்தான் இம்மாதிரிக் காரியத்தைச் செய்யும்படி அவனைச் செய்துவிட்டன. இனியேனும் இப்படிப்பட்ட காரியம் நடவாமல் இருக்க வேண்டும்.

அவனைத் தூக்கில் போட்டுவிடுவதாலோ அல்லது அவன் சேர்ந்திருந்த ஸ்தாபனத்தைக் கலைத்துவிடுவதாலோ அல்லது அவனுக்கு ஆதரவாயிருந்த அத்தனை பேரையும் அழித்துவிடுவதாலோ இப்படிப்பட்ட காரியம் நின்றுவிடாது. இவை வெறும் தற்காலிக சாந்தியாகத்தான் இருக்க முடியும். இது ஒருபோதும் நிரந்தரமான சாந்தியாகிவிடாது.

இப்படிப்பட்ட கொலைகாரர்கள் தோன்ற எது ஆதாரமாயிருந்ததோ அதை அழித்து ஒழிக்க வேண்டும். ஒரு சமுதாயத்தையோ அல்லது ஒரு கூட்டத்தையோ அல்லது ஒரு சாதியையோ அப்படியே அழித்துவிடுவதால் இக்கொடுமை மறைந்துபோகாது…

காந்தியாரைக் கொன்றது ஒரு பார்ப்பான் என்று கூறப்படுகிறது. சித்தானந்தரைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று கருதப்படுகிறது. இந்தப் பார்ப்பானோ அல்லது, அந்த முஸ்லிமோ தனியாகத் தோன்றி இப்படிப்பட்ட காரியங்களைச் செய்துவிட்டதாக நாம் கூறிவிட முடியாது.

இம்மாதிரிச் சம்பவங்கள் எத்தனையோ நடந்திருக்கின்றன என்பதற்குச் சரித்திர ஆதாரங்களே இன்றும் இருந்துவருகின்றன.

மதுரை மாநகரில் 8,000 சமணர்கள் சைவத்தை எதிர்த்ததற்காகக் கழுவேற்றப்பட்டார்கள். அவர்களைக் கழுவேற்றியவன் பார்ப்பான் அல்லன். முஸ்லிமும் அல்லன். பின் யார்? அன்றைய மதக் கருத்துப்படி அரசன் அவர்களைக் கழுவேற்ற ஆணையிட்டான். ஆகவே, அவனல்லன் கழுவேற்றியது; அவன் தழுவியிருந்த மதம்தான் அவர்களைக் கழுவேற்றும்படி அவனைத் தூண்டியது.

நமது சமுதாயம் இனிமேலும் சாந்தியோடு வாழ வேண்டுமானால், மதம் அற்ற ஒரு புது உலகத்தை நாம் சிருஷ்டிக்க வேண்டும்… திராவிடர் கழகம் கலகத்திற்கோ கொள்ளைக்கோ பலாத்காரத்திற்கோ இருந்துவரவில்லை.

அதுவும் திராவிடர் கழகம் எனது கைக்கு வந்தது முதற்கொண்டு, அதில் நான் சேர்ந்து தொண்டாற்றிவந்த நாள் முதற்கொண்டு இந்நாள் வரைக்கும் அதை எந்தவிதமான பலாத்காரத்திற்கோ பழிவாங்குவதற்கோ உபயோகப்படுத்தியவன் அல்லன். அத்தகைய செயலுக்கு அனுமதி கொடுத்தவனுமல்லன்.

திராவிடர் கழகத்தில் பலாத்காரத்திற்கு இடமில்லை. பலாத்கார உணர்ச்சி வேண்டுமென்று கருதிய சிலரையும்கூட திராவிடர் கழகத்தைவிட்டு நீக்கித் தண்டித்திருக்கிறோம். பலாத்காரத்திற்கு மட்டுமல்ல, நடத்தைக் குறைவுக்காகவும், ஒழுக்கக் குறைவுக்காகவும்கூடப் பலரைக் கழகத்தைவிட்டு வெளியேற்றியிருக்கிறோம்.

கழகத்தின் தலைவன் என்கிற முறையில் அதை மக்களின் அன்பிற்கும் நல்லெண்ணத்திற்கும் பாத்திரமான ஸ்தாபனமாக்கக் கவலையோடு நான் அதை நடத்திவருகிறேன்!” என்றுதான் எழுதியுள்ளார் பெரியார்” என்கிறார், சோழ. நாகராஜன்.

1 COMMENT

  1. பெரியாரைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு சங்கிகளுக்கு அறிவாற்றல் கிடையாது. இதற்கு இந்த இரண்டு சகோதரிகள் விதிவிலக்கு அல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...