இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. கூடவே 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் துருவ் ஜுரல். அதற்காக ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றிருக்கிறார்.
இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணியின் ஆதிக்கம் ஓங்கி இருந்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை குவிக்க, பதிலுக்கு 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்து தடுமாறிக்கொண்டு இருந்தது இந்தியா. இந்த நிலையில் இருந்து இந்தியாவை மீட்டவர் துருவ் ஜுரல். குல்தீப்புடன் இணைந்து மிகச்சிறப்பாக ஆடிய ஜுரல், 90 ரன்களைக் குவிக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 303 ரன்களை எடுத்தது.
முதல் இன்னிங்சில் ஜுரல் இவ்வளவு ரன்களை எடுக்காமல் இருந்தால், இந்திய அணி 200 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். இங்கிலாந்து அணி எளிதாக ஜெயித்திருக்கும். அந்த வகையில் இந்திய அணியை தோல்வியில் இருந்து மீட்டிருக்கிறார் துருவ் ஜுரல். அதோடு இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 5 விக்கெட்களை இழந்து தடுமாறியபோதும் கில்லுடன் இணைந்து இந்தியாவை ஜெயிக்க வைத்திருக்கிறார். அதற்கான பரிசுதான் ஆட்ட நாயகன் விருது.
இப்படி தனது முதல் தொடரிலேயே இந்தியாவை ஜெயிக்கவைத்த துருவ் ஜுரலின் சொந்த ஊர் ஆக்ரா. அவரது அப்பா நேம் சந்த், ஒரு ராணுவ வீர்ர். கார்கில் போரில் இந்தியாவுக்காக போரிட்டவர். சிறுவயதிலேயே தனது மகனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருப்பதை தெரிந்துகொண்ட நேம் சந்த், துருவை நோய்டாவில் உள்ள பூல் சந்த் என்ற கிரிக்கெட் பயிற்சியாளரிடம் சேர 13 வயதில் அவருக்கு அனுமதி கொடுத்துள்ளார்.
பயிற்சி முகாமில் சேர அனுமதி கொடுத்த நேம் சந்தால் ஒரு நாள்கூட மகனுடன் பயிற்சிக்கு துணையாக செல்ல முடியவில்லை. காரணம் அவரது வேலை. ஆனால் அப்பா உடன் வராமலேயே தினமும் பல கிலோமீட்டர்கள் தள்ளியுள்ள பயிற்சி முகாமுக்கு சென்று வந்துள்ளார் துருவ் ஜுரல். மற்ற குழந்தைகள் எல்லாம் பெற்றோருடன் வர, துருவ் ஜுரல் மட்டும் தனியாக வந்தது பயிற்சியாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வேளை ஜுரல் வீட்டை விட்டு ஓடிவந்திருப்பாரோ என்று நினைத்திருக்கிறார்.
பின்னர் துருவ், தனது அப்பாவின் போன் நம்பரை கொடுக்க, அவருடன் பேசிய பிறகுதான் அப்பாவின் சம்மத்த்துடன் அவர் பயிற்சி முகாமில் சேர்ந்தது பயிற்சியாளருக்கு தெரிந்துள்ளது. தனியாக பயிற்சிக்கு வரும் ஜுரலின் தைரியம் பிடித்துப் போக, அவருக்கு பிடித்த சிஷ்யனாகி இருக்கிறார்.
14 வயதிலேயே உள்ளூர் கிரிக்கெட்டில் ஹீரோவாகிப் போன ஜுரல், கிரிக்கெட் உலகில் பிரபலமானது 2020-ல் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில்தான். இந்த தொடரில் சிறப்பாக ஆடிஜ ஜுரல் 2022-ம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஐபிஎல்லில் சிறப்பாக ஆட, தேர்வாளர்களின் கவனம் இவர் மீது திரும்பியுள்ளது.
இந்தியாவின் நம்பர் 1 கீப்பரான பந்த் காயத்தால் வெளியேற, இஷான் கிஷன் மன இறுக்கத்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகி நிற்க, பரத் பேட்டிங்கில் சொதப்ப, தேர்வாளர்களின் 4-வது தேர்வாகத்தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக ஆடவந்தார் ஜுரல். தன் முதல் தொடரிலேயே இந்தியாவை வெற்றிபெற வைத்ததன் மூலம், எதிர்காலத்தில் ரிஷப் பந்துக்கே சவால் விடும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார்.