No menu items!

கலைஞர் நினைவிடம் திறப்பு – சிறப்பு என்ன?

கலைஞர் நினைவிடம் திறப்பு – சிறப்பு என்ன?

சென்னை மெரினா கடற்கரையில் ‘கலைஞர் உலகம்’ என்னும் பெயரில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் இன்று மாலை மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நினைவிடத்தை திறந்து வைக்கிறார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்கள் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடத்தின் நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் எதிரில் அமர்ந்து படிப்பது போன்ற தோற்றத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலை, வலபுறம் இளங்கோவடிகள், இடப்புறம் கம்பர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பேரறிஞர் அண்ணா துயில்கொள்ளும் சதுக்கத்தைக் கடந்து சென்றால், கலைஞர் அமர்ந்து எழுதும் வடிவிலான சிலையைக் காணலாம். சிலையைக் கடந்து சென்றால் எதிரே அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நினைவிடம், நம் நெஞ்சை ஒருக் கணம் அமைதி கொள்ளச் செய்கிறது.

கலைஞர் நினைவிடத்தில் “ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர், இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்” எனும் வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. கலைஞர் நினைவிடத்தின் முன்னே இருபுறமும், தமிழ் செம்மொழி என ஒன்றிய அரசு ஏற்ற முடிவைத் தெரிவித்துப் பாராட்டி, காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு 8112005 அன்று எழுதிய கடிதம் ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.

நினைவிடத்தின் கீழே நிலவறைப் பகுதியில், “கலைஞர் உலகம்” எனும் பெயரில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. ‘கலைஞர் உலகம்’ பகுதியில் இடப்புறம் சென்றால், நடைபாதையின் வலப்புறத்தில், கலைஞர் நிர்மாணித்த திருவள்ளுவர் சிலை, குடிசை மாற்றுவாரியம் முதலியவை படங்களாக அமைக்கப்பட்டு விளக்கொளியுடன் மிளிர்கின்றன. உள்ளே வலப்பக்கம் திரும்பினால், இடப்பக்கச் சுவரில் தமிழ்த்தாய் வாழ்த்து பொறிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ்ப்புறம், ‘தமிழ்த்தாய் வாழ்த்து அரசு நிகழ்ச்சிகளில் பாடப்பட வேண்டும்’ என்று 23.11.1970 அன்று கலைஞர் பிறப்பித்த அரசாணையும், ‘தமிழ்த் தாய் வாழ்த்து மாநிலப் பாடல்’ என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 17.12.2021 அன்று பிறப்பித்த அரசாணையும், அவர்களின் படங்களுடன் இடம் பெற்றுள்ளன.

‘கலைஞரின் எழிலோவியங்கள்’ எனும் அறையில் கலைஞரின் இளமைக் காலம் முதல், அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், கலைஞரின் படைப்புகள், அவர் சந்தித்த போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப் படங்கள் அமைந்துள்ளன. அடுத்து, கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் அமர்ந்திருக்கும் தோற்றம் அருகில் நின்று புகைப்படம் எடுக்கலாம். சில நிமிடங்களில் புகைப்படம் நமக்கும் கிடைக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. வலப்புறத்தில் கலைஞரின் மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த அறையில், “சரித்திர நாயகனின் சாதனைப் பயணம்” தலைப்புடையது. அதில் நுழைந்தால் திருவாரூர் முதல் சென்னை வரை ரயிலில் பயணிப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும். நாம் அமர்ந்த நிலையில், தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் ரயில் நிலையங்களைக் கடந்து சென்னையை அடையலாம். அந்தந்த ஊர்களில் கலைஞர் வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகள் காட்சிகளாகத் தோன்றும். வழியில் யானையொன்று நாம் பயணிக்கும் ரயில் பாதையை மறித்து நின்று நமக்கு வணக்கம் செலுத்தி, வாழ்த்துவது நம்மை மெய் சிலிர்க்க வைத்திடும். அறைகளுக்கு வெளியே அமைந்துள்ள நடையில் இருபுறங்களிலும், பெண்ணியக் காவலர், ஏழைப் பங்காளர், நவீன தமிழ் நாட்டின் சிற்பி, உலகளாவிய ஆளுமைகளுடன் கலைஞர் முதலான தலைப்புகளில் அமைந்த அரிய புகைப்படங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் 5 தொலைக்காட்சிப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. நேர் எதிரே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் தோன்றும் அருமையான புகைப்படம் பெரிய அளவில் அமைந்து, “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி” எனும் குறள் தொடரைத் தலைப்பாகக் கொண்டுள்ளது. இப்பகுதியின் இறுதியில் காந்தவிசையைப் பயன்படுத்தி அமர்ந்த நிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் அந்தரத்தில் மிதக்கும் காட்சி, நம்மை அற்புத உலகிற்கு அழைத்துச் செல்லும். நடை பாதையை விட்டு, வெளியே வந்தால், நேர் எதிரே கலைஞர் புத்தக விற்பனை நிலையம் அமைந்துள்ளது. அங்கே, கலைஞர் எழுதிய நூல்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நினைவிடம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள கவிதை:

கலைஞரின்
கையைப் பிடித்துக்கொண்டே
கலைஞர் நினைவிடம்
சுற்றிவந்த உணர்வு

இது தந்தைக்குத்
தனயன் எழுப்பிய மண்டபமல்ல
தலைவனுக்குத்
தொண்டன் கட்டிய தாஜ்மஹால்

‘இப்படியோர் நினைவிடம்
வாய்க்குமென்றால்
எத்தனை முறையும் இறக்கலாம்’

கலைஞர் கண்டிருந்தால்
கவிதை பாடியிருப்பார்

உருவமாய் ஒலியாய்
புதைத்த இடத்தில்
கலைஞர் உயிரோடிருக்கிறார்

உலகத் தரம்
நன்றி தளபதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...