No menu items!

இன்சூரன்ஸ் பணம் பெற கொடூரம்: நண்பரை எரித்துகொன்று கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய வாலிபர்

இன்சூரன்ஸ் பணம் பெற கொடூரம்: நண்பரை எரித்துகொன்று கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய வாலிபர்

இன்சூரன்ஸ் பணம் ஒரு கோடி ரூபாய் பெறுவதற்காக நண்பரை எரித்துகொன்று கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த அல்லாணூர் பகுதியில் செப்டம்பர் 15ஆம் தேதி, குடிசை வீடு எரிந்து அதன் உள்ளே உடல் கருகிய நிலையில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஒரத்தி போலீசார் சென்று சடலத்தை மீட்டதுடன் அவர் கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்துகொண்டாரா என்று விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இதுசம்பந்தமாக கொலை செய்யப்பட்டவர் நண்பரும் சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவருமான சுரேஷ் (வயது 38) என்பவரை கைது செய்தனர். மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த வேலூர் மாவட்டம் கலாஸ்பாளையம் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (32), தாம்பரம் அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த கீர்த்திராஜன் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

சுரேஷ் மற்றும் குடிசை வீட்டில் இறந்து கிடந்த டில்லிபாபு ஆகியோர் நண்பர்கள். சென்னையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்தில் சுரேஷ் பயிற்சியாளராக இருந்துள்ளார். மேலும் இவர் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விபத்து காப்பீடு திட்டத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் இன்சூரன்ஸ் செய்து உள்ளார். இந்த தொகையை, தான் உயிருடன் இருக்கும்போதே பெற்று அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தன் வயதுடைய நபர் ஒருவரை கொலை செய்துவிட்டு தானே இறந்துப்போனதாக தெரிந்தால் இன்சூரன்ஸ் பணத்தை பெற முடியும் என்று முடிவு செய்து இதற்காக பல மாதங்களாக தன் வயதுடைய ஒரு நபரை தேடி வந்துள்ளார். அந்த சமயத்தில்தான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த டில்லிபாபுவின் நினைவுவந்துள்ளது.

டில்லிபாபுவை பற்றி விசாரித்தபோது எர்ணாவூர் பகுதியில் வசித்துவருவது தெரிந்ததும் சுரேஷ், தனது கூட்டாளிகள் ஹரிகிருஷ்ணன், கீர்த்திராஜனுடன் டில்லிபாவு வீட்டுக்கு சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அவரது வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு டில்லிபாபுவின் தாய் லீலாவதி உள்பட குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் மிகவும் அன்பு, பாசமாக பழகி வந்துள்ளனர்.

கடந்த செப் 9ஆம் தேதி வெளியில் சென்று வரலாம் என்று டில்லிபாபுவை அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து பைக்கில் மேல்மருவத்தூர் வந்து பைக்கை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து பஸ்சில் புதுச்சேரிக்கு சென்று மதுவாங்கிக்கொண்டு மீண்டும் மேல்மருவத்தூர் வந்து பைக்கை எடுத்துக்கொண்டு அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள அல்லாணூர் பகுதிக்கு வந்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே, அந்த பகுதியில் வீட்டுமனை வாங்கி அதில் குடிசை வீடு கட்டியிருந்தனர். ஏற்கனவே திட்டமிட்டபடி ஹரிகிருஷ்ணன், கீர்த்திராஜன் ஆகியோர் சம்பவம் நடந்த கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி வந்துள்ளனர். அங்கு அனைவரும் குடிசை வீட்டில் மது அருந்தியுள்ளனர். அப்போது சுரேஷ், ஹரிகிருஷ்ணன், கீர்த்திராஜன் ஆகியோர் டில்லிபாபுவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததுடன் சடலத்தை குடிசை வீட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி குடிசையை கொளுத்தியுள்ளனர்.

இதன்பின்னர் திருத்தணி அருகே திருவாலங்காடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்துள்ளனர்.  இதனிடையே சுரேஷின் அக்கா மரிய ஜெயஸ்ரீ (வயது 40) இதுபற்றி ஒரத்தி போலீசில் புகார் அளித்துவிட்டு செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து டில்லிபாபுவின் சடலத்தை சுரேஷ் சடலம் என்று பெற்று அயனாவரம் பகுதிக்கு கொண்டுவந்துள்ளார். பின்னர் அங்குள்ள சுடுகாட்டில் அனைத்து இறுதி சடங்குகளும் செய்துவிட்டு டில்லிபாபுவின் உடலை அடக்கம் செய்துள்ளார். இதன்பிறகு சுரேஷ் உயிரிழந்துவிட்டதாக அயனாவரம் பகுதி முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி மக்களை நம்ப வைத்துள்ளனர்.

தொடர்ந்து, இன்சூரன்ஸ் பணம் ஒரு கோடியை பெறுவதற்காக சுரேஷ் உடனடியாக வேறு ஒரு நபர் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளார். அதற்கு இன்சூரன்ஸ் நிறுவனம், ‘‘இவ்வழக்கு தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதால் பணம் பெற முடியாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்த நபர் தெரிவித்தவுடன் சுரேஷ் மற்றும் அவது நண்பர்கள் பணம் கிடைக்காது என்பது தெரிந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனிடையே, கொல்லப்பட்ட டில்லிபாபுவின் தாய் லீலாவதி, கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி நண்பர்களுடன் வெளியே சென்ற தனது மகனை காணவில்லை என்று எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன்படி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஆனால், விசாரணை தாமதமானதால் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் கொடுத்துவிட்டு இதுசம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் டில்லிபாபுவை கண்டுபிடித்து தரவேண்டும் என்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தபோது வழக்கு விசாரணை வேகமாக நடைபெற்றது.

இதுசம்பந்தமாக டில்லிபாபுவின் அண்ணன் பழனி, லீலாவதியிடம் விசாரணை நடத்தியபோதுதான் சுரேஷ், ஹரிகிருஷ்ணன், கீர்த்திராஜன் ஆகியோருடன் டில்லிபாபு சென்றார் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, அரக்கோணம் பகுதியில் தங்கியிருந்த சுரேஷ், ஹரிகிருஷ்ணன், கீர்த்தி ராஜன் ஆகியோரை கைது செய்தனர்.

இதில், சுரேஷ் தனது இன்சூரன்ஸ் பணம் ஒரு கோடியை பெறுவதற்காக தனது நண்பர்கள் கீர்த்திராஜன், ஹரிகிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டியதுடன் இன்சூரன்ஸ் பணத்தில் தலா 20 லட்சம் ரூபாய் தருவதாக தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில்தான் குடிசை வீட்டில் டில்லிபாபுவை எரித்து கொலை செய்துள்ளனர்.

காவல்துறையினர்,  இதன்பிறகு 3 பேரையும் மதுராந்தகம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...