No menu items!

காங்கிரஸ் 3 பாஜக 1 ஊசல் 1 – தேர்தல் கருத்துக் கணிப்பு சொல்வதென்ன?

காங்கிரஸ் 3 பாஜக 1 ஊசல் 1 – தேர்தல் கருத்துக் கணிப்பு சொல்வதென்ன?

5 மாநில தேர்தலுக்கான பிரச்சாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த மாநிலங்களில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கருத்துக்கணிப்பை விஎம்ஆர் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து கேரளாவின் புகழ்பெற்ற நாளிதழான மலையாள மனோரமா நடத்தியுள்ளது. தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் பாஜகவின் கை சற்று தாழ்ந்து வருவதாக இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளைப் பார்ப்போம்…

மத்திய பிரதேசத்தில் முந்தும் காங்கிரஸ்

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கும், வாக்கு சதவீதமும் உயர்ந்திருப்பதாக மனோரமா நாளிதழ் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. இம்மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 40.89 சதவீதமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் இப்போது 42.11 சதவீதமாக உயர்ந்திருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேசமயத்தில் 2018-ல் 41.02 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் இப்போது 40.3 சதவீதமாக குறைந்துள்ளது. அதனால் இந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 120 முதல் 130 இடங்கள் வரை வெல்லும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பாஜகவுக்கு 95 முதல் 105 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு 3 முதல் 7 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.

ராஜஸ்தானில் பாஜகவுக்கு வாய்ப்பு

மத்திய பிரதேசத்தில் வெற்றிமுகம் கண்டுள்ள காங்கிரஸ், ராஜஸ்தான் மாநிலத்தில் சரிவை சந்திக்கிறது. இம்மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு 39.3 சதவீத வாக்குகளை பெற்ற காங்கிரஸ், இந்த தேர்தலில் 37.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த தேர்தலில் 38.8 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக, இந்த தேர்தலில் 43.6 சதவீத வாக்குகளை பெற வாய்ப்புள்ளது.

இதனால் இத்தேர்தலில் மொத்தமுள்ள 200 இடங்களில் பாஜக 114 தொகுதிகளையும், காங்கிரஸ் கட்சி 71 தொகுதிகளையும் பிடிக்க வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சட்டீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ்

கடந்த 2018-ம் ஆண்டில் பாஜகவிடம் இருந்து சட்டீஸ்கர் மாநிலத்தை வென்ற காங்கிரஸ் கட்சி, இந்த முறை மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இம்மநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 53 முதல் 58 இடங்கள் வரை பிடிக்கும் என்றும், பாஜக 28 முதல் 34 இடங்கள் வரை மட்டுமே பிடிக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மற்ற கட்சிகள் 7 இடங்கள் வரை பெறும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

தெலங்கானாவில் வலுப்பெறும் காங்கிரஸ்

தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலைவிட வலிமையாக இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2014-ம் ஆண்டில் 19 இடங்களை மட்டுமே பெற்ற காங்கிரஸ், இம்முறை 52 முதல் 55 இடங்கள் வரை வெல்லும் என்று தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு 47 முதல் 52 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் அக்கட்சி தெலங்கானாவில் 88 இடங்களை வென்றிருந்தது.

கடந்த முறை 1 தொகுதியில் மட்டுமே வென்ற பாஜக, இம்முறை 9 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இருப்பினும் மொத்தம் 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்று இந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

மிசோரமில் தொங்கு சட்டமன்றம்

தெலங்கானா மாநிலத்தைப் போலவே மிசோரம் மாநிலத்திலும் எந்த கட்சியும் ஆறுதிப் பெரும்பான்மை பெறும் சூழல் இல்லை. இங்குள்ள 40 தொகுதிகளில் ஆளும் பஜக – மிசோ தேசிய முன்னணிக்கு 13 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 14 இடங்களும், சோரம் மக்கள் இயக்கத்துக்கு 12 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...