No menu items!

49 சதங்கள் – சும்மா கிடைக்கவில்லை விராட் கோலிக்கு!

49 சதங்கள் – சும்மா கிடைக்கவில்லை விராட் கோலிக்கு!

கிரிக்கெட் உலகில் உச்சாணிக் கொம்பில் ஏறியிருக்கிறார் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 49 சதங்களை அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்திருக்கிறார். இந்த உச்சம் தொட அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. அதில் சிலவற்றைப் பார்ப்போம்

லஞ்சம் கேட்ட தேர்வாளர்கள்

இன்றைய தினம் இந்திய அணியின் மிக முக்கிய ஆட்டக்காரராக விராட் கோலி இருக்கிறார். அவர் இல்லாத ஒரு ஆட்டத்தை இந்திய அணியால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஆனால் ஒரு காலகட்டத்தில் ரஞ்சி கோப்பை தொடரில் டெல்லி அணிக்காக கோலியை ஆடவைக்க, அவரது அப்பா பிரேம் கோலியிடம் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள் சில கிரிக்கெட் புரோக்கர்கள். இதைக் கேட்டதும் அவர் கொதித்துப் போயிருக்கிறார்.

லஞ்சம் கொடுக்கும் அளவுக்கு பிரேம் கோலியிடம் வசதி இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதைக் கொடுக்க மனம் இல்லை என்பதே முக்கியமானதாக இருந்தது. தனது மகன் எதையும் போராடித்தான் அடைய வேண்டும்.

அப்போதுதான் அதன் அருமை மகனுக்கு தெரியும் என்று உறுதியாய் நம்பினார் பிரேம் கோலி.
“லஞ்சம் கொடுத்துதான் என் மகனுக்கு அணியில் இடம் கிடைக்க வேண்டுமென்றால், அந்த இடம் அவனுக்கு தேவையில்லை” என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதனால் கோலியின் வாய்ப்பு தட்டிப் போனது. தந்தையின் பிடிவாதத்தால் தன் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், துவண்டு போனார் விராட் கோலி. அதற்காக 3 நாட்கள் தந்தையிடம் பேசாமல், ஒழுங்காகச் சாப்பிடாமல் அழுதிருக்கிறார். இந்த கட்டத்தில் நேர்மையாக ஆடி அணியில் இடம்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை அவரது தந்தை எடுத்துக்கூற சமாதானம் ஆகியுள்ளார்.

தந்தை கூறிய வழியில் கடுமையாக உழைத்த விராட் கோலியை கிரிக்கெட் ஏமாற்றவில்லை. 2006-ம் ஆண்டில் தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போட்டியில் 10 ரன்களை மட்டுமே எடுத்தபோதிலும் அடுத்தடுத்த ஆட்டங்களில் சிறப்பாக ஆடி இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

கோலியை நிராகரித்த டெல்லி

2008-ம் ஆண்டில் ஐபிஎல் தொடர் தொடங்கிய காலகட்டத்தில் சச்சின், கங்குலி, தோனி, யுவராஜ் சிங், ஷேவாக் போன்ற வீர்ர்களுக்குதான் ஏகப்பட்ட கிராக்கி இருந்தது. அப்போது விராட் கோலியை யாரும் சீந்தவில்லை.

விராட் கோலி டெல்லியைச் சேர்ந்தவர் என்பதால், டெல்லி டேர்டெவில்ஸ் அணி அவரை அதிக விலைக்கு வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்லி அணியோ, விராட் கோலி மீது ஆர்வம் காட்டவில்லை. வீரேந்தர் ஷேவக், கவுதம் காம்பீர், டிவில்லியர்ஸ், ஷிகர் தவன் என்று நன்றாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் அணியில் நிறைய இருப்பதாக நினைத்த அணி நிர்வாகம், ஏலத்தில் கோலியை சட்டை செய்யவில்லை. மாறாக அப்போதைய இளம் பந்துவீச்சாளரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டவருமான பிரதீப் சங்வானை வாங்கியது.
ஐபிஎல்லில் முதல் சம்பளம் ரூ.12 லட்சம்

டெல்லி அணி விராட் கோலியை கைவிட்ட நிலையில் அவர் நம்பிக்கை வைத்து, மிகக் குறைந்த விலையான 12 லட்ச ரூபாய்க்கு விராட் கோலியை வாங்கியது பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ். இந்த காலகட்டத்தில் தோனிக்கு சிஎஸ்கே அணி நிர்ணயித்த விலை 6 கோடி ரூபாய்.

தனக்குக் கிடைத்த தொகை சிறிதாக இருந்தாலும், கோலி அதற்காக கவலைப்படவில்லை. அவரது நோக்கமெல்லாம் பெரிய தொகைக்கு ஏற்றதாக தன்னை தயார்படுத்திக்கொள்வதில் இருந்தது. அதற்காக அவர் கடுமையாக உழைக்கத் தொடங்கினார். அந்த உழைப்புதான் இன்று விராட் கோலியை உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.

அம்மா கையால் சாப்பிடுவதை தவிர்த்தார்

ஒரு காலகட்டத்தில் விராட் கோலி சாப்பாட்டுப் பிரியராக இருந்தார். அதிலும் அசைவ உணவுகளை ஒரு பிடி பிடிப்பார். அதனாலேயே கொழுக் மொழுக்கென்று குண்டாக இருப்பார். ஒரு கட்டத்தில் அந்த உடல் அமைப்புதான் தனக்கு முக்கிய எதிரி என்று அறிந்துகொண்டார் விராட் கோலி.

அடுத்த நாள்முதல் உடல் நலனில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அள்ளி அள்ளி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்ட கோலி, கிள்ளிச் சாப்பிட ஆரம்பித்தார். தனது மகன் சாப்பாட்டை குறைத்ததும், மெலிந்து வருவதும் கோலியின் அம்மா சரோஜ் கோலிக்கு கவலையை ஏற்படுத்தியது.

மகன் கோலியை பழையபடி சாப்பிடவைத்து எப்படியாவது குண்டாக்க வேண்டும் என்று நினைத்த சரோஜ் கோலி, சமையலில் கற்ற மொத்த வித்தைகளையும் பயன்படுத்தினார். தினந்தோரும் டைனிங் டேபிளில் கோலிக்கு பிடித்த விஷயங்களாக சமைத்து அடுக்கினார். கோலிக்கு அதுவே அக்னிப் பரீட்சையானது. தனக்குப் பிடித்த உணவுகள் ஒரு பக்கம், கிரிக்கெட் வாழ்க்கை மறுபக்கம் என எந்தப் பக்கம் போவது என்று புரியாமல் தவித்தார். உணவை விட கிரிக்கெட் மீதான காதல் அதிகமாக இருந்ததால், அம்மா சமைத்த அருமையான உணவுகளைத் தவிர்த்தார். இது அவரது அம்மாவின் கவலையை மேலும் அதிகப்படுத்தியது. ஒரு கட்டத்தில் தனது மகனுக்கு ஏதாவது நோய் வந்துவிட்டதோ என்றுகூட கோலியின் அம்மா பயந்தார். பிறகு கோலி அவருக்கு தனது நிலையை விளக்கி ஆசுவாசப்படுத்தினார்.

சச்சினிடம் பெற்ற பயிற்சி

2014-ம் ஆண்டில் மற்ற ஆண்டுகளைப்போல் அவரால் ஒரு கட்டத்தில் ரன்களைக் குவிக்க முடியவில்லை. அதிலும் அந்த ஆண்டில் இங்கிலாந்து தொடரில் மிக மோசமான முறையில் பேட்டிங் செய்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஆண்டர்சனின் நிரந்தர இரையாகவே மாறினார்.

இந்த டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் ஆடிய விராட் கோலி மொத்தமாகவே 134 ரன்களைத்தான் குவித்தார். இந்த தொடரில் அவர் எடுத்த சராசரி ரன்களே 13.40தான். 1, 8, 25, 0, 39, 28, 0, 7, 6 என ஒவ்வொரு இன்னிங்ஸிலும் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்தார். கோலியின் கதை அத்தோடு முடிந்தது என்று பலரும் பெட் கட்டினார்கள். அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். ஆனால் இம்முறையும் கேப்டன் தோனி, அவருக்கு துணையாக இருந்தார். இதன் காரணமாக அணியில் இருந்து நீக்கப்படாமல் அவரது தலை தப்பியது.

தலை தப்பினாலும் தன்னால் ரன்களைக் குவிக்க முடியாதது கோலிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டார். சச்சினிடம் ஆலோசனை கேட்டார். பேட்டிங் பயிற்சியின்போது பல மணிநேரம் அவருடன் இருந்து சில நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார் சச்சின். விராட் கோலியும் தன் பேட்டிங் பயிற்சிக்கான நேரத்தை இரட்டிப்பாக்கினார்.

இங்கிலாந்தில் விட்டதற்கெல்லாம் சேர்த்து ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் வெளுத்து வாங்கினார். இத்தொடரில் 86.50 என்ற சராசரியுடன் தன் பேட்டிங் திறமையை மீண்டும் நிரூபித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...