No menu items!

விஜய்யின் ‘நண்பன் கொசக்சி பசபுகழ்’ உண்ணாவிரதம்

விஜய்யின் ‘நண்பன் கொசக்சி பசபுகழ்’ உண்ணாவிரதம்

‘நண்பன்’ திரைப்படத்தில் விஜய் நடித்த கொசக்சி பசபுகழ் காதாபாத்திரத்தின் வாழும் உதாரணமான சோனம் வாங்சுக் லடாக்கில் 21 நாள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருக்கிறார். இன்று அவரது உண்ணாவிரதம் 13ஆம் நாளை எட்டியிருக்கிறது. ஏன் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருக்கிறார்?

யார் இந்த சோனம் வாங்சுக்?

இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியான ‘3 இடியட்ஸ்’ படத்தை தழுவியே தமிழில் விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கிய ‘நண்பன்’ உருவானது. இந்தியில் அமீர்கான் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் விஜய் நடித்திருந்தார். விஜய் அதுவரை ஏற்றிராத புதுமையான ‘பஞ்சவன் பாரிவேந்தன் என்கிற கொசக்சி பசபுகழ்’ கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரம் நிஜமான நாயகன் ஒருவரை முன்மாதிரியாக கொண்டே உருவாக்கப்பட்டது. அமீர்கான் – விஜய் இருவரும் நடித்த அந்த வித்தியாசமான கதாபாத்திரத்தின் நிஜ வடிவம்  லடாக்கைச் சேர்ந்த பொறியாளர் சோனம் வாங்சுக்.

சோனம் வாங்சுக்கின் தந்தை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைச்சராக இருந்தவர். ஆனாலும், முறையாக பள்ளியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிட்டாமல் 9 வயது வரை பள்ளிப் பக்கமே தலைவைக்காத சோனம் வாங்சுக், தன் தாயிடமே தாய்மொழி வாயிலாக வாழ்க்கைப் பாடத்தை பயின்றார். அதன் பின்னர் பள்ளியில் சேர்ந்த போதும், மொழிப் பிரச்சினை காரணமாக பலரின் தூற்றுதல்களுக்கு ஆளானார். பின்னர் சரியான ஆசிரியரின் அரவணைப்பு காரணமாக சிறந்த மாணவராக உருவாகி ஸ்ரீநகர் தேசியப் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்துப் பட்டம் பெற்றார்.

இஞ்சினியரிங்கில் உச்ச மதிப்பெண்களை பெற்றிருந்தபோதும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் காத்திருந்தபோதும், ‘நண்பன்’ கிளைமாக்ஸில் வருவதுபோல் லடாக்கில் வித்தியாசமான ஒரு பள்ளியை ஆரம்பித்து குழந்தைகளை வளர்த்தெடுத்தார் சோனம்.

ஏன் சோனம் இந்தப் பள்ளியைத் தொடங்கினார் என்பதையும் இஞ்சினியரிங்கில் சிறந்த மாணவராக வெளிவந்த சோனம் ஏன் ஆரம்ப பள்ளி நாட்களில் படிக்க சிரமப்பட்டார் என்பதையும் புரிந்துகொள்ள, கொஞ்சம் ஜம்மு – காஷ்மீர் வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 2019 ஆகஸ்டு மாதம், மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் – லடாக் என்னும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதில் ஜம்மு காஷ்மீர் – பாண்டிச்சேரி போல சட்டசபையைக் கொண்ட யூனியன் பிரதேசமாகவும், லடாக் – சண்டிகரைப் போல, நேரடியாக ஒன்றிய அரசுப் பிரதிநிதியால் நிர்வகிக்கப்படும் பகுதியாகவும் அறிவிக்கப்பட்டன.

யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதற்கு ஜம்மு காஷ்மீரில் எதிர்ப்பு இருந்தபோது, லடாக்கில் 3 லட்சம் மக்கள்தொகை கொண்ட லடாக்கி சமூகம் அதை வரவேற்றுக் கொண்டாடியது. அதற்குக் காரணம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது, லடாக்கி கலாச்சாரம் மற்றும் மொழி போன்றவற்றுக்கு சரியான அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. லடாக்கிக் குழந்தைகள், அவர்கள் தாய்மொழியை விட்டு, உருது மொழியில் பள்ளிக் கல்வி பயில வேண்டியிருந்தது. இதனால் 95% லடாக்கி குழந்தைகள் பள்ளி இறுதித் தேர்வையே தாண்ட முடியாதவர்களாக இருந்தார்கள்.

இந்நிலையில்தான், லடாக்கி மாணவர்கள் கல்வி பெறச் சிரமப்படுவதைக் கண்டு, அவர்கள் பள்ளி இறுதித் தேர்வைத் தாண்ட பயிற்சி தரத் தொடங்கினார், சோனம் வாங்சுக். அது பின்னாளில், லடாக்கிய மாணவர்கள் கல்வி மற்றும் பண்பாட்டு இயக்கம் (Students’ Educational and Cultural Movement of Ladakh – SECMOL) என்னும் இயக்கமாக மலர்ந்தது.

மாணவர்கள் உள்ளூரிலேயே கல்வி பயில தனது செக்மோல் (SECMOL) நிறுவனத்தின் மூலம் ஒரு கல்வி நிலையத்தையும் உருவாக்கினார். இந்தக் கல்வி நிலையம், உள்ளூரின் கிடைக்கும் பொருட்களை வைத்தே கட்டப்பட்டது. இதன் வடிவமைப்பு, கிடைக்கும் சூரிய வெளிச்சத்தை உள்வாங்கி அதன் மூலம் மொத்தக் கல்வி நிலையத்துக்கும் தேவையான வெப்ப ஆற்றலை உருவாக்குவதாக அமைக்கப்பட்டது. வெளியே -20 டிகிரி குளிர் இருக்கையில், கட்டிடத்தின் உள்ளே +15 டிகிரி வெப்பம் கிடைக்குமாறு உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடம், உலகின் சுற்றுச்சூழலுக்கு இயைந்த கட்டிடம் எனப் போற்றப்பட்டு, பல விருதுகளைப் பெற்றது. சூரிய ஆற்றலினால் இயங்கும் உணவகம், சூரிய ஒளி மின்சாரம் என, இந்தக் கட்டிடம் 100% தற்சார்பு கொண்ட ஒன்றாகும். அப்படித்தான் இவரைப் பற்றி அறிந்து, இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘3 இடியட்ஸ்’ படத்தை உருவாக்கினார் அமீர்கான்.

சோனம் புகழ் பரவ மத்திய மாநில அரசுகள் அவரிடம் ஆலோசனை கேட்கும் அளவுக்கு உயர்ந்தார். 2005ஆம் ஆண்டு, தொடக்கக் கல்விக்கான தேசிய நிர்வாகக் குழுவில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லடாக் மலை மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினராக இணைந்து, கல்வி மற்றும் சுற்றுலாத் துறைக்கான நீண்ட காலத் திட்டங்களைத் தீட்டும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, அரசுக் கல்வித் துறையின் உதவியோடு ‘புதிய நம்பிக்கை’ என்னும் திட்டத்தைத் தொடங்கினார். லடாக்கிய பள்ளிக்கல்வியை எளிமையாக்கவும், லடாக்கியக் குழந்தைகளுக்கு தாய்மொழியில் கல்வியைத் தரவும் உழைத்தார். இதன் வழியே, லடாக்கி மாணவர்கள் தேர்வுகளில் எளிதாக வெற்றிபெற முடிந்தது.

இன்னொரு பக்கம் லடாக்கின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு எளிதான, தீர்வுகளை சோனம் வாங்சுக் உருவாக்கினார். பூமி வெப்பமாதலின் காரணமாக, லடாக் மலைகளில் பனிப்பாளங்கள் உருகி, லடாக் மலைப்பகுதிகளில் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட, பொதுமக்கள் பாதிக்கப்பட்டார்கள். சோனம் வாங்சுக், குளிர்காலத்தில் வரும் அதீத நீரை மடைமாற்றி, செயற்கையாகப் பனிப் பாளங்களை உருவாக்கினார். இவை ஸ்தூபிகள் வடிவில் அமைந்ததனால், அவை ‘பனி ஸ்தூபிக’ என அழைக்கப்பட்டன. இந்தப் பனி ஸ்தூபிகள், கோடைகாலத்தில் உருகி, மக்களுக்குத் தேவையான நீரை அளித்தன. இதன் மூலம் உள்ளூர் மக்களின் நீர்த் தேவை பூர்த்திசெய்யப்பட்டது.

சமூக இயக்கத்தின் அடுத்தபடியாக நவ லடாக்கிய இயக்கம் (New Ladaki Movement) என்னும் அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார் சோனம் வாங்சுக். இது லடாக்கின் கல்வி, பொருளாதார, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான முயற்சிகளை முன்னெடுக்கும் இயக்கமாகும்.

‘நண்பன்’ படத்தில் கொசக்சி பசப்புகழ் (விஜய்), அடிக்கடி `ஆல் இஸ் வெல்’ என சொல்வார். அந்த வசனம் மிகப் பிரபலமானது. இதுவும், சோனம் வாங்சுக்கின் நிஜ வாழ்க்கையை ஒட்டிய விஷயம்தான்.

இப்போது சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் ஏன்?

லடாக் 2019ஆம் ஆண்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டபோது வரவேற்றாலும், லடாக் மக்களும் கார்கில் மக்களும் இணைந்து, தங்களுக்கான ஒரு தன்னாட்சி அமைப்பை வழங்குமாறு தொடர்ந்து போராடி வருகிறார்கள். லடாக் பிரதேசத்தை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 6வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கியக் கோரிக்கை. 6ஆவது அட்டவணையில் லடாக் சேர்க்கப்பட்டால் தன்னாட்சி பெற்ற மாவட்ட, பிராந்திய கவுன்சில்களை லடாக் பகுதி உருவாக்கிக்கொள்ள முடியும். அந்தக் கவுன்சில்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் மக்களின் பிரதிநிதிகள் இருப்பார்கள். வனப்பகுதி நிர்வாகம், வேளாண்மை, கிராம – நகர நிர்வாகம், திருமணம், விவாகரத்து, சமூகப் பழக்க வழக்கங்கள் தொடர்பான விஷயங்கள் முதலியவற்றை அவர்களே நிர்வகித்துக்கொள்ளும் அதிகாரம் இந்தக் கவுன்சில்களுக்குக் கிடைக்கும்.

லடாக்கை அரசமைப்புச் சட்டத்தின் 6ஆவது பிரிவில் இணைப்பது தொடர்பாக பாஜக கடந்த காலத் தேர்தல்களில் வாக்குறுதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  ஆனால், இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

“இன்று லடாக் எங்கள் மக்கள் பிரதிநிதிகளால் ஆளப்படாமல், தொலைதூரத்தில் இருக்கும் டெல்லி அரசின் பிரதிநிதியால் ஆளப்படுகிறது. இதனால், லடாக் ஏதோ காலனி அரசின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு பகுதி போல உள்ளது” என்கிறார் சோனம் வாங்சுக்.

இது தொடர்பாக, லடாக் மற்றும் கார்கில் மக்கள் குழுக்கள் ஒன்றிய அரசின் துணைக் குழு மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சருடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள். அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்ட நிலையில்தான், மகாத்மா காந்தியின் கொள்கைகளில் பெருவிருப்பம் கொண்ட வாங்சுக், கடந்த 6-3-24 அன்று முதல் 21 நாட்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினார். மைனஸ் 10-15 டிகிரி குளிரில் திறந்த வெளியில் இந்தப் போராட்டம் நடந்துவருகிறது.

சோனம் உண்ணாவிரதத்தைத் தொடங்கி 13 நாட்கள் கடந்துவிட்டது.  லடாக் மற்றும் கார்கில் மக்களின் ஏகோபித்த ஆதரவும் இவருக்கு இருக்கிறது. ஆனாலும், இதுவரை மத்திய அரசு இறங்கி வரவில்லை. All is well என்ற சோனம் All is not well என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...