No menu items!

யார் வேட்பாளர்? – திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது?

யார் வேட்பாளர்? – திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது?

அறிவாலயம் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறது.

யார் எந்தத் தொகுதி வேட்பாளர் என்பதை குறித்து கிசிகிசுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சில தொகுதிகளை காங்கிரசுக்கு கொடுத்ததிலும் காங்கிரசிடமிருந்து பெற்ற தொகுதிகள் குறித்தும் வருத்தங்கள் இருக்கிறது.

மயிலாடுதுறையை காங்கிரஸ்க்கு கொடுத்ததில் தஞ்சாவூர்க்காரர்களுக்கு வருத்தம் இப்போதைய எம்.பி.யாக இருக்கும் ராமலிங்கம் அந்த மாவட்டத்தில் திமுகவின் முன்னணி தலைவர் அவருடைய இடத்தை காங்கிரஸ்க்கு கொடுத்திருக்கக் கூடாது என்ற கருத்துக்கள் திமுகவில் இருக்கிறது. முன்பு மயிலாடுதுறையில் காங்கிரசின் மணிசங்கர் அய்யர்தான் தொடர்ந்து போட்டியிட்டார். 2019ல் திமுக வசம் வந்த தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கு தந்தது தவறு என்கிறார்கள் உடன்பிறப்புகளுக்கு வருத்தம். காங்கிரசுக்கு கை மாற்றி விட்டதில் அந்த வட்டாரத்தில் பெரும் செல்வாக்குடன் இருக்கும் அப்பா – மகன் திமுக பிரமுகர்கள்தான் என்று அடித்து சொல்கிறார்கள் அறிவாலயத்தில். டெல்டா மாவட்டத்தில் தாங்கள் மட்டும்தான் செல்வாக்காக இருக்க வேண்டும் என்று நினைக்கிறதா இந்த அப்பா – மகன் ஜோடி. தஞ்சைப் பகுதியில் திமுகவுக்காக கடுமையாக உழைக்கும் பூண்டி கலைவாணனுக்கு தடுப்பணை போடுவதும் இவர்கள் தானாம்.

காங்கிரசுக்கு கரூர் போகாது என்று உடன்பிறப்புகள் நினைத்திருந்தார்கள். ஆனால் கரூரை மீண்டும் காங்கிரசுக்கே கொடுத்திருக்கிறது திமுக. காரணம் ராகுல் காந்தி. மூன்று தொகுதிகளை ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் கேட்டாராம். ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டு தொகுதிகளை கொடுத்துவிட்டு எனக்காக மூன்றாவது தொகுதியை எங்களுக்கு விட்டுக் கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். ராகுல் காந்தி கேட்ட மூன்று தொகுதிகள் கரூர், சிவகங்கை, திருச்சி. திமுக தலைவர் கொடுக்க மறுத்ததது திருச்சியை.

திருச்சியை காங்கிரசிடமிருந்து வாங்கி மதிமுகவுக்கு கொடுத்திருக்கிறார். அதில் அறிவாலயத்துக்கு மகிழ்ச்சியே. திருச்சி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த திருநாவுக்கரசர் மீது திமுகவினர் மட்டுமல்ல காங்கிரஸ்காரர்களும் அதிருப்தியில்தான் இருந்தார்கள். அந்த வகையில் இது இரண்டு கட்சிகளுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.

தேனியை தனக்கு வைத்திருக்கும் திமுக, அங்கு யாரை நிறுத்துவது என்பதில் குழப்பத்தில் இருக்கிறது. தங்கத் தமிழ்ச்செல்வன் தான் நிற்பார் என்று கூறப்பட்டாலும் அவர் தினகரனுக்கு நெருக்கமாக இருந்தவர். இன்று தினகரன் பாஜக கூட்டணியில் போட்டியிட்டால் அவரை தங்கத் தமிழ்ச்செல்வன் தீவிரமாக எதிர்ப்பாரா என்ற சந்தேகம் திமுகவுக்கு வந்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் சமீபமாய் திமுக நிகழ்வுகளில் தங்கத் தமிழ்ச்செல்வன் வேகம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் தேனி தொகுதி வேட்பாளர் திமுகவின் தலைமையின் யோசனையிலே இருக்கிறது.

திமுக களமிறக்கப் போகும் புதுமுகங்கள் என்று பார்த்தால் பெரம்பலூரில் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு, திருவண்ணாமலையில் எ.வ.வேலு வின் மகன் மருத்துவர் கம்பன் நிறுத்தப்படலாம்.

சென்னையைப் பொறுத்தவரை திமுகவில் வேட்பாளர்கள் மாற்றம் இல்லை என்கிறார்கள். 2019ல் வென்றவர்களே மீண்டும் போட்டியிடதான் அதிக வாய்ப்பு. தென் சென்னையில் தமிழிசை போட்டியிட்டால் திமுகவில் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு பதில் வேறு பலமான வேட்பாளரை நிறுத்தலாம் என்ற எண்ணம் இருக்கிறது. தமிழிசை போட்டியைப் பொறுத்தே திமுகவின் வேட்பாளர் தேர்வு இருக்கும் என்று அறிவாலயத்தில் கூறுகிறார்கள்.

காங்கிரசைப் பொறுத்தவரை சிவகங்கை தொகுதிக்கு கார்த்திக் சிதம்பரத்திற்கும் சுதர்சன நாச்சியப்பனுக்கும் கடுமையான போட்டி. நாச்சியப்பனை ராகுல் ஆதரிக்கிறார் சோனியாவின் கருணைப் பார்வை கார்த்திக் சிதம்பரம் மேல் உள்ளது. சிவகங்கை மக்கள் சுதர்சன் நாச்சியப்பனுக்கே தங்களது ஆதரவை தெரிவிக்கிறார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

இந்த முறை ஜோதிமணிக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று காங்கிரசிலேயே குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால் அவர் ராகுல் காந்தியின் நன்மதிப்பில் இருப்பதால் அத்தனை எளிதாக அவருக்கு சீட் மறுக்கப்படாது என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...