No menu items!

ஊசி… கோலி – கங்குலி மோதல்… – இந்திய கிரிக்கெட் பகீர் சீக்ரெட்ஸ்

ஊசி… கோலி – கங்குலி மோதல்… – இந்திய கிரிக்கெட் பகீர் சீக்ரெட்ஸ்

ஸ்டிங் ஆபரேஷன் முறையில் இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் சேதன் சர்மாவின் உரையாடலை ரகசியமாக பதிவு செய்து அதை ஒளிபரப்பியிருக்கிறது ஒரு தனியார் தொலைக்காட்சி. இந்திய கிரிக்கெட் அணிக்குள் நடக்கு பல வில்லங்க விவகாரங்களை, ரகசியங்களை இந்த உரையாடலில் பேசியிருக்கிறார் சேதன் சர்மா. இந்திய கிரிக்கெட்டில் இதுதான் இப்போதைய ஹாட் டாபிக்.

போட்டிக்கு முன்பு ஊசி

இந்த உரையாடலில் குறிப்பிட்டுள்ள விஷயங்களில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயம் இந்திய வீரர்கள் சிலர் போட்டிகளுக்கு முன்னதாக உடல் தகுதியை கூட்டிக்கொள்ள ஊசி போட்டுக் கொள்கிறார்கள் என்பதுதான்.

இதுபற்றி கூறும் சேதன் சர்மா, “இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்கள் சிலர் முழு உடல் தகுதி இல்லாமலேயே, 80 முதல் 85 சதவீத உடல்தகுதி மட்டும் இருக்கும்போதே தாங்கள் விளையாடத் தகுதியாக இருப்பதாக கூறுகிறார்கள். ஒரு ஆட்டத்தைக்கூட விட்டுக்கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. சில வீரர்கள் தங்களுக்கு முழு உடல் தகுதி இல்லாவிட்டாலும் அணியில் இடம்பிடிக்க தாங்கள் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக சொல்கிறார்கள். ஆடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் தங்கள் முழு உடல்தகுதியைப் பெறுவதற்காக ஊசி போட்டுக்கொள்கின்றனர். அவை வலி நிவாரணி ஊசிகள் அல்ல. வலி நிவாரணி ஊசிகள் என்றால் ஊக்க மருந்து சோதனையில் அவற்றைப் போட்டுக்கொண்டது தெரியவரும். அவை எதற்கான ஊசிகள் என்று முழுமையாக தெரியவில்லை. அந்த ஊசியைப் போட்டுக்கொண்டு முழு உடல் தகுதியுடன் சில வீரர்கள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுகிறார்கள். அந்த ஊசியில் பயன்படுத்தும் மருந்துகளை ஊக்க மருந்து சோதனையில் கண்டுபிடிக்க முடியாது” என்கிறார்.

பும்ரா குறித்தும் சில செய்திகளை சொல்லுகிறார்.

”காயங்களால் பாதிக்கப்பட்டுள்ள ஜஸ்பிரித் பும்ராவால் குனியக்கூட முடியாது. அதனால்தான் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. அணி நிர்வாகத்துக்கும், தேர்வுக் குழுவுக்கும் இடையே அவரை அணியில் சேர்ப்பதில் கருத்து வேறுபாடு உள்ளதற்கு இதுவும் ஒரு காரணம். பிசிசிஐயின் மருத்துவக் குழு பும்ராவை கண்காணித்து வருகிறது. அவர் விரைவில் முழு உடல்தகுதியைப் பெற்று ஆட வருவார்” என்கிறார் சேதன் சர்மா.

கோலி – கங்குலி மோதல் குறித்தும் சேத்தன் ஷர்மா விரிவாக பேசியிருக்கிறார்.

“கங்குலிக்கும் கோலிக்கும் இடையே ஒருவகையான ஈகோ யுத்தம் இருந்து வந்தது. இருவரில் யார் பெரியவர் என்ற போட்டி அவர்களுக்குள் இருக்கிறது. ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு கங்குலிதான் காரணம் என்று விராட் கோலி நினைத்தார். அதற்காக அவரைப் பழிவாங்கவும் அவருக்கு களங்கம் விளைவிக்கவும் திட்டமிட்டார். அதன் ஒரு பகுதியாகவே டி20 கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் கங்குலி பேசும்போது, கேப்டன் பதவியில் இருந்து விலகவேண்டாம் என்று தான் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். ஆனால் கோலி, தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கங்குலி கேட்கவில்லை என்று மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார். இது கங்குலிக்கு எதிராக சர்ச்சையைக் கிளப்பியது.

உண்மையில் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்த தேர்வுக் குழு கூட்டத்தில் நான், கங்குலி உட்பட 9 பேர் இருந்தோம். அன்றைய தினம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கோலி எங்களுடன் கூட்டத்தில் கலந்துகொண்டார். கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி கூறியதும், அந்த முடிவை அவர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கங்குலி கூறியது உண்மை. ஒருவேளை அது கோலிக்கு கேட்காமல் போயிருக்கலாம்” என்று சேதன் சர்மா கூறியுள்ளார்.

அடுத்து கோலி – ரோஹித் ஷர்மா மோதல் குறித்தும் பேசியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியில் இரண்டு கோஷ்டிகள் உள்ளன. ஒரு அணி விராட் கோலியின் தலைமையிலும், மற்றொரு அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் தலைமையிலும் இயங்குகிறது. அதேநேரத்தில் இருவரும் ஒருவர் மீது மற்றவர் நல்ல மரியாதை வைத்துள்ளனர். கோலி கடுமையான காலங்களை கடந்த சமயத்தில் ரோஹித் சர்மா அவருக்கு துணையாக இருந்துள்ளார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் நீண்ட கால கேப்டனாக ரோஹித் சர்மாவை கருதவில்லை. இந்திய டி20 அணியின் கேப்டனாக சில போட்டிகளில் செயல்பட்டுள்ள ஹர்த்திக் பாண்டியாவைத்தான் நீண்டநாள் கேப்டனாக வைத்திருக்க திட்டமிட்டுள்ளது. அவர் முழுமையாக பொறுப்பு ஏற்கும்வரை சில காலத்துக்கு மட்டுமே ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார்.

தன்னுடனான கோலியின் நட்பு குறித்தும் சேத்தன் ஷர்மா பேசியிருக்கிறார்.

இந்திய அணியின் கேப்டனாக கோலி இருந்தபோது என்னை அவர் முழுமையாக நம்பவில்லை. ஆனால் ரோஹித் சர்மாவும், ஹர்த்திக் பாண்டியாவும் என்னை முழுமையாக நம்புகிறார்கள். இதில் ஹர்த்திக் பாண்டியா என் வீட்டுக்கு வந்துகூட அணியின் எதிர்காலம் பற்றி பேசுவார். ரோஹித் சர்மாவும் அடிக்கடி சுமார் 30 நிமிடங்களாவது அணியின் எதிர்காலம் பற்றி என்னிடம் விவாதித்து இருக்கிறார்.

கில், இஷானால் மற்றவர்களுக்கு நெருக்கடி

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவதற்கு வீரர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் ஷிகர் தவன், சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல் ஆகியோருக்கு சுப்மான் கில்லும், இஷான் கிஷனும் கடும் நெருக்கடியைக் கொடுக்கிறார்கள். இவர்கள் இருவரும் சிறப்பாக ஆடுவதால், இந்திய அணியில் தங்களுக்கு இடம் கிடைக்க தவன், சாம்சன், கே.எல்.ராகுல் ஆகியோர் கடுமையாக போராடவேண்டி உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிகள்படி தேர்வுக்குழு உறுப்பினரோ அல்லது தலைவரோ, அணித் தேர்வு விவகாரங்களைப் பற்றியோ, கிரிக்கெட் வாரியம், வீரர்களைப் பற்றிய ரகசியங்களையோ பொதுவெளியில் பேசக் கூடாது. ஆனால் இப்போது தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள உரையாடலில் பல விஷயங்களை உளறிக் கொட்டியிருக்கிறார் சேதன் சர்மா. இதனால் அவரது பதவிக்கு சிக்கல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...