ஐபிஎல் ஏலத்தில் ஷாரூக் கானை வாங்கும் என எல்லோரும் எதிர்பார்த்திருக்க, திடீர் திருப்பமாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமீர் ரிஸ்வியை வாங்கியிருக்கிறது சிஎஸ்கே. அதிலும் இதுவரை பெரிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் அதிகம் ஆடாத ரிஸ்வியை வாங்க 8.40 கோடி ரூபாயை செலவழித்திருக்கிறது. இதைத்தொடர்ந்து யார் இந்த சமீர் ரிஸ்வி என்ற கேள்வி மிகப்பெரிய அளவில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் நகரைச் சேர்ந்தவர்தான் சமீர் ரிஸ்வி. வலதுகை பேட்ஸ்மேனான இவரது வயது 20. சமீரின் முதல் குரு அவரது தாய்மாமனான தன்கீப் அக்தர், சிறுவயதில் கிரிக்கெட் வீர்ராக விரும்பி அது முடியாமல் போன தன்கிப், தனது சகோதரியின் மகனை கிரிக்கெட் வீர்ராக்க விரும்பி அவருக்கு பயிற்சி கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் படிப்பைவிட கிரிக்கெட்டை அதிகமாக விரும்பிய சமீர், அதிலேயே அதிக கவனம் செலுத்தியுள்ளார்.
இதனால் கோபமடைந்த அவரது தந்தை ஹசீன், தனது மச்சானும் சமீரின் மாமாவுமான தன்கிப்பை திட்டியுள்ளார். “கிரிக்கெட்… கிரிக்கெட் என்று அலைந்து நீதான் வாழ்க்கையை தொலைத்துவிட்டாய். இப்போது என் மகனின் வாழ்க்கையையும் கெடுத்துவிட்டாய். அதனால் இனி நீ வீட்டுக்கே வரவேண்டாம்” என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும் மறைமுகமாக தனது சகோதரியின் மகன் கிரிக்கெட் வீர்ராக உருவெடுக்க உதவியிருக்கிறார் தன்கிப்
மாமாவின் உதவியுடன் கிரிக்கெட் கற்ற சமீர் ரிஸ்வி வெளியுலகுக்கு தெரியவந்த்து சமீபத்தில் நடந்த உத்தர பிரதேச மாநில அளவிலான டி20 பிரீமியர் லீக் போட்டியில்தான். இந்த தொடரில் லக்னோ அணிக்காக ஆடிய சமீர், 9 இன்னிங்ஸ்களில் 455 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 2 சதங்களும்ம் அடங்கும். இதைத்தொடர்ந்து சையத் முஷ்டாக் அலி தொடருக்கான டி20 போட்டிகளில் இவர் மொத்தம் 18 சிக்சர்களை பறக்கவிட எல்லோருடைய கவனமும் ரிஸ்வி மீது பதிந்திருக்கிறது. நேற்று நடந்த ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகலுடன் மோதி சமீர் ரிஸ்வியை வாங்கியிருக்கிறது சென்னை.
சமீர் ரிஸ்வியின் இளம் வயது ஹீரோக்களில் ஒருவர் தோனி. தான் ரசிகராக இருந்த தோனியின் தலைமையிலேயே சிஎஸ்கே அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைத்த்தில் அவர் உற்சாகமாகி இருக்கிறார். சமீரின் அப்பா சில ஆண்டுகளுக்கு முன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணத்தில் அப்பாவுக்கு சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளார் சமீர்.
இப்படி நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருந்த திறமையான ரிஸ்வியை வாங்கியதற்காக மகிழ்ந்தாலும், உள்ளூரிலேயே ஷாரூக்கான் என்ற வீர்ர் இருக்கும்போது சிஎஸ்கே அணி ரிஸ்வியை வாங்கியதை அதன் தமிழக ரசிகர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. இத்தனைக்கும் ஐபிஎல் போட்டிகளில் ஏற்கெனவே ஆடி அனுபவம் பெற்றவரான ஷாரூக் கான் 7.4 கோடி ரூபாய்க்குதான் விலை போயிருக்கிறார். ஏலத்தில் சிஎஸ்கே இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்தால் அவரை வாங்கியிருக்கலாம். அப்படி வாங்கி இருந்தால் சிஎஸ்கே அணியின் ஒரே தமிழக வீர்ராக ஷாரூக் கான் இருந்திருப்பார். ஆனால் இப்போது தமிழக வீர்ர்களே இல்லாத, பெயரளவில் மட்டும் சென்னையைக் கொண்டுள்ள அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் இருக்கிறது.