No menu items!

20 ஆயிரம் கோடி ரூபாய் வீண்! சென்னையின் 4 தவறுகள்!

20 ஆயிரம் கோடி ரூபாய் வீண்! சென்னையின் 4 தவறுகள்!

சென்னை மீண்டும் ஒரு பெரிய வெள்ளப் பாதிப்பை சந்தித்திருக்கிறது. பல வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. சில இடங்களிம் முழு வீடுமே மழையில் மூழ்கியுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரத்தால் ஏன் பெரிய மழையை எதிர்கொள்ள முடியவில்லை? இது தொடர்பாக, தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் முன்னாள் சிறப்பு தலைமை பொறியாளர் அ. வீரப்பன் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இது.

சென்னையில் 2015 வெள்ளப் பாதிப்புகளுக்கு பின்னர் மழை நீர் வடிகால் பணிகள் நிறைய நடந்தது. கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்யப்பட்டது. ஆனால், இப்போது மீண்டும் அதே நிலைதான் நீடிக்கிறது. எங்கே தவறு நடந்தது? பெரு மழையை சென்னையால் ஏன் எதிர்கொள்ள முடியவில்லை?

2015இல் பெய்த மழையில் – சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், கடலூர் – நான்கு மாவட்டங்களில் பெரும் வெள்ளச் சேதங்கள், உயிர்ச்சேதங்கள் மற்றும் சொத்துச் சேதங்கள் ஏற்பட்டன. அதே ஆண்டு டிசம்பர் மாத மூன்றாம் வாரத்தில் தூத்துக்குடியிலும் பெரும் மழைச்சேதங்கள். இந்த நிகழ்வுகளின் மூலம் அன்றைய அரசாங்கத்தின், அரசியல்வாதிகளின், ஏன் தனிப்பட்டவர்களின் தவறுகள் மற்றும் குற்றங்கள் பல வெளியே அப்போது வெளிச்சத்துக்கு வந்தன.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய பெருவெள்ளம் மீண்டும் 2015ஐ நினைவுபடுத்துகிறது. அன்றைய பேரழிவுகளில் இருந்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் போதுமான பாடம் பெறவில்லை என்பதையே இது காட்டுகிறது.

வடிநீர் கால்வாய்காள் அமைக்கப்பட்ட பிறகும் இப்போது ஏன் சாலைகளில் தண்ணீர் இவ்வளவு தேங்க வேண்டும்? வீடுகளுக்குள் ஏன் தண்ணிர் புக வேண்டும்?

இந்த வடிநீர் கால்வாய்கள் எல்லாம் அனுபவம் மிக்க பொறியாளர்களின் ஆலோசனையைப் பெறாமலும் நீர் போக்கினைப் பற்றிய அறிவு இல்லாமல் எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளன. இதை நாங்கள் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறோம். யாரும் கேட்பது இல்லை. மழை நீர் வடிகால் கால்வாய்கள் எதற்காக உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. காரணம் அந்த கால்வாய்கள் வழியே செல்லும் மழைநீர் இறுதியாக பக்கத்தில் உள்ள ஏதேனும் ஓர் நீர் நிலையில் சேர்ந்து கலப்பது போல திட்டமிடவில்லை. அப்படியே அரைகுறையாக நிற்கிறது பல இடங்களில்! மற்றும் பல இடங்களிலோ அவற்றை குப்பைகளை போட்டு மழை நீர் இறங்காதவாறு மக்கள் அடைத்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து இந்த கால்வாய்கள் உருவாக்கப்பட்டன. எல்லாம் வீண்.

இன்னொன்று நீர் நிலைகளை, குறிப்பாக ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் அவற்றின் வரத்து, போக்குக் கால்வாய்களை எந்த வரைமுறையும் இன்றி ஆக்கிரமித்துப் பன்மாடிக் கட்டடங்களைக் கட்டியுள்ளதின் காரணமாகவும் இப்படி சாலைகளில் தண்ணீர் தேங்குகிறது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுகிறது.

முன்பு 200 மீட்டர் அகலத்தில் ஓடிக் கொண்டிருந்த அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் இருகரைகளையும் மறித்து, ஆற்றின் அகலத்தையே அடைத்து நான்கில் ஒன்றாக, அதாவது  200 மீட்டர் அகல ஆற்றை வெறும் 60 மீட்டராக குறுக்கிவிட்டனர். மேலும், ஆற்றின் கரையில் பூங்காக்களையும் நடைபயிற்சி பாதைகளையும் அமைக்கின்றனர். இது மிகத் தவறாகும். இத்துடன்  கட்டடக் கழிவுகளையும் வீட்டுக் கழிவுகளையும் குப்பைகளையும்  கொட்டி ஆற்றின் ஓட்டத்தையே தடுத்த பாவத்திற்கான விலையைத் தான் நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க நமது மாநகராட்சியின் திட்டமிடலிலேயே பிரச்சினைகள் இருப்பதாக கருதுகிறீர்களா?

ஆமாம். சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் மாநில நகர மற்றும் ஊராட்சி திட்ட இயக்ககம் முதலியவற்றின் திட்டமிடலிலும் அதை நடைமுறைப்படுத்துவதிலும் கூட தவறுகள் உள்ளன. விதிமீறல்களுடன் நகரின், அதுவும் புறநகர்களின் தாழ்வான பகுதிகளில் வளர்ச்சி என்ற பெயரிலும்  நகரமயமாக்கல் என்ற பெயரிலும் பல லட்சக்கணக்கான வீடுகளை, பன்மாடிக் கட்டடங்களைக் கட்டுவதை எந்தவித பொறுப்புணர்வு மற்றும் சமுதாய அக்கறையின்றி வேடிக்கை பார்த்த நிர்வாக குற்றத்தை என்னென்பது?

வருடம்தோறும் மழைக் காலங்களில் சென்னை இப்படி பாதிக்கபடுவதை தவிர்க்க முடியாதா? இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன?

சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தல்களின்படி நீர் நிலைகளை ஆக்கிரமிக்கக் கூடாது, ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டுமானங்களை பாரபட்சமின்றி இடித்துத் தள்ள வேண்டும். ஏரிகள், கண்மாய்களின் நீர்வழித்தடங்களை அடைப்போர் மீது உடன் நடவடிக்கை எடுத்து தடுத்திட வேண்டும். அரசியல் தலையீடுகள், குறுக்கீடுகளை மீறி இது எந்தளவு சாத்தியம் என தெரியவில்லை.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை வைத்து எல்லாவற்றையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது திட்டமிடல்களில் பாசனப் பொறியாளர்களின் ஆலோசனைகளை பெற வேண்டும். வெளி நாடுகளில் திட்டமிட்டு செய்திருப்பதைப் போல மழை நீரை தரைக்கு அடியே சுரங்கப் பாதை அமைத்து கொண்டுபோய் ஒரு நீர் தேக்கத்தில்விட வேண்டும்!

சென்னையைச் சுற்றியுள்ள 10 முதல் 20 புறநகர்ப் பகுதிகளில் நிலம் காலியாக உள்ள இடங்களில் பத்து லட்சம் கன அடி முதல் 100 மில்லியன் கன அடி வரை கொள்ளளவு கொண்ட சுரங்க நீர்தேக்கத் திட்டத்தைத் திட்டமிட்டு முனைப்பாகச் செய்திட வேண்டும். மேலை நாடுகளிலும் வளர்ந்த கீழை நாடுகளிலும் இத்தகைய சுரங்க நீர்தேக்கத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு இன்றும் பயன்பாட்டில் உள்ளன.

செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பெரிய ஏரிகளை கணக்கெடுத்து அவற்றை ஒரு மீட்டர் ஆழப்படுத்தலாம், கரைகளை ஒரு மீட்டர் உயர்த்தலாம். இதன்மூலம் கூடுதல் தண்ணீரை சேகரிக்க முடியும். மழைக்காலங்களில் சென்னைக்கு வெளியே இருந்து நகருக்குள் வரும் தண்ணீரின் அளவை குறைக்க முடியும். இதையும் பல ஆண்டுகளாக அரசுக்கு ஆலோசனையாக சொல்லி வருகிறோம். அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மறைமுக வருமானத்துக்கான வாய்ப்பு குறைவுள்ள திட்டங்களில் அவர்கள் ஆர்வம் செலுத்துவதில்லை. இதுதான் நம்முடைய மிகப்பெரிய சாபக்கேடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...