தொழில்நுட்பத்தின் உதவியோடு கல்வியை போதிக்கும் எட்-டெக் (Ed-tech) நிறுவனங்களில் உலக அளவில் முன்னோடியாக இருந்த பைஜூஸ் நிறுவனம் தற்போது கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்நிய செலாவணி மோசடி புகார், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை, முதலீட்டாளர்களுடன் பிரச்சினை, பல அலுவலகங்கள் மூடல், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் என பல்வேறு சிக்கல்கள். இதனிடையே, பைஜூஸை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பைஜூஸ் ரவீந்திரன் துபாயில் முதலீட்டாளர்கள் முன்னாள் பேசும்போது கண்கலங்கியுள்ளார். என்னதான் நடக்கிறது பைஜூஸில்?
பைஜூஸின் வேகமான வளர்ச்சியும் வீழ்ச்சியும்
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஆழிக்கோடு என்ற சிறிய கிராமத்தில் 1980களில் பிறந்தவர் ரவீந்திரன். அதே கிராமத்தில் இருந்த பள்ளியில் ஆரம்பக் கல்வியை மலையாள மொழியில் கற்றார். அவரது அப்பா அந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியர், அம்மா கணித ஆசிரியர்.
பள்ளிப் படிப்பை முடித்ததும் கண்ணூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்க் முடித்தார். உடனே வெளிநாட்டில் லட்சங்களில் சம்பளம் கிடைக்க அங்கு பறந்தார்.
2004இல் அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனை…
வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்காக ஊர் திரும்பியவர் தன் நண்பர்களோடு தங்கியுள்ளார். அப்போது அவரது நண்பர்கள் CAT தேர்விற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். ரவீந்திரன் கணக்கு பாடத்தில் வல்லவர் என்பதால் அவரிடம் தங்களது சந்தேகங்களை நண்பர்கள் கேட்க அவரும் உதவியுள்ளார்.
இப்படி நண்பர்களுக்காக அந்த பாடங்களை படித்தவர் விளையாட்டாக அந்த வருடம் நடைபெற்ற CAT தேர்வை எழுதினார். ரிசல்ட்டில் நூற்றுக்கு நூறு. ஆனாலும் விடுமுறை முடிந்ததும் வேலைக்காக பறந்துவிட்டார்.
ஓராண்டுக்கு பின்னர் மீண்டும் விடுமுறைக்காக வந்த ரவீந்திரன், மீண்டும் விளையாட்டாக CAT தேர்வை எழுத அதிலும் சதம். அவர் சொல்லிக்கொடுத்த நண்பர்களும் நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்தனர். ‘உன் திறமைக்கும், புத்திசாலிதனத்திற்கும் நீ வேலை செய்ய வேண்டியது வெளிநாட்டில் இல்லை, இந்தியாவில்தான்’ என நண்பர்கள் நம்பிக்கை கொடுக்க, டியூசன் மாஸ்டராக களத்தில் இறங்கினார் ரவீந்திரன்.
ஆப்பிள் நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் எப்படி தன் வீட்டின் கார் ஷெட்டில் எளிமையாக ஆரம்பித்தாரோ, அதேபோல பெங்களுருவில் இருந்த தன் நண்பன் வீட்டின் மொட்டை மாடியில் போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பை தொடங்கினார், ரவீந்திரன். அன்று அவரிடம் சேர்ந்தவர்கள் ஆறு மாணவர்கள்தான். ஆனாலும், அவர் மனம் தளரவில்லை.
அவரது மரபணுவிலேயே இருந்த ஆசிரியர் வெளியே எட்டிப் பார்த்த சமயம் அது. ரவீந்திரனிடம் கற்றவர்கள் நல்ல மதிப்பெண்கள் வாங்க, நாளடைவில் வாய் மொழியாகவும் செவி வழியாகவும் ரவீந்திரனின் பயிற்சிப் பட்டறை குறித்து கேள்விப்பட்ட மாணவர்கள் பலர் அவரிடம் சேரத் தொடங்கினர். ஒவ்வொரு வாரமும் சேர்க்கை இருமடங்கானது.
நண்பர் வீட்டு மொட்டை மாடியில் இருந்து வகுப்பறைக்கு மாறி, அங்கும் இடப் பற்றாக்குறை ஏற்பட்டு, ஆடிட்டோரியம் ஒன்றை வாடகைக்கு எடுத்து வகுப்புகளை நடத்தினார் ரவீந்திரன். அவரது கற்பித்தல் முறைகளும் பயிற்சி நுணுக்கங்களும் கற்றுக் கொடுக்கும் முறையும் மற்ற ஆசிரியர்களிடமிருந்து வேறுபட்டு தனித்துவம் உடையதாக இருக்க இந்தியா முழுவதும் இருந்து போட்டி தேர்வர்கள் பலரை ஈர்த்தது. இதனால் டெல்லி, மும்பை, புனே, சென்னை என பல நகரங்களுக்கு ஆகாய மார்க்கமாக பறந்து பறந்து பயிற்சி கொடுத்து மாணவர்களை தேற்றினார்.
2009 வாக்கில் டிஜிட்டல் டெக்னாலஜியின் வளர்ச்சியை தனக்கான களமாக மாற்றிக்கொள்ளும் முயற்சியில் இறங்கினார், ரவீந்திரன். போட்டித் தேர்வுகளுக்கான லெக்சர்களை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் தட்டி விட்டார். அதை இந்தியாவின் 46-க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்த மாணவர்கள் பயன்படுத்தி போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற ரவீந்திரன் பெயர் இன்னும் பிரபலமானது. தொடர்ந்து 41 பயிற்சி மையங்களை திறந்தார்.
இந்நிலையில், அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்களில் ஒருவர் ஆன்லைன் மூலமாக வகுப்பெடுக்கும் ஐடியாவை ரவீந்திரனிடம் சொல்ல, அது ரவீந்திரனுக்கு பிடித்துபோக, தன் மாணவர்களையே ஒரு அணியாக உருவாக்கி, 2011இல் பைஜூஸின் தாய் நிறுவனமான ‘திங்க் அண்ட் லேர்ன் பிரைவேட் லிமிடெட்’ (THINK & LEARN) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை, திவ்யா கோகுல்நாத் என்ற முன்னாள் மாணவியுடன் இணைந்து தொடங்கினார். (பின்நாட்களில் திவ்யாவை ரவீந்திரன் திருமணம் செய்துகொண்டார்.)
மேலும், போட்டித் தேர்வுகளுக்கு மட்டுமே பயிற்சி கொடுத்து வந்த வேலையை மட்டும் செய்யாமல், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பாடங்களை ஆன்லைனில் எந்நேரமும் கிடைக்கும் வகையில் பைஜூஸ் மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கினார். இந்த அப்ளிகேஷனில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் விஷயங்களையும் கடந்து பல விதமான புதிய வசதிகளும் இருந்ததால் மாணவர்கள், பெற்றோர்கள் என எல்லோரிடத்திலும் வரவேற்பை பெற இந்தியாவைக் கடந்தும் பைஜூஸ் பிரபலமானது.
வெளிநாடுகளிலிருந்து முதலீடுகள் குவியத் தொடங்கின. Sequoia Capital, Blackstone Inc., Mark Zuckerbergஇன் அறக்கட்டளை உட்பட உலகளாவிய முதலீட்டாளர்களை பைஜூஸ் நிறுவனம் கவர்ந்தது. அந்த முதலீடுகள் மூலம் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு, உலக அளவில் EDTECH நிறுவனங்களில் முன்னோடியாக பைஜூஸை வளர்த்தார்.
2020இல், கொரோனாவுக்கு முன்பே சுமார் 70 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பைஜுஸை பயன்படுத்தினர். கொரோனா காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் உயர்ந்தது. கொரோனாவில் சந்தையின் பெரும்பகுதியை பைஜூஸ் நிறுவனமே ஆக்கிரமித்திருந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர் என்ற அந்தஸ்த்தை பெற்றது.
ஆனால், கொரோனா முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, நிலைமை நேர் எதிராக மாறத் தொடங்கியது. மாணவர்கள் சேர்க்கை குறைந்தது. பல கற்பித்தல் மையங்கள் கிட்டத்தட்ட காலியாகின. ஆன்லைன் வகுப்புகளிலும் மாணவர்கள் காணாமல் போனார்கள். பைஜூஸின் நிதிநிலை மோசமடைந்தது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 75 சதவீதம் சரிந்தது.
பைஜூஸில் இருந்து இதுவரை நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வருமானம் குறைந்ததோடு, பைஜூஸ் நிறுவனம் கடும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதும் பணி நீக்கத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பைஜூஸ் மீதான குற்றச்சாட்டுகள்
தனது நிதிக் கணக்குகளை சரியான நேரத்தில் தாக்கல் செய்யத் தவறியது, கடனுக்கான வட்டித் தொகையை செலுத்த தவறியது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் பைஜூஸ் நிறுவனம் தற்போது சிக்கியுள்ளது.
மார்ச் 2021இல் முடிவடைந்த 2022-23 நிதியாண்டிற்கான கணக்குகளை ரவீந்திரன் தாக்கல் செய்யாதது குறித்து அரசு அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பணமோசடி மற்றும் அந்நிய செலாவணி மீறல்களை விசாரிக்கும் அமலாக்க இயக்குநரகமும் பைஜூஸ் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பியது. இது தொடர்பாக பைஜூஸ் நிறுவனத்தில் சோதனையும் நடைபெற்றது.
ஊழியர்களின் PF நிலுவைத் தொகையை செலுத்தாதது தொடர்பாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கண்காணிப்பின் கீழ் பைஜூஸ் நிறுவனம் வந்துள்ளது. அதுமட்டுமின்றி பல தொழிலாளர்களை தானாக முன்வந்து ராஜினாமா செய்யும்படி கட்டாயப்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. அதேபோல ஊழியர்களுக்கு அளிப்பதாக அறிவிக்கப்பட்ட போனஸ் இன்னும் வழங்கப்படவில்லை எனவும் சில ஆதாரங்கள் கூறுகின்றன.
கடன் வாங்கல், கொடுக்கல் தொடர்பான பிரச்சினையிலும் பைஜூஸ் நிறுவனம் சிக்கியுள்ளது. இதனால் கடும் நிதி நெருக்கடியில் மாட்டி நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
நிதி நெருக்கடி காரணமாக பெங்களூரு கல்யாணி டெக் பார்க்கில் இருந்த பைஜூஸின் 5.58 லட்சம் சதுர அடி அளவிலான அலுவலகம் மூடப்பட்டுவிட்டது. மேலும் பிரஸ்டீஜ் டெக் பார்க்கில் இருந்த ஒன்பது தளங்களில் இரண்டையும் பைஜூஸ் காலி செய்துள்ளது. நொய்டாவிஸ் உள்ள மிகப்பெரிய அலுவலகத்தையும் தற்போது காலி செய்யத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பல முதலீட்டாளர்கள், அரை பில்லியன் டாலர்களை பைஜூஸ் நிறுவனம் மறைத்ததாக குற்றம் சாட்டி வழக்குகளை தொடர்ந்துள்ளனர். பைஜூஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நெதர்லாந்து நாட்டை சேர்ந்த முதலீட்டு நிறுவனமான ப்ரோசஸ் என்வி, பைஜூஸ் நிறுவனத்தின் அறிக்கை மற்றும் நிர்வாக அமைப்பு போன்றவைகள், நிறுவனம் போதுமான அளவு வளர்ச்சியடையவில்லை என்பதை காட்டுவதாக தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு 22 பில்லியன் டாலராக இருந்த பைஜூஸின் மதிப்பீட்டை இந்த ஆண்டு 5.1 பில்லியன் டாலராக ப்ரோசஸ் என்வி குறைத்துள்ளது.
‘மிக விரைவாக வளர்ந்த ஒரு அனுபவமற்ற நிறுவனரின் உற்சாகம்தான் ரவீந்திரனின் தவறான செயல்களுக்குக் காரணம். அவர் வெளிப்படையாக எதையும் தெரிவிக்காதவர். நிதி தொடர்பான தகவல்களை மறைத்து, கணக்குகளை கடுமையாக தணிக்கை செய்ய தவறியதன் மூலம் அவர் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டார்’ என்று நிதித்துறை விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் பைஜூஸ் கணக்குகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்கும் நிலையில், பைஜூஸ் நிறுவனத்தைக் காப்பாற்ற ரவீந்திரன் தற்போது துபாய் வீட்டில் இருந்துக்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் முக்கியமான முதலீட்டாளர்களிடம் 1 பில்லியன் டாலர் முதலீட்டை திரட்டும் முயற்சியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது தொடர்பான ஒரு கூட்டத்தில் பேசும் போது நிறுவனத்தை காப்பாற்றும் தனது முயற்சி குறித்து கண்ணீர் விட்டுள்ளார்.
வேகமாக வளர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக காட்டப்பட்ட பைஜூஸ், அதே வேகத்தில் வீழ்ச்சியடைந்த நிறுவனங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இன்று ஆகியுள்ளது. இந்நிலையில் இருந்து ரவீந்திரன் கண்ணீர் பைஜூஸை காப்பாற்றுமா?