No menu items!

சர்ச்சையும், சக்ஸசும் தீபிகாவின் இரு கண்கள்

சர்ச்சையும், சக்ஸசும் தீபிகாவின் இரு கண்கள்

2022-ல் ஃபிபா வேர்ல்ட் கப் ட்ராஃபியை [FIFA WORLD CUP TROPHY] அறிமுகப்படுத்திய முதல் இந்தியர்.

உலகின் புகழ்பெற்ற ஃப்ரெஞ்ச் ஜூவல்லரி ப்ராண்ட்டான கார்டியர் [CARTIER] -ன் முகமாக ரசிக்க வைத்தவர்.

லக்ஸ்சரி ப்ராண்ட்டாக கொண்டாடப்படும் உலகப் புகழ்பெற்ற லூயி விட்டன் [LOUIS VUITTON]-னின் முதல் இந்திய ப்ராண்ட் அம்பாஸிடர்.

லெவைஸ் [LEVIS], அடிடாஸ் [ADIDAS] என உலகின் உச்ச ஸ்போர்ட்ஸ் ப்ராண்ட்களின் விளம்பரங்களில் வசீகரித்தவர்.

75-வது கான்ஸ் ஃப்லிம் ஃபெஸ்டிவலில் [CANES FILM FESTIVAL] ஜூரி மெம்பராக அலங்கரித்தவர்.

2017-ல் வெளியான ஹாலிவுட் படமான XXX: RETURN OF XANDER CAGE.
இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் பெறும் சினிமா நடிகை.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனைக்கும் சொந்தகாரர் தீபிகா படுகோன். இவருக்கு இருக்கும் பாப்புலாரிட்டியை உலகப் புகழ்பெற்ற ப்ராண்ட்கள் தங்களது விளம்பரங்களுக்கு பயன்படுத்தி வருகின்றன.

யார் இந்த தீபிகா படுகோன்?

இந்த அழகு தேவதை அவதரித்தது டென்மார்க்கின் கோபன்ஹெகன் நகரில் 1986 ஜனவரி 5-ம் தேதி. பிறந்தது வெளிநாட்டில் என்றாலும் ஜாகை நம்முடைய பெங்களூருவில்தான். இவரது அப்பா பிரகாஷ் படுகோன். சர்வதேச அளவிலான பேட்மிண்டன் விளையாட்டு வீரர்.

சிறுவயதில் தீபிகாவுக்கு பேட்மிண்டனில்தான் ஆர்வம் அதிகம். பள்ளிப்பருவத்தில் இப்படியே கழிந்தது. பத்தாவது படிக்கும் போது, அவரது அழகும் பத்து மடங்கு அதிகரிக்க மாடலிங் உலகம் இவரை அணைத்து கொண்டது.

அப்பொழுது அவர் தனது அப்பாவிடம் சொன்னது. ’ஃபேஷன் மாடலாக ஆக விரும்புகிறேன். அதனால் பேட்மிண்டனில் என்னால் கவனம் செலுத்த முடியாது’
மகளின் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட இந்தியாவின் புகழ்பெற்ற பேட்மிண்டன் விளையாட்டு வீரரான பிரகாஷ் படுகோன், ‘ஓகே என் செல்லம்’ என்று உற்சாகப்படுத்தினார்.

அந்த தருணம்தான் இன்றைய தீபிகா படுகோன் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது.

மளமளவென தீபிகாவின் வாழ்வில் மாற்றங்கள்.

அப்பொழுது பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த லிரில் சோப் விளம்பரத்தில் அருவியில் நனைந்தார் தீபிகா. அவ்வளவுதான் மக்கள் மனமும் அவரது அழகில் கரைந்தது.

அடுத்தடுத்து பல தயாரிப்புகளுக்கும் ப்ராண்ட்களுக்கும் தீபிகாவின் முகம் விளம்பரமாகியது.

2005-ல் கிங்ஃபிஷர் ஃபேஷன் அவார்ஸில் ‘மாடல் ஆஃப் த இயர்’ விருது இவர் வசம் வர, தீபிகாவின் புகழ் பல மடங்கு அதிகரித்தது.

ஹிமேஷ் ரேஷமய்யாவின் மியூசிக் வீடியோவில் ஒரு பாடலில் ஆடினார், அவ்வளவுதான் அடுத்து அவர் கன்னட நடிகர் உபேந்திராவின் படத்தில் கமிட் ஆனார். அங்கே ஆரம்பித்தது அவரது சினிமா பயணம்.

பாலிவுட்டின் பரபரப்பான கோரியோக்ராஃபரான ஃபரா கான் தான் இயக்கும் ஹிந்திப்படமான ‘ஒம் சாந்தி ஒம்’ படத்திற்கு ஹீரோயினை தேடிக்கொண்டிருந்தார். ஷாரூக் கான் ஹீரோ என்பதால், ஹீரோயின் தேடும் படலம் மும்முரமாக இருந்தது. இந்தியாவில் இளசுகளின் தூக்கத்தை தீபிகாதான் கொள்ளை கொள்ளவேண்டுமென்ற விதி இருந்தது போல.

2007-ல் ஷாரூக்கானுடன் டூயட் பாடினார். அடுத்தடுத்து ரன்பீர் கபூர், அக்‌ஷய் குமார், சைஃப் அலிகான் என வரிசையாக கமர்ஷியல் ஹீரோக்களின் ஜோடியானார். கமர்ஷியல் படங்களாக இருந்தாலும், தீபிகாவின் திறமையை திரைப்பட விமர்சகர்கள் பாராட்டினர். ரசிகர்கள் கொண்டாடினர்.

சினிமாவுக்குள் நுழைந்த முதல் வெற்றிகளைக் கொண்டாடிய தீபிகாவின் படங்கள் 2010-ல் அப்படியே தலைக்கீழான ரிசல்ட்களில் தத்தளித்தன. 2010-ல் மட்டும் தீபிகாவின் 5 படங்கள் வெளியாயின அனைத்தும் தோல்விப் படங்கள். 2011-ல் வெளியான தேசி பாய்ஸ், ஆரக்‌ஷன் என்ற இருப்படங்களும் ஃப்ளாப்.

’வாழ்க்கை ஒரு வட்டம். இன்னிக்கு தோற்கிறவன் நாளைக்கு ஜெயிப்பான்’ என்று ’திருமலை’ படத்தில் விஜய் பேசும் ஒரு வசனம் வருமே. அதேபோல் தோல்விகளைச் சந்தித்த தீபிகாவுக்கு 2012 பிரமாதமான ஆண்டாக அமைந்தது.

‘காக்டெயில்’ படம் முதல் வெற்றியாக அமைந்தது. 2013-ம் ஆண்டு தீபிகா தன்னை இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக முன்னிறுத்தியது. காரணம் ரேஸ்2, யே ஜவானி ஹை திவானி, சென்னை எக்ஸ்ப்ரஸ், கோலியோன் கி ராஸ்லீலா ராம் லீலா போன்ற படங்கள் இவருக்கும் கமர்ஷியல் ஹீரோயினுக்கான அடையாளத்தை கொடுத்தன.

2015-ல் வெளியானது ‘பிக்கு’. இப்படத்தில் அமிதாப் பச்சனின் மகளாக தீபிகா படுகோன் நடித்தார். அப்பாவுக்கும் மகளுக்கும் இடையேயான உறவைப் பற்றி இப்படம் பேசியது. தீபிகா வசிக்கும் ஃப்ளாட்டில் இருக்கும் ஷோகேஸ் முழுவதையும் விருதுகள் அலங்கரித்தன.

2015-ன் இறுதியில் ரன்வீர் சிங்குடன் நடித்த பாஜிராவு மஸ்தானி சூப்பர் டூப்பர் ஹிட். வீரமிக்க இளவரசி மஸ்தானியாக தீபிகா தூள் கிளப்பியிருந்தார். இந்த கதாபாத்திரத்திற்காக குதிரையேற்றம், வாள் சண்டை, தற்காப்புக்கலையான களரிப்பயாட்டு என எல்லாவற்றையும் கற்றுகொண்டு ஒரு அசல் இளவரசியாகவே மாறியிருந்தார்.

2017-ல் ஹாலிவுட்டிலும் அட்டகாசமான எண்ட்ரீயை கொடுத்தார் தீபிகா. அடிதடி ஆக்‌ஷன் ஹீரோவான வின் டீசலுக்கு ஜோடியாக XXX: Return of Xander Cage படத்தில் நடித்தார். இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அடித்த ஒரே கமெண்ட், ’தீபிகாவின் திறமையை வீணடித்துவிட்டார்கள்’ என்பதே.

2018-ல் மீண்டும் ரன்வீர் சிங், சஞ்சய் லீலா பன்சாலி கூட்டணியில் ‘பத்மாவதி’ உருவானது. ராஜபுத்ர ராணி பத்மாவதியாக அசர வைத்தார் தீபிகா படுகோன். இந்தியாவில் மிக அதிக பட்ஜெட்டில் உருவான படங்களின் வரிசையில் ‘பத்மாவதியும்’ ஒன்று. அதிக வசூல் ஈட்டிய தீபிகாவின் படங்களில் இது இப்பொழுதும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

இவ்வளவு புகழ், பணம், பாப்புலாரிட்டி இருந்தால், ஆடித்தள்ளுபடி பாணியில் மூன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல் தீபிகாவுக்கும் வந்தது மன அழுத்த பிரச்சினை.

நட்சத்திரப் புகழுக்கான விலை மிக அதிகம் என்பதை தீபிகா படுகோன் அப்பொழுதுதான் உணர்ந்தார்.

ஆனால் தனக்கு இருந்த மன அழுத்தம் பற்றி பொதுவெளியில் பேச தீபிகா படுகோன் தயாராக இருந்தார்.

2014-ல் தனது சினிமா வாழ்க்கையில் உச்சத்தில் இருக்கும் போது, அட்டகாசமாக திறமையை வெளிப்படுத்திய போது, அவரது மனது வெறுமையில் தனித்து தள்ளாடிக் கொண்டிருந்தது.

தீபிகாவின் அம்மா உஜாலா படுகோன் தனது மகளுக்கு மருத்துவ உதவி மிக அவசியம் என்பதை உணர்ந்து கொண்டார். எனக்கு இதுதான் பிரச்சினை என்று எந்த நடிகையும் நடிகரும் பேசாத ஒரு பகட்டு பந்தா உலகில் தீபிகா மாறுப்பட்டவராக தெரிந்தார்.

உணர்வுகளோடுப் போராடுவது என்பது கொடுமை என்று புரிந்து கொண்ட தீபிகா படுகோன் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டார். அதோடு தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவுக்கரம் கொடுக்கும் வகையில் களமிறங்கினார்.
2015-ல் The Live Love Laugh Foundation என்னும் அறக்கட்டளையை ஆரம்பித்தார். மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒன்றாக தீபிகாவின் இந்த முயற்சி தொடங்கப்பட்டது.

இளைய தலைமுறையினருக்கு தோள் கொடுக்கும் வகையில் மென்டல் ஹெல்த் கேர் 2,10,000 மாணவர்கள் மற்றும் 21,000 ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டது. மருத்துவர்களுக்கான இந்நிகழ்ச்சியின் மூலம் 2,383 மருத்துவர்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது. மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 20 தாலுகாக்களில் தீபிகா படுகோனின் நல்லெண்ணத்தால் 9,200 பேர் நேரடியாகவும், 23,000 பேர் மறைமுகமாகவும் பயன் அடைந்திருக்கிறார்கள். இதை முன்னின்று நடத்தியது தீபிகாவின் சகோதரி அனிஷா படுகோன்.

இந்த மன அழுத்தம், மனச் சோர்வு, பிரச்சினையினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஒரே விஷயத்தில் மட்டும் தீபிகா படுகோன் மிகத்தெளிவாகி இருக்கிறார்.

‘என்னுடையப் படங்கள் வெற்றியடையும் போது இந்தாண்டு உங்கள் ஆண்டு என்று புகழ்கிறார்கள். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் இந்த வெற்றியெல்லாமே என்னுடைய படங்களைப் பொறுத்துதான் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்’ என்று பேட்டியில் கூறுகிறார்.

‘என்னுடைய படங்கள் வெற்றி என்று செய்திகளை படிக்கும் போதும் கேட்கும் போதும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் இதற்காக நான் கடின உழைப்பைக் கொடுக்கிறேன். நான் வேண்டுமென்றே வேலை.. வேலை.. என்று என்னை ஈடுப்படுத்தி வருகிறேன். இதனால் நான் பர்சனல் வாழ்க்கையில் இழந்தது மிக அதிகம்’ என்கிறார்.

இப்படிப்பட்ட தீபிகா சிக்கிய சர்ச்சைகள் ஏராளம்.

ரன்வீர் சிங்குடன் திருமணமான பிறகு நடித்திருக்கும் ‘கெஹரியான்’ படத்தில் மிக நெருக்கமாக நடித்து சூட்டைக் கிளப்பினார். திருமணம் நடிப்பிற்கு ஒரு தடையே இல்லை என்ற ஹாலிவுட் நடிகைகளின் பாலிஸியை பாலிவுட்டுக்கும் கொண்டு வந்திருக்கிறார்.

இவரைச் சூழ்ந்திருக்கும் சர்ச்சைகளின் வரிசையில் கடைசியாக சேர்ந்திருப்பது ஷாரூக் கானுக்கு ஜோடியாக நடித்திருக்கும் ‘பதான்’ படப்பாடல் சர்ச்சை. காவி நிறத்தில் பிகினி அணிந்து உடலழகைக் காட்டி நடித்திருப்பது இந்து மதத்தை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது என்பதுதான்.

ஒரேயொரு பாடல்தான். சினிமா ரசிகர்களிடையே ஹீட்டையும், அரசியல்வாதிகளிடையே சூட்டையும் கிளப்பியிருக்கிறது.

ஷாரூக்கான், சிக்ஸ் பேக், ஆக்‌ஷன் சமாச்சாரங்களை வைத்து எப்படியாவது ஒரு ஹிட் படத்தை அடுத்த ஆண்டிலாவது கொடுத்துவிட வேண்டுமென களமிறங்கியிருக்கும் படம் ‘பதான்’. இதில் ஷாரூக்குடன் கவர்ச்சி கோதாவில் இறங்கியிருக்கிறார் தீபிகா படுகோன்.

இந்தப்படம் ஜனவரி 25, 2023-ல் வெளியாக இருக்கிறது. இதனால் இப்படத்தை பற்றிய பேச்சைக் கிளப்ப வேண்டும் என்பதற்காக ‘பேஷரம் ரங்’ என்ற பாடலை இணையத்தில் ஏற்றியது ‘பதான்’ படக்குழு.

மத்திய பிரதேசத்தின் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான நரோத்தம் மிஸ்ரா, ‘’பதான் படத்தில் வருகிற ’பேஷரம் ரங்’ பாடலில் தீபிகா படுகோன் போட்டிருக்கும் காஸ்ட்யூமை கரெக்ட் பண்ணவில்லை என்றால், அந்தப் படம் மத்திய பிரதேசத்தில் ரிலீஸ் ஆவது பற்றி அரசு முடிவு செய்யும்’ என்று கர்ஜித்தார்.

அதோடு தீபிகாவை நரோத்தம் விட்டுவிடவில்லை. ‘’2020-ம் ஆண்டு ஜனவரியில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த கும்பலொன்று அத்துமீறி நுழைந்து அங்கு படித்து கொண்டிருக்கும் மாணவர்களை கண்மூடித்தனமாய் தாக்கியது.

’’இந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜனவரி 7-ம் தேதி தேதி தீபிகா படுகோன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு சென்றார். காரணம் அவர் ‘துக்டே துக்டே’ குழுவின் ஆதரவாளர்’’ என்றும் தீபிகாவைப் பற்றி நேரடியாகவே கமெண்ட் அடித்திருக்கிறார் அமைச்சர்.

இந்த தாக்குதலில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங் அமைப்பின் மாணவர் பிரிவான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பிறகு ‘துக்டே துக்டே கேங்’ நாட்டைப் பிரிக்க முயற்சித்து வருகிறது என்ற வாதம் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

தீபிகா படுகோன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு சென்றதால்தான் இப்படி விமர்சிக்கப்படுகிறாரா அல்லது குறி வைக்கப்படுகிறாரா என்று ஒரு பக்கம் சந்தேகத்தை கிளப்புகிறார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். எனக்கு வேறு வேலைகளும் இருக்கிறது என்பது போல் தீபிகா சினிமாவையும் தாண்டி பிஸினெஸ்சிலும் கலக்கி வருகிறார்.
2017-ல் கே.ஏ. எண்டர்பிரைசர்ஸ் என்னும் முழு உரிமம் உள்ள கம்பெனியை ஆரம்பித்தார். இந்நிறுவனம் மூலம் பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தொடங்கினார். femtech startup Nua, cleantech startup Atomberg Technologies, space tech startup Bellatrix Aerospace, yoghurt firm Epigamia, pet store Supertails and edtech firm FrontRow என பட்டியல் நீள்கிறது. இவற்றில் பல இப்பொழுது வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

இப்படியாக சினிமா, பிஸினெஸ், சமூக சேவை, விளம்பர தூதர் என பல தளங்களில் பரபரப்பாக இருக்கும் தீபிகா படுகோன், பதான் படத்திற்குப் பிறகு ஹிர்த்திக் ரோஷனுடன் ‘ஃபைட்டர்’, பிரபாஸூடன் ‘ப்ராஜெக்ட் – கே’, அமிதாப் பச்சனுடன் இணைந்து தயாரிக்கும் ‘த இண்டெர்ன்’ ரீமேக் என கைவசம் படங்களும் வைத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...