No menu items!

சென்னையில் கெட்டுப் போன காற்று: சிஎஸ்இ எச்சரிக்கை

சென்னையில் கெட்டுப் போன காற்று: சிஎஸ்இ எச்சரிக்கை

இந்தியாவின் ஆறு பெருநகரங்களின் காற்று மாசு குறித்த அறிக்கையை, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் நேற்று வெளியிட்டது. இதில் டில்லி, கல்கத்தா, மும்பைவிட சென்னையின் காற்று மாசு குறைவாகத்தான் இருக்கிறது என்றாலும், அந்த நகரங்களைவிட வேகமாக மாசு அதிகரித்து வரும் நகரமாக சென்னையும் பெங்களூருவும் இடம்பெற்று நமக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

காற்று மாசு எப்படி அளவிடப்படுகிறது?

காற்றில் மிதக்கும் துகள்களைக் கொண்டே காற்றின் தரம் அளவிடப்படுகிறது. 2.5 முதல் 10 மைக்ரோ மீட்டர் வரை விட்டம் கொண்ட துகள்கள் ‘பிஎம் 10’ என்று அழைக்கப்படுகின்றன. 2.5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான அளவுகொண்ட துகள்கள் ‘பிஎம் 2.5’ என்று அழைக்கப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைப்படி காற்றில் அனுமதிக்கப்பட்ட ‘பிஎம் 10’ துகள்கள் அளவு 100 மைக்ரோகிராம், ‘பிஎம் 2.5’ நுண் துகள்கள் அளவு 60 மைக்ரோகிராம் இருக்கலாம்.

காற்றில் துகள்கள் அதிகமாக இருந்தால் என்ன நடக்கும்?

காற்றை நாம் சுவாசிக்கும்போது அதிலுள்ள ‘பிஎம் 2.5’ நுண் துகள்கள் உள்ளிழுக்கப்பட்டு நுரையீரல் திசுக்களில் ஆழமாக செல்கிறது. இரத்த ஓட்டத்திலும் நுழைகிறது. இது ஆஸ்துமா, இதய நோய் மற்றும் பிற சுவாச நோய்கள் உட்படப் பல உடல்நல பிரச்சினைகள் உருவாக காரணமாகும். ‘காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள் (பிஎம் 2.5) ஒவ்வொரு ஆண்டும் அதிகமான மக்களைக் கொல்கின்றன,’ என்கிறது உலகளவில் காற்று மாசை அளவிடும் IQAir அமைப்பு.

சென்னையில் காற்று மாசால் மட்டும் கடந்த 2020ஆம் ஆண்டு 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். இந்தியா முழுவதும் அதிக இறப்பை ஏற்படுத்தும் காரணங்களில் ஐந்தாவது இடத்தை காற்று மாசு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போது சிஎஸ்இ அறிக்கை என்ன சொல்கிறது?

இந்தியாவில் ஆறு பெரு நகரங்களின், அக்டோபர் 2022 முதல் பிப்ரவரி 2023 வரையான குளிர்காலத்திற்கான காற்று மாசு தரவை நேற்று (07-03-2023) அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் (CSE) வெளியிட்டது. இதில் பிஎம் 2.5 அளவு டில்லியிலும் கொல்கத்தாவிலும் ‘மிகவும் மோசமான’ நிலையில் உள்ளது. மற்ற நான்கு பெருநகரங்களான மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை ஆகியவை முந்தைய குளிர்காலத்துடன் ஒப்பிடும்போது இந்த குளிர்காலத்தில் அதிக பருவகால ‘பிஎம் 2.5’ சராசரியை பதிவு செய்துள்ளன.

காற்றில் ‘பி.எம். 25’ அளவு ஒரு கன மீட்டருக்கு டில்லியில் 151 மைக்ரோகிராம், கொல்கத்தாவில் 84 மைக்ரோகிராம் என்ற அளவில் உள்ளது.

மும்பையில் 77 மைக்ரோகிராம், ஹைதராபாத் – 59 மைக்ரோகிராம், பெங்களூரு – 44 மைக்ரோகிராம், சென்னை 42 மைக்ரோகிராம் என்று உள்ளது.

சென்னை, பெங்களூருவில் மாசு அளவு குறைவாக இருந்தாலும், இந்த இரண்டு நகரங்களும் ‘பி.எம். 25’க்கான வருடாந்திர தரநிலையை மீறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது மிக வேகமாக மோசமடையும் நகரங்களாக இந்த இரண்டு நகரங்களும் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை காற்று மாசுக்கு என்ன காரணம்?

இந்தியாவின் காற்று மாசுக்கு முக்கியக் காரணம் வாகனப் புகை, நிலக்கரி மின் நிலையங்கள், தொழிற்சாலை கழிவுகள், பயோமாஸ், கட்டுமான தொழில் ஆகியனதான். ஆனால், சென்னையைப் பொறுத்தவரைக்கும் காற்றை மாசுபடுத்துவதில் வாகனப் புகைகளே அதிகப் பங்கு வகிக்கின்றன. வாகனங்களிலிருந்து கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரோ கார்பன், நைட்ரஜன், மீத்தேன், ஆக்சிஜன் உள்ளிட்ட பல வாயுக்கள் வெளியேறுகிறது. நான்கு சக்கரம், இரு சக்கரம் என வாகனத்தின் தன்மைக்கேற்ப ஒவ்வொரு வாகனப் புகையிலும் இவற்றின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்று, ‘காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் 1981’ வரையறை செய்துள்ளது. ஆனால், முறையான சோதனை மற்றும் சரியான பராமரிப்பு இல்லாததால், சென்னையில் ஓடும் பெரும்பான்மை வாகனங்கள் இச்சட்டம் குறிப்பிடும் அளவைவிட அதிகமான கார்பனை வெளியிடக்கூடியதாக உள்ளன.

வாகனப் புகையை அடுத்து நிலக்கரி எரிப்பு, கட்டுமான பணிகள், மழை வீழ்ச்சி உட்படப் பல்வேறு காரணிகளும் சென்னை காற்று மாசுக்குக் காரணமாக இருக்கின்றன. வடசென்னையில் தொழிற்சாலைகளால் மாசுபடுகிறது என்றால், தென் சென்னை கட்டுமான பணிகளாலும் போக்குவரத்து நெரிசலாலும் மாசடைகிறது.

காற்று மாசை குறைக்க என்ன செய்யலாம்?

காற்றைத் தூய்மையாக வைத்திருக்க மரங்கள் ஓர் இயற்கைத் தீர்வு. எனவே, காற்று மாசடைவதைத் தவிர்க்க, நகரின் மொத்த நிலப்பரப்பில் 33.3 சதவிகிதம் நிலப் பரப்புப் பசுமைப் போர்வையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைக்கிறது. ஆனால், சென்னையில் கிட்டத்தட்ட 7 சதவிகிதம் மட்டுமே பசுமைப் போர்வை உள்ளது. எனவே, சென்னையின் பசுமைப் போர்வையை அதிகரிக்க வேண்டியது மிக மிக அவசியம். நம் வீட்டுக்கு முன்னால் இடம் இருந்தால் ஒரு மரத்தை நட்டுப் பராமரிக்கலாம்.

4 ஸ்ட்ரோக் இன்ஜின்கள் உள்ள இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களையும் ஈயம் கலக்காத பெட்ரோலையும் (unleaded) பயன்படுத்தலாம். அதுபோல் எல்.பி.ஜி. கேஸ் பயன்பாடும் காற்று மாசடைவதைக் குறைக்கும்.

குறைந்த தூரப் பயணத்திற்கு நடந்தோ சைக்கிளிலோ செல்லலாம்.

சிக்னல்களில் காத்திருக்கும் போது வாகனங்களின் என்ஜினை நிறுத்தலாம். ஏனெனில், அவை வெளியிடும் புகை பச்சை விளக்குக்காகக் காத்து நிற்கும் நம் ஆரோக்கியத்தையும் சேர்த்தே பாதிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...