No menu items!

அண்ணாமலை – ரஜினியா? வடிவேலுவா?

அண்ணாமலை – ரஜினியா? வடிவேலுவா?

ரஜினி நடித்த கபாலி படத்தில் ஒரு டயலாக் வரும்…  ’கபாலி அப்படினு சொன்ன உடனே குனிஞ்சு சொல்லுங்க எஜமான் அப்படினு வந்து நிப்பானே அந்த மாதிரி கபாலினு நினைச்சியாடா… கபாலி டா….. என்று ரஜினி  ஸ்டைலாக சொல்லுவார். கைத்தட்டல்கள் அதிரும்.

அதே போல் அண்ணாமலை திரைப்படத்தில்  ’மலைடா…அண்ணாமலை” என்று ரஜினி சொல்லுவார் அதற்கும் கைத்தட்டல்களும் விசில்களும் பறக்கும்.

 நேற்று அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியது அப்படிதான் இருந்தது. ‘தேசியக் கட்சி என்றால் அங்கு தலைவர்கள் இருக்கமாட்டார்கள், அங்கு மேனேஜர்கள்தான் இருப்பார்கள் என்ற பாவனை இருக்கும். அண்ணாமலை இங்கு தோசையோ, இட்லியோ, சப்பாத்தி சுடவோ வரவில்லை. எப்போதும் என்னுடைய தலைமைப் பண்பு ஒரு மேனேஜரைப் போல இருக்காது. மேனேஜர் போல தாஜா வேலை எல்லாம் செய்யமாட்டேன். நான் தலைவன். ஒரு தலைவன் எப்படியிருக்க வேண்டுமோ அப்படித்தான் நான் இருப்பேன். ஜெயலலிதா, கலைஞர் எடுக்காத முடிவுகளா? தமிழ்நாடு பார்க்காத ஆளுமையா? அந்த மாதிரிதான் நான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறனே தவிர, மேனேஜராக இருக்க விரும்பவில்லை.’ என்று செய்தியாளர்களிடம் ஆவேசமாய் பேசினார்.

ஆனால் அண்ணாமலை பேசியது கபாலி ரஜினி பேச்சு அல்ல, தலைநகரம் படத்தில் வடிவேலு நானும் ரவுடிதான் என்று தானாக போய் போலீஸ் ஜீப்பில் ஏறும் வடிவேலு பேச்சு என்ற கிண்டலும் இருக்கிறது.

பாஜகவின் தமிழ்நாட்டு தலைவர்  அண்ணாமலை சமீபமாய் பதற்றமாய் இருக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியை சாராய வியாபாரி என்று அழைக்கிறார். காவல் துறை உயர் அதிகாரிகளை மதம் சார்ந்து விமர்சிக்கிறார். செய்தியாளர்களை குரங்கு என்கிறார். காயத்ரி ரகுராம் பற்றிய கேள்விக்கு ரஃபேல் வாட்ச், பிஜிஆர் எனர்ஜி என புதிய தலைமுறையுடன் சண்டை . நேருக்கு நேர் விவாதத்துக்கு அழைக்கிறார்.  சிடிஆர் நிர்மல் குமார் ராஜினாமா என்றதும் ஆவேசமாய் பேசுகிறார்.

இந்த பதற்றம், ஆவேசம் எல்லாம் தலைவர்களிடம் இருக்குமா அல்லது மேனேஜர்களிடம் இருக்குமா என்ற கேள்விக்கு முன்பு அண்ணாமலை பாஜகவின் தமிழ்நாட்டு தலைவரான கதையைப் பார்ப்போம்.

டெல்லி மேலிடத்தால் தமிழ்நாட்டு பாஜகவுக்குள் திணிக்கப்பட்டவர் அண்ணாமலை.

கர்நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் திடீரென்று வேலையை ராஜினாமா செய்கிறார். விவசாயம்தான் என் உயிர் என்கிறார். ஆடு, மாடு கோழி வளர்க்கிறார். விவசாயத்தை வளர்ப்போம்..காப்போம் என்று ஆடுகளுடன் போட்டோ எடுத்துக் கொண்டு பேட்டியளிக்கிறார். அவரைப் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வளர்கின்றன. ஐபிஎஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விவசாயத்துக்கு திரும்பிய நேர்மையாளர் என்ற பிம்பம் அவர் மீது கட்டமைக்கப்படுகிறது.

“நாடு போற போக்கு சரியில்லை. எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள். வருமானத்தை எல்லாம் டாஸ்மாக்குல விட்டுட்டு, குடும்பத்தை கஷ்டத்துல விடுறாங்க உழைப்பாளிங்க. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய அரசியல்வாதிகள், ஓட்டுகளை வியாபாரமாக்கிட்டாங்க. எம்.பி, எம்.எல்.ஏ தேர்தல்கள்ல இதுவரை ஓட்டுக்குப் பணம் கொடுத்தவங்க, அந்தக் கொடுமையை இப்போது உள்ளாட்சித் தேர்தலிலும் 600, 700 எனப் பணம் கொடுக்கும்வரைக்கும் வந்துட்டாங்க. மக்களும் அதைச் சங்கடமே இல்லாம வாங்குறாங்க. கெட்ட விஷயம், நல்ல விஷயம் எதுங்கிற விழிப்புணர்வும் மக்களுக்கு இல்லை. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆள் இல்லை.

காரணம், சமூகத்தில் லீடர்ஷிப் இல்லை. அதனால்தான், எனது ஒன்பது வருடம் போலீஸ் வேலையை உதறித் தள்ளிவிட்டு, `வி த லீடர்’ங்கிற சமூக அமைப்பை ஆரம்பித்திருக்கிறேன். இது அரசியல் அமைப்பு அல்ல; அரசியலைத் தூய்மைப்படுத்தும் அமைப்பு; மக்களை விழித்தெழுச் செய்யும் அமைப்பு” என்று 2020 பிப்ரவரியில் பசுமை விகடனுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார் அண்ணாமலை. அப்போது அவர் அர்ஜுன் அண்ணாமலை. அந்தக் கட்டுரை முழுக்க கர்நாடக சிங்கம்’மாக அவரது வீரதீர செயல்களும் நாட்டை மாற்ற வேண்டும் என்ற எண்ணங்களும் குவிந்துக் கிடக்கின்றன.

இதே காலக் கட்டத்தில் நடந்த வேறு சில நிகழ்வுகளையும் நாம் பார்க்க வேண்டும்.  2017 டிசம்பர் மாதம் 31ஆம் தேதி  ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் அறிவிக்கிறார். 2018ம் 2019ம் கடக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ஆரம்பிப்பதாக சொன்ன கட்சி போட்டியிடவில்லை. ஆனால் அரசியல் கருத்துக்களை மட்டும் அவ்வபோது சொல்லி அரசியல் முடிவை அணையாமல் பார்த்துக் கொள்கிறார்.

2020 மார்ச் மாதம் 12ஆம் தேதி ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிடுகிறார்,  லீலா பேலஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த். தனது அரசியல் வருகை குறித்து பேசுகிறார். அப்போது அவர் சொல்லிய ஒரு கருத்து முக்கியமானது.

 ‘முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு என்றைக்குமே இருந்ததில்லை.முதல்வராக என்னை நான் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. தமிழகத்தில்  உள்ள அனைவருக்கும் இதுபற்றி 1996  லேயே தெரியும். ஆக நான் வலிமையான  கட்சித் தலைமை  பொறுப்பை வகிப்பேன். எனது கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும்  நேர்மையும் , திறமையும் ஒருங்கே அமையப் பெற்ற தன்னம்பிக்கையுள்ள படித்த சுயமரியாதையுள்ள ஒரு இளைஞரை ( அவர் பெண்ணாகக்கூட இருக்கலாம்) முதல்வர் பதவியில் அமர்த்துவேன்’ இதுதான் ரஜினி சொன்னது.

2016ல் ஜெயலலிதா மறைகிறார். 2017 இறுதி நாளில் கட்சித் துவங்குவதாக ரஜினி அறிவிக்கிறார். 2018ல் கருணாநிதி மறைகிறார். 2019 மே மாதம் அண்ணாமலை ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்கிறார். 2020 பிப்ரவரியில் நாட்டை மாற்ற வேண்டும், விவசாயத்தைக் காக்க வேண்டும் என்று பேட்டி கொடுக்கிறார். 2020 மார்ச் மாதம் நான் முதல்வர் இல்லை, படித்த நல்ல இளைஞர்தான் முதல்வர் என்று ரஜினி அறிவிக்கிறார்.  ஆனால் அரசியல் தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபடவில்லை. கொரோனா பொதுமுடக்க காலம் முடிந்ததும் அவர் அரசியல் வேலைகளை ஆரம்பிக்கவில்லை அண்ணாத்தே ஷூட்டிங்குக்குதான் சென்றார். அவருக்கு கொரோனா வருகிறது. ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.  ரஜினியில் நிலை இப்படி இருக்கும்போது 2020 ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைகிறார் அண்ணாமலை.

தனித் தனியே நடந்த நிகழ்வுகள் என்றாலும் அந்த நிகழ்வுகளின் சூழலை ஆராய்ந்து பார்த்தால் அதில் ஒரு வலைப் பின்னல் இருப்பதைப் பார்க்க இயலுகிறது.

இந்த நிகழ்வுகளுக்கு Anti Climax 2020 டிசம்பர் 29ஆம் தேதி அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினி அறிவிக்கிறார். தமிழ்நாட்டுக்கு அரசியல் கட்சிகள் வைத்திருந்த திட்டங்கள் மாறுகின்றன. 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வென்று ஆட்சியைப் பிடிக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் அண்ணாமலை பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவராக 2021 அக்டோபர் மாதம் பொறுப்பேற்கிறார்.

அதாவது ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளாராக வந்திருக்க வேண்டியவர் தமிழ்நாட்டு பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார்.

இதுதான் அண்ணாமலை பாஜகவுக்குள் வந்த கதை.

ஆனால், அவர் ஒப்பிட்டுக் கொள்ளும் கருணாநிதி, ஜெயலலிதா அரசியலில் வளர்ந்த கதை வேறு. அவர்கள் வந்த விதமும், அரசியலில் வளர்ந்த விதமும் எல்லோருக்கும் தெரியும்.

அண்ணாமலை பாஜகவின் தலைவரான பிறகு என்ன சாதித்தார்?

2021 அக்டோபர் மாதம் அண்ணாமலை பாஜகவின் தமிழ்நாட்டு தலைவராக நியமிக்கப்படுகிறார்.

அவர் சந்தித்த முதல் சவால் 2022 நகர்புற உள்ளாட்சித் தேர்தல். இந்தத் தேர்தலில் அவரால் அதிமுக கூட்டணியை நீட்டிக்க முடியவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தல் முதல் நீடித்து வந்த அதிமுக கூட்டணி நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் முடிவுக்கு வந்தது. பாஜக தனித்துப் போட்டியிட்டது.

இதுவே பாஜகவுக்கு சறுக்கல்தான். அவரால் கூட்டணியைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

தேர்தல் முடிவுகளிலும் அத்தனை வெற்றி அல்ல. 2011ல் 222 இடங்களில் வென்றிருந்த பாஜக 2022ல் 308 இடங்களில் வென்றிருந்தது. பதினோரு ஆண்டுகளில் இதுதான் பாஜகவின் வளர்ச்சி என்று அப்போது அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டினார்கள். திமுக, அதிமுகவுக்குப் பிறகு மூன்றாவது இடத்தில் பாஜக என்று பெருமிதம் கொண்டார் அண்ணாமலை. அதில் உண்மையும் உள்ளது. ஆனால் திமுக, அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் மிகப் பெரிய வாக்கு வித்தியாசம் இருந்தது.

மாநகராட்சி வார்டு உறுப்பினர் (வாக்கு சதவீதம்)

திமுக – 43.59%   அதிமுக – 24%  பாஜக – 7.17%  காங்கிரஸ் – 3.16%

நாம் தமிழர் கட்சி – 2.51%  மக்கள் நீதி மய்யம் – 1.82% பாட்டாளி மக்கள் கட்சி – 1.42%   அமமுக – 1.38%   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 1.31%  தேமுதிக – 0.95%

மதிமுக – 0.90%   இந்திய கம்யூனிஸ்ட் – 0.88%   விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – 0.72%

நகராட்சி வார்டு உறுப்பினர் (வாக்கு சதவீதம்)

திமுக – 43.49%   அதிமுக – 26.86%   பாஜக -3.31%  காங்கிரஸ் – 3.04%

நாம் தமிழர் கட்சி – 0.74%   மக்கள் நீதி மய்யம் – 0.21%   பாட்டாளி மக்கள் கட்சி – 1.64%   அமமுக – 1.49%   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 0.82%  தேமுதிக – 0.67%

மதிமுக – 0.69%    இந்திய கம்யூனிஸ்ட் – 0.38%   விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – 0.62%

பேரூராட்சி வார்டு உறுப்பினர் (வாக்கு சதவீதம்)

திமுக – 41.91%   அதிமுக – 25.56%   பாஜக – 4.30%  காங்கிரஸ் – 3.85%            நாம் தமிழர் கட்சி – 0.80%   மக்கள் நீதி மய்யம் – 0.07%   பாட்டாளி மக்கள் கட்சி – 1.56%   அமமுக – 1.35%  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 1.34%    தேமுதிக – 0.55%

மதிமுக – 0.36%   இந்திய கம்யூனிஸ்ட் – 0.44%   விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – 0.61%   இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 0.14%

இந்த தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலையின் குரல் உயர்ந்தது. பாஜகவை மூன்றாம் இடத்துக்கு கொண்டு வந்துவிட்டார் என்ற பாராட்டுக்கள் சமூக ஊடகங்களில் பரவியது.

ஆனால் அதன் பிறகு பாஜகவின் தலைவராக அண்ணாமலையின் சாதனைகள் என்று பார்த்தால் ஒன்றே ஒன்றுதான் தினமும் செய்திகளில் இருந்துக் கொண்டே இருந்தது.

திருச்சி சூர்யா சிவா – டெய்ஸி ஆபாச ஆடியோ

கேசவ விநாயகம் குறித்து ஆபாச குற்றச்சாட்டுக்கள்

காயத்ரி ரகுராம் துபாய் பயணம் குறித்த ஆபாச விமர்சனங்கள்

அலிஷாவை லாங் ட்ரைவ்க்கு கூப்பிட்டார்கள் என்று சூர்யா ஆபாச குற்றச்சாட்டு

வேலூர் இப்ராஹிம் – டெய்சி தொடர்பு குறித்து ஆபாச குற்றச்சாட்டுகள்

சேலை எப்படி கட்ட வேண்டும் என்று அலிஷாவுக்கு அட்வைஸ்….

அமர்பிரசாத் மீது மாரிதாஸ் குற்றச்சாட்டுக்கள்

இப்படி தொடர்ந்து பாஜக குறித்து பேச்சுக்கள்தாம். கே.டி.ராகவனில் தொடங்கி தொடர்ந்து பாஜகவில் ஆபாச புகார்கள்.

அதனைத் தொடந்து காயத்ரி ரகுராம், திருச்சி சூர்யா விலகல். இப்போது சிடிஆர் நிர்மல்குமாரும் அவரை சார்ந்தவர்களும் விலகியிருக்கிறார்கள், மிகக் கடுமையான குற்றச்சாட்டுக்களுடன். அத்துடம் நிற்கவில்லை. அவர்கள் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள்.  அதற்குதான் கருணாநிதி, ஜெயலலிதா போல் தான் ஒரு லீடர் என்று எதிர்வினையாற்றியிருக்கிறார் அண்ணாமலை.  

ஈரோடு கிழக்கு தேர்தலில் அதிமுக அணிகளை இணைக்க முயன்றார். எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்து கூட்டணி பேனரையும் மாற்றி எழுதியதும் அண்ணாமலை பம்மினார். தவறாக எழுதிவிட்டார்கள், பிரிண்டிங் மிஸ்டேக் என்று சமாளித்தார். இப்போது இவரை கடுமையாக விமர்சித்தவர்களையே அதிமுகவுக்குள் அனுமதித்திருக்கிறார் எடப்பாடி.

இப்படிதான் அண்ணாமலையின் அரசியல் வரலாறு தமிழ்நாட்டில் எழுதப்பட்டு வருகிறது.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் தலைவர்களாக இருந்ததால் தலைப்புச் செய்திகளில் வந்தார்கள். தலைப்பு செய்திகளில் வந்ததால் அவர்கள் தலைவர்களாக மாறிவிடவில்லை.

தலைப்பு செய்திகளில் வந்தால் மட்டுமே தலைவர் ஆகி விட முடியாது, எதற்காக வருகிறோம் என்பதையும் ‘லீடர்’ அண்ணாமலை உணர வேண்டும்.

இப்போது சொல்லுங்கள் அண்ணாமலை ரஜினியா? வடிவேலுவா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...