உலகக் கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறாத நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் அஸ்வின் சேர்க்கப்பட்டிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்புகூட அணிகளில் மாற்றம் செய்யலாம் என்று விதி இருப்பதால், இந்த உலகக் கோப்பை தொடரில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, அதில் அஸ்வின் இல்லாதது தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் உலகக் கோப்பை தொடர் நடைபெறும்போது, இந்தியாவின் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளரும், ஓரளவு சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவருமான அஸ்வினை அணியில் சேர்க்காதது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.
113 ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்களை எடுத்துள்ள அஸ்வின், ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஒரு ஓவருக்கு 5 ரன்களுக்கும் குறைவாகத்தான் கொடுத்துள்ளார். அப்படி இருந்தும் அவரை உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்காததை பலரும் ரசிக்கவில்லை. அஸ்வின், தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், என தகுதியான பல தமிழக வீரர்கள் இருந்தாலும், அவர்களில் ஒருவருக்குகூட உலகக் கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்காதது தமிழக ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது.
இந்த சூழலில்தான் ஒரு திருப்பம் ஏற்பட்டது. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டர் என்ற முறையில் சேர்க்கப்பட்ட அக்ஷர் படேல், ஆசிய கோப்பை போட்டியின்போது காயமடைய, அவருக்கு பதில் மாற்று வீர்ராக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கு அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த இருவரில் யாராவது ஒருவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இருவரில் அதிக அனுபவம் கொண்டவர் என்பதாலும், ஏற்கெனவே உலகக் கோப்பையை வென்ற 2011-ம் ஆண்டு இந்திய அணியில் முக்கிய பங்காற்றியவர் என்பதாலும் அஸ்வினுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வினை சேர்க்க எதிர்ப்புகளும் உண்டு. கடந்த பல ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அஸ்வின் பந்துவீசி வந்துள்ளார். 2022-ம் ஆண்டில் நடந்த 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அஸ்வின் சமீபமாக பந்து வீசியுள்ளார். இந்த சூழலில் உலகக் கோப்பை தொடருக்கு அஸ்வினை பரிசீலிப்பது சரியா என்று ஒரு சில முன்னாள் வீர்ர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஒருநாள் போட்டிகளில் சமீப காலமாக ஆடாததால் உலகக் கோப்பைக்கு அவர் தயாராக இருக்க மாட்டார் என்பது அவர்களின் வாதமாக உள்ளது.
அப்படி கேள்வி எழுப்புபவர்களுக்கு சரியான பதிலை அளித்திருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றி பேசிய ரோஹித் சர்மா, “94 டெஸ்ட் போட்டிகளிலும், 113 ஒருநாள் போட்டிகளிலும் ஆடிய அனுபவம் கொண்டவர் ரவிச்சந்திரன் அஸ்வின். அதனால் அவர் எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராகவே இருப்பார். மேலும் ஒருநாள் போட்டிகளில் ஆடாவிட்டாலும், ஐபிஎல், டிஎன்பிஎல் போன்ற போட்டிகளில் அவர் தொடர்ந்து ஆடிவருகிறார். அதனால் அவரை பரிசீலிப்பதில் தவறில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதைப் பார்த்து முடிவெடுப்போம்” என்று ரோஹித் சர்மா கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர் கூறும்போது, “உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் அக்ஷர் படேல் காயத்தில் இருந்து குணம் அடையாவிட்டால், ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
இந்த இருவரில் இந்திய அணியின் டீம் மேனேஜ்மெண்டுக்கு அஸ்வினின் போராட்ட குணம் பிடிக்கும் என்பதால் அவருக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அது நடந்தால் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆடிய வீர்ர்களில் கோலியோடு அஸ்வினும் இந்த உலக்க் கோப்பையில் இடம்பெறுவார். அப்போது நடந்ததைப் போல் இப்போதும் அஸ்வின் கோப்பையை பெற்றுத் தருவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.