No menu items!

பாஜக – அதிமுக கூட்டணி முறிவு: யாருக்கு நஷ்டம்? – மாலன் பார்வை

பாஜக – அதிமுக கூட்டணி முறிவு: யாருக்கு நஷ்டம்? – மாலன் பார்வை

தமிழக தேர்தல்களை அளவிட வாக்குகளை இப்படி வகைப்படுத்திக் கொள்ளலாம்.

  1. திமுக வாக்குகள்.
  2. அதிமுக வாக்குகள்
  3. கட்சிசாரா வாக்குகள்

திமுக ஆட்சியில் இருப்பதால் அதனை மையப்படுத்தி இப்படி வகைப்படுத்துகிறேன். இதையே அதிமுகவை மையப்படுத்தி வகைப்படுத்தினாலும் சாரம்சத்தில் பெரிய மாறுதல்கள் இராது.

திமுக ஆதரவு வாக்குகளை இப்படிப் பகுக்கலாம்:

  1. திமுக கட்சியினர் வாக்குகள்
  2. திக, தமிழ் தேசியர்கள், திமுக குடும்பத்தினர் வாக்குகள்
  3. கூட்டணிக் கட்சியினரின் வாக்குகள்
  4. சிறுபான்மையினரின் வாக்குகள்
  5. அதிமுக, பாஜக, எதிர்ப்பு வாக்குகள்

அதிமுக ஆதரவு வாக்குகளை இப்படி வகைப்படுத்தலாம்

  1. அதிமுக கட்சியினர் வாக்குகள்
  2. ஜெயலலிதா அபிமானிகளின் வாக்குகள்
  3. திமுக எதிர்ப்பு வாக்குகள்
  4. பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்குகள்

இதில் பாஜகவிற்கு கிடைக்க சாத்தியமுள்ள வாக்குகள்

  1. பாஜக கட்சியினரது வாக்குகள்
  2. சங்பரிவார், ஆர். எஸ். எஸ், இந்துத்வா வாக்குகள்
  3. மோடி ஆதரவாளர்கள் வாக்குகள்

லாப – நஷ்டம்

ஒரு வேளை பாஜக-அதிமுக கூட்டணி முறிவு உறுதியாகி மும்முனை (அல்லது அதற்கு மேற்பட்ட பல முனைப் போட்டி) ஏற்பட்டால் –

திமுக வாக்குகளில் மாற்றம் இராது (கட்சி சாரா வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றால் இது கூடலாம்.)

ஏன் மாற்றம் இராது என்றால் திமுக வாக்குகள் என நான் மேலே குறிப்பிட்டிருப்பவற்றில் எதுவும் எதிரணிகளுக்குச் செல்ல வாய்ப்பில்லை. ஒரு வேளை அதிமுக அல்லது பாஜக, திமுகவின் கூட்டணிக் கட்சிகளில் சிலவற்றை தங்கள் பக்கம் இழுத்தால் சிறு மாற்றம் ஏற்படலாம். ஆனால், அந்தக் கட்சிகள் அதிமுக/பாஜக பக்கம் வர வாய்ப்புக் குறைவு. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக, முஸ்லீம் கட்சிகள் தங்களை இண்டி கூட்டணியோடு பிணைத்துக் கொண்டிருப்பதால் அதிலிருந்து விடுவித்துக் கொண்டு எதிர்ப்புறம் செல்ல வாய்ப்பில்லை.

இவற்றைக் கொண்டு பார்க்கும் போது திமுகவிற்கு இழப்பில்லை. லாபம் இருக்கலாம் (அது பிரச்சாரத்தை எப்படிக் கையாள்கிறது என்பதைப் பொறுத்து)

அதிமுகவைப் பொறுத்தவரை கூட்டணியிலிருந்து பாஜக வெளியேறும் பட்சத்தில் அது மேலே குறிப்பிட்டுள்ள பாஜக வாக்குகளை இழக்கும். ஜெயலலிதா அபிமானிகளின் வாக்குகளில் கணிசமானவற்றையும் இழக்க வாய்ப்புண்டு. ஜெயலலிதா, இந்து மத அபிமானிகளின் ஆதரவைக் கணிசமாகப் பெற்றிருந்தார். அதுவன்றி அவருக்குப் பெண்கள் ஆதரவு பலமாக இருந்தது. பெண்கள் வாக்கை, இலவசப் பஸ் பயணம், உரிமைத் தொகை போன்றவற்றின் மூலம் திமுக தன் பக்கம் இழுத்துக்கொள்ள சாத்தியங்கள் உண்டு. அதிமுக ஆதரவு வாக்குகளையுமே, கட்சியில் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக அது ஓரளவிற்கு (சில பகுதிகளில்) இழக்கக் கூடும். பொது மக்களிடையே ஜெயலலிதா பெற்றிருந்த ஈர்ப்பின் அளவிற்கு எடப்பாடியார் பெறவில்லை என்பது யதார்த்தம்.

இவற்றைக் கொண்டு பார்க்கும் போது அதிமுகவிற்கு இழப்பு உண்டு. லாபம் பெரிதாக ஏற்பட வாய்ப்பில்லை.

பாஜகவைப் பொறுத்தவரை மேலே குறிப்பிட்டுள்ள அதன் வாக்குகளில் இழப்பு இராது. அதற்குக் கிடைக்கக் கூடிய அதிமுக வாக்குகளை, குறிப்பாக மேற்கு மண்டலத்தில் அது இழக்கும். அது கூட்டணியை எப்படிக் கட்டுகிறது என்பதையும் பிரசாரத்தையும் பொறுத்து அதன் வாய்ப்புக்கள் அமையும். பாமகவை அது தன் பக்கம் கொண்டு வர முயற்சிக்கும். எடப்பாடியோடு கூட்டணி இல்லை என்றால் ஓபிஎஸ் (இப்போது முரண் இருந்தாலும்) பாஜக பக்கம் சாய முயற்சிப்பார். முத்துராமலிங்கத் தேவரை முன்னிறுத்துவதன் மூலம் அது ஓபிஎஸ்சின் வாக்கு வங்கியைத் தன் பக்கம் இழுத்துக்கொள்ள முயற்சிக்கிறது என்பது என் ஊகம். விஜயகாந்த் தீர்ந்து போன விசை (Spent Force) பாமக, ஓபிஎஸ் மற்றும் சில சிறிய கட்சிகளின் மூலம் அதற்கு சில தொகுதிகளில் சில ஜாதிகளின் ஆதரவு கிடைக்கலாம்.

அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றாலும். அதற்கு ஐந்து தொகுதிகளுக்கு மேல் அதிமுக ஒதுக்கும் என நான் கருதவில்லை. (தேர்தலுக்குப் பிந்தைய கணக்குகளை மனதில் கொண்டு அதிமுக அதிக இடங்களில் போட்டியிடும் என நான் எதிர்பார்க்கிறேன்) அங்கும் கூட இப்போது இருந்து வரும் கசப்புகளால் உள்ளடி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றியை இழக்கும் வாய்ப்புக்கள் உண்டு.

இவற்றைக் கருத்தில் கொண்டு பார்த்தால், பாஜகவிற்கு இழப்பு இருக்கலாம். ஆனால், பெரிய இழப்பு என்று சொல்வதற்கில்லை. இன்னும் சொல்லப்போனால் நீண்டகால நோக்கில் அது அதற்கு ஆதாயமாகக் கூட அமையலாம்.

திராவிடக் கட்சிகளோடு உறவு கொண்ட கட்சிகள் முதலில் சில இடங்களைப் பெற்றாலும் நாளடைவில் பலமிழந்து போயிருக்கின்றன என்பதை, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், பாமக, தேமுதிக ஆகியவற்றின் தேர்தல் வரலாறுகள் சொல்கின்றன. அது ஒரு வகையான திருதிராஷ்டிரத் தழுவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...