No menu items!

கலைஞர் – எம்.ஜி.ஆர் பிரிந்தது தமிழ்நாட்டுக்கு நல்லது! ஏ.எஸ். பன்னீர்செல்வன் பேட்டி

கலைஞர் – எம்.ஜி.ஆர் பிரிந்தது தமிழ்நாட்டுக்கு நல்லது! ஏ.எஸ். பன்னீர்செல்வன் பேட்டி

கலைஞர் மு. கருணாநிதி வாழ்க்கை வரலாற்று நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ள பிரபல பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன், அந்நூல் குறித்து வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சி…

கலைஞர் – எம்.ஜி.ஆர். பிரிவு குறித்த உங்கள் பார்வை என்ன?

கலைஞர் – எம்.ஜி.ஆர். பிரிவுக்கும் அதனைத் தொடர்ந்த திமுக உடைவுக்கும் பின்னால் டெல்லியின் சுயநலன் உள்ளது. ஆனாலும், அதன் விளைவாக அதிமுக என்ற கட்சியை உருவாக்கியதை தமிழ்நாட்டுக்கு டெல்லி கொடுத்த கொடையாகத்தான் நான் பார்க்கிறேன். அதன்பின்னர் தேசிய கட்சிகளுக்கு இங்கு இடமில்லாமல் ஆகிவிட்டது. இதை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தொடர்ந்து தமிழ்நாட்டின் அரசியல் களம் இங்குள்ள தலைவர்களிடமே இருந்தது நமக்கு கிடைத்த பெரிய பாதுகாப்பு அரண். இத்தனை வருடங்களுக்குப் பின்னர் பார்க்கும்போது, ஜனநாயக களம் மாநில அரசியலுக்குள் அமைந்ததுக்கான காரணம் அதிமுக என்ற கட்சி உருவானதுதான் என்பதை உணர முடிகிறது. கலைஞர் – எம்.ஜி.ஆர். பிரிவால் இழப்புகள் இருந்தாலும் நீண்ட கால நோக்கில் தமிழ்நாட்டுக்கு பலன்கள்தான் அதிகம்.

ஈழப் போராட்டம் குறித்த கலைஞர் நிலைப்பாடுகள் தொடர்பாக, குறிப்பாக ஈழப் போரின் கடைசி நாட்களில் அவர் எடுத்த முடிவுகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் நிறைய விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. அவற்றுக்கு உங்கள் பதில் என்ன?

டெலோ தலைவர்கள் கொல்லப்பட்டபோது, இந்த சகோதர யுத்தம் நமக்கு ஏற்றதல்ல என்று கலைஞர் சொன்னார். அப்போது தொடங்கி கடைசி காலகட்டம் வரைக்கும் ஈழப் பிரச்சினையை புரிந்துகொண்ட தலைவர்களில் கலைஞர் முதன்மையானவர் என்பதுதான் எனது புரிதல். அவர் இல்லாவிட்டால் சில முக்கிய நிகழ்வுகள் நடந்திருக்காது. முதலாவது, அனைத்து போராளி குழுக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்காக அவரது முயற்சியில் நடந்த டெசோ மாநாடு. அதுதான் தமிழர்கள் ஒற்றுமைக்கான முதல் முயற்சி.

இரண்டாவது, அன்றைய இந்திய பிரதமர் வி.பி. சிங் உடன் பேசி, இந்திய அமைதிப் படையை திரும்ப அழைத்தது. அதன்மூலம்தான் இலங்கையில் வடகிழக்கு மாகாணத்தில் போராளிகளுக்கு ‘ஆட்சிப் பரப்பு’ என்று ஒன்று கிடைத்தது. அதற்கு முன்புவரை அவர்களுக்கு ஆட்சி செய்ய நிலம் கிடையாது. வி.பி. சிங் மூலம் கலைஞர் உருவாக்கிக் கொடுத்த இந்த வாய்ப்பை ஐந்து வருடங்கள்கூட போராளிகளால் காப்பாற்ற முடியவில்லை. யாழ்ப்பாணத்தை இழந்துவிட்டு மறுபடியும் காட்டுக்குள் சென்றுவிட்டார்கள்.

இன்று கலைஞரை விமர்சிக்கும் யாரும் இதையெல்லாம் சொல்வதில்லை. வரலாற்றை இப்படி நமது விருப்பத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து பார்க்க முடியாது. ஈழப் போராட்ட வரலாற்றை அதன் முழுமையுடன் பார்க்கும்போது ஈழத் தமிழர்கள் மீது மிகப் பரிவுடன் இருந்த தலைவர் கலைஞர் என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இருக்க முடியாது.

நோபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காப்ரியல் கார்சியா மார்க்கெஸ் வாழ்க்கை வரலாற்றை முன்மாதிரியாகக் கொண்டுதான் கலைஞர் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் எழுதியதாக சொல்லியுள்ளீர்கள். இதை விளக்க முடியுமா?

மார்க்கெஸ் வாழ்க்கை வரலாற்றை ஜெரால்ட் மார்ட்டின் என்பவர் எழுதியுள்ளார். கொலம்பியாவின் அரசியல், அந்த அரசியலில் இருந்து வந்த இலக்கியம் – இந்த இரண்டையும் கலந்துதான் அந்த வாழ்க்கை வரலாற்றை அவர் எழுதியுள்ளார். இலக்கியத்தையும் அரசியலையும் தனித்தனியாக பார்க்காத அவரது இந்த பார்வை எனக்கு மிக முக்கியமாகப் பட்டது. முன்னதாக, இதுபற்றி மார்க்கெஸ்ஸிடம் ஜெரால்ட் மார்ட்டீன் பேசுகிறார். அப்போது மார்க்கெஸ் சொல்கிறார், “ஒவ்வொருவருக்கும் பொது வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை, ரகசிய வாழ்க்கை என மூன்று வாழ்க்கை உண்டு; என் பொதுவாழ்க்கையையும், எனக்கு நெருங்கியவர்களுடன் பேசுவதன் மூலம் என் தனிப்பட்ட வாழ்க்கையின் ஒரு சில பகுதிகளையும் உங்களால் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், என் ரகசிய வாழ்க்கையை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்று எனக்கு தோன்றவில்லை” என்கிறார். அப்போது ஜெரால்ட் மார்ட்டீன், “நீங்க எனக்கு அதற்கு அனுமதியளிப்பீர்களா” என்று கேட்கிறார். “அதை கண்டுபிடிக்க வேண்டியது உங்கள் வேலை” என்று மார்க்கெஸ் சொல்லிவிடுகிறார்.

இதை நான் கலைஞரிடம் சொன்னபோது அவர் சொன்னார், “பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நான்கு வாழ்க்கை இருக்குய்யா; இந்த மூன்றுடன் நாம வாழ விரும்பிய வாழ்க்கை என்றும் ஒன்று உள்ளது” என்றார். “அதை எப்படி கண்டுபிடிப்பது” என்று நான் கேட்டேன். “நீயாகத்தான் கண்டுபிடிக்க வேண்டும்; நான் சொல்ல முடியாது. ஆனால், நான் அதை பதிவு செய்துள்ளேன்” என்றுவிட்டார்.

நீங்கள் அதை கண்டுபிடித்தீர்களா?

என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. கல்லூரிகளுக்கு போய் படித்திருக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கலாம்; ஆங்கிலம் இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள வேண்டும் என்றிருந்திருக்கலாம் – இதுபோல் ஆங்காங்கே சில புரிதல்கள் கிடைக்கிறது என்றாலும் தெளிவாக ஒன்றும் கிடைக்கவில்லை.

திராவிட மாடல் – கலைஞர் என்ன செய்தார்? – ஏ.எஸ். பன்னீர்செல்வன் பேட்டி 1 படிக்க இங்கே அழுத்தவும்


ஏ.எஸ். பன்னீர்செல்வன் எழுதிய ‘கலைஞர் வாழ்க்கை வரலாறு’ நூலை வாங்க இங்கே அழுத்தவும்


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...