No menu items!

வெட்கமாக இல்லையா? – வெற்றிமாறன் படத்துக்கு எதிர்ப்பு!

வெட்கமாக இல்லையா? – வெற்றிமாறன் படத்துக்கு எதிர்ப்பு!

வெற்றிமாறன் தயாரிக்கும் ‘மா.பொ.சி.’ திரைப்படத்துக்கு சிலம்பு செல்வர் ம.பொ.சி. குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விமல் நடிப்பில் போஸ் வெங்கட் இயத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ’மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்’, சுருக்கமாக ‘மா.பொ.சி.’. இந்தப் படத்தை வெற்றிமாறன் தயாரிக்கிறார். சித்துகுமார் இசையமைக்கிறார், பத்திரிகையாளர் சுகுணா திவாகர் வசனம் எழுதுகிறார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் இந்த படத்துக்கு சிலம்பு செல்வர் ம.பொ.சி.யின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ம.பொ.சி-யின் பேத்தி தி. பரமேசுவரி படக் குழுவினரை விமர்சித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், “மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்னும் ம.பொ.சியைப் பலர் மா.பொ.சி (தவறே எனினும்) என்றும் அழைக்கின்றனர். உச்சரிக்கையில் குறில் நெடிலாகி அதுவே எழுத்தாகும்போது நேரும் தவறு. மா.பொ.சி என்றாலும், அவருடைய உருவமே நினைவிலெழும்.

போஸ் வெங்கட் இயக்கத்தில் மா.பொ.சி என்றொரு போஸ்டரைப் பார்த்தேன். தமிழ் இயக்குநர்களுக்கு ஏன் இந்த கற்பனை வறட்சியென்று நினைத்தேன்.

மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானமாம். மாங்கொல்லை மயிலாப்பூரிலிருக்கும் ஒரு பகுதி; பொன்னரசனும் பொன்னுசாமியும்; கடைசிப் பெயர் சிவஞானமே. முகத்தில் மரு வைத்து மறைத்தாலும் மறைக்க முடியாதவராயிற்றே அவர்.

தமிழுக்குத் தொண்டாற்றியவர்களை நீங்கள் மதிக்கவே வேண்டாம்; ஆனால், ஏன் இப்படி அவமதிக்கிறீர்கள்? நாடறிந்த ஒரு தலைவரை, எல்லைப் போராட்ட வீரரை, சிலம்புச் செல்வரை அவருடைய பெயரைப் பயன்படுத்திக்கொண்டு, அவருடைய கதையில்லையென்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவருடைய குடும்பத்தாரிடம் அனுமதி வாங்க வேண்டுமென்று தெரியாதா?” என்று எழுதியுள்ளார்.

இந்த சர்ச்சையில் ம.பொ.சி. குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவித்து எழுத்தாளர், கவிஞர்கள் பலரும் ‘மா.பொ.சி.’ படக் குழுவினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். திரைப்பட ஆய்வாளர் சோழ நாகராஜன், “இது ஏற்கத்தக்க செயலல்ல. மபொசி என்றாலும் மாபொசி என்றாலும் அந்தத் தலைவரே நினைவில் தோன்றுவார். ஒரு திரைப்படத்திற்கு இப்படிப் பெயரிடுவதை உடனடியாகக் கைவிட வேண்டும். அவரை நானும் பெரிதும் மதிப்பவன். இந்த முயற்சியை அனுமதியோம்!” என்று பதிவிட்டுள்ளார்.

முதல் போஸ்டர் வெளியாகி, படத்தின் தலைப்பு சர்ச்சையான நிலையில், தொடர்ந்து வந்த விளம்பரங்களில் வெற்றிமாறன் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இயக்குநர் போஸ் வெங்கட் தரப்பில், “இந்த பிரச்சினையை சரி செய்வோம்” என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...