No menu items!

நான்கு கோடி ரூபாய் – நயினார் சந்தேகத்தில் இருவர்! – மிஸ் ரகசியா

நான்கு கோடி ரூபாய் – நயினார் சந்தேகத்தில் இருவர்! – மிஸ் ரகசியா

“பணத்துக்கு ரொம்ப கஷ்டப்படறாங்களாம்… பாவம்” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“யாரைப் பத்தி சொல்றே?”

“காங்கிரஸ் கட்சியைப் பத்திதான். காங்கிரஸ் கட்சிக்கு பணம் வர்ற பல ரூட்களையும் மத்திய அரசு அடைச்சுடுச்சு. அதோட காங்கிரஸ் கட்சியின் சில வங்கிக் கணக்குகளையும் முடக்கிடுச்சு. அதனால தேர்தலை சந்திக்க பணம் இல்லாம காங்கிரஸ் தவிக்குது. முன்ன எல்லாம் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தின்னு தனி விமானத்துல ஒவ்வொரு தலைவரும் பிரச்சாரத்துக்கு போவாங்க. இப்ப விமான டிக்கெட் வாங்கக்கூட வழியில்லாம இருக்காங்க. ஒவ்வொரு செலவுக்கும் யார்கிட்டயாவது கெஞ்ச வேண்டிய நிலையில காங்கிரஸ் இருக்கு. இதுபத்தி சமீபத்துல முதல்வர் மு.க.ஸ்டாலின்கிட்ட பேசியிருக்கார் ராகுல் காந்தி. ‘உங்களுக்கு தமிழ்நாட்டு தேர்தலுக்கு மட்டும் பணம் செலவு செஞ்சா போதும். ஆனா எங்களுக்கு நாடு முழுக்க செலவு பண்ணவேண்டி இருக்கு. பண நிலைமை சரியில்லை’ன்னு சொல்லி கொஞ்சம் நிதிக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கார்.”

“அதுக்கு முதல்வர் என்ன சொன்னாராம்?”

“எல்லாம் மாறும்னு ராகுல் காந்திக்கு ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின், அப்படியே காங்கிரஸ் கட்சி தேர்தல் செலவுகளை சந்திக்க பணம் கிடைக்கவும் ஏற்பாடுகளை செஞ்சதா சொல்றாங்க.”

“காங்கிரசுக்கும் பணக் கஷ்டம் பாஜகவுக்கும் பணத்தால கஷ்டம் போல.”

“நீங்க நயினார் நாகேந்திரனைப் பத்திதான் பேசறீங்கன்னு தெரியுது. தன்னுடைய ஆதரவாளர் கிட்ட இருந்து 4 கோடி பிடிபட்டதுக்கு கட்சிக்காரங்களே உடந்தையா இருப்பாங்களோன்னு நயினார் நாகேந்திரன் சந்தேகப்படறார்.”

“என்ன சந்தேகம்?”

“பணம் கொண்டு போறது மூணு பேருக்குதான் தெரியுமாம். அதுல ஒருத்தர் நயினார். இன்னொருவர் அண்ணாமலை. மூணாவதா பாஜகவுல இருக்கிற வெளில தெரியாத மூத்த தலைவர் ஒருவர். இந்த மூணு பேர்ல ஒருத்தர்தான் வெளில சொல்லியிருக்கணும். இதுல நயினார் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அப்ப மீதி ரெண்டு பேர்தானேனு பாஜகவிலேயே பேசிக்கிறாங்க”

”நயினார் என்ன சொல்றார்?”

”பயங்கர அப்செட். இதுபத்தி அண்ணாமலைகிட்ட பேசின அவர், ‘நம்ம கட்சிக்காரங்க யாரோதான் இந்த தகவலை காவல் துறைக்கு சொல்லி இருக்காங்க. இவங்களை வச்சுட்டு நான் எப்படி தேர்தல் வேலைகளை பார்க்கிறது?’ன்னு கோபப்பட்டிருக்கார்”

“அண்ணாமலை என்ன சொன்னாராம்”

“அண்ணேன் நான் பாத்துக்கறேன்னு வழக்கப் போல சொல்லியிருக்கிறார்”

“மத்த கட்சிகள்ல எல்லாம் நிதி நிலைமை எப்படி இருக்கு?”

“முன்னல்லாம் திமுகவும், அதிமுகவும் தேர்தல் செலவுக்கான பணத்தை சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள்கிட்ட கொடுத்துடும். ஆனா இந்த முறை அதிமுகவை பொறுத்தவரை அந்த கட்சி பெரும்பாலும் பணக்கார வேட்பாளர்களைத்தான் நிறுத்தி இருக்காங்க. தேர்தல் செலவுகளையும் அவங்களையே பார்த்துக்கச் சொல்லி இருக்காங்க. கட்சி தயவுல தேர்தல்ல போட்டி போடற வேட்பாளர்களுக்கும் அவங்க நேரடியா பணத்தைக் கொடுக்கல. மாவட்ட செயலாளர்கள்கிட்ட கொடுத்து செலவுகளை பார்த்துக்கச் சொல்லி இருக்காங்க திமுகவும் இந்த தடவை வேட்பாளர்கள்கிட்ட பணத்தைக் கொடுக்காம, மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட அமைச்ச்சர்கள்கிட்ட பணத்தைக் கொடுத்து செலவு செய்ய வைக்கிறாங்க. அதனால வேட்பாளர்கள்கிட்ட அவ்வளவா பணப் புழக்கம் இல்லை. பொதுவா தேர்தல் சமயத்தில் வேட்பாளர்களுக்கு கட்சி பணம் தரும்போது, அவங்க அதுல இருந்து கொஞ்சம் பணத்தை பதுக்கி வைக்கறது வழக்கம். இந்த முறை வேட்பாளர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கல.”

“ஆனா இப்ப மாவட்ட செயலாளர்கள் அமுக்கிடுவாங்களே. அதுக்கு என்ன பண்ணுவாங்க?”

“தேர்தல் வெற்றி மாவட்டத்தோட பொறுப்புல. அவங்க கட்சிக்கு பதில் சொல்லணும்ல”

“பாமக எப்படியிருக்கு. சவுமியா ஜெயிச்சுடுவாங்களா?”

“இந்த முறை அதிகபட்சமா 10 தொகுதியில பாமக போட்டி போடுது. ஆனா சவுமியா அன்புமணி தருமபுரில நிக்கறதால அந்த தொகுதியிலதான் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸோட முழு கவனமும் இருக்கு. சவுமியா அன்புமணியிடம் தினந்தோறும் தேர்தல் பிரச்சாரத்தைப் பத்தி ராமதாஸ் போன்ல கேட்டு தெரிஞ்சுக்கறாராம். எந்த ஊர்ல எப்படி பேசணும்னு அவர்தான் டிப்ஸ்கூட கொடுக்கறதா பாட்டாளி கட்சிக்காரங்க பேசிக்கறாங்க. மருமகளுக்கு ஆதரவா தன்னோட பேத்திகளையும் தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுப்பி வைச்சதுகூட ராமதாஸ்தானாம்.”

“அன்புமணி இப்ப அதிகமா அதிமுகவை திட்டறாரே?”

“அதுகூட பாஜக சொல்லித்தான்னு சொல்றாங்க. திமுகவை மட்டும் பிரச்சாரங்கள்ல திட்டிட்டு இருந்தா போதாது. அதிமுக வலுவா இருக்கற இடங்கள்ல அவங்களையும் திட்டணும்னு அன்புமணிகிட்ட பாஜக சொல்லி இருக்காம்.”

“திமுக சைட் நியூஸ் ஏதாவது இருக்கா?”

“அரசு ஊழியர்களை சமாதானப்படுத்துவது என்பதில்தான் திமுகவின் கவனம் இருக்கிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. அரசு ஊழியர்கள் பொதுவாய் திமுக சார்ந்துதான் இருப்பார்கள். ஆனால் இந்த நிலை மாறுவது முதல்வருக்கு கவலையை கொடுத்திருக்கிறதாம். அரசு ஊழியர்கள் சங்கத்தினரிடம் பேசி சரி செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறாராம்”

“எலெக்‌ஷனுக்கு இன்னும் பத்து நாள்தான் இருக்கு. அதுக்குள்ள சரி பண்ண முடியுமா?”

“பணம் பத்தும் செய்யும்னு சும்மாவா சொன்னாங்க” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினார் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...