No menu items!

கனடாவை அடுத்து அமெரிக்கா! -இடியாப்பச் சிக்கலில் இந்தியா

கனடாவை அடுத்து அமெரிக்கா! -இடியாப்பச் சிக்கலில் இந்தியா

‘விடாது கருப்பு’ என்பார்களே. அதைப்போல இந்தியாவை விடாமல் தொடர்ந்தபடி இருக்கிறது ஒரு வில்லங்கம். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளை, அந்நிய மண்ணில் இந்தியா தீர்த்துக்கட்டுகிறது என்ற குற்றச்சாட்டுதான் அது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி கனடா நாட்டின் வான்கூவர் நகரத்து குருத்வாரா அருகே, ஹர்தீப்சிங் நிஜ்ஜார் என்பவர், இரு மர்ம மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்திய உளவுப்பிரிவின் கைங்கர்யம் இருப்பதாகத் தகவல் பரவியது. 

‘நிஜ்ஜார் கனடா நாட்டு குடிமகன், அவர் ஒரு வழக்கறிஞர். மனித உரிமை போராளி. அவரைப் போய் கொன்றுவிட்டார்களே?’ என்று கனடா கோபப்பட, ‘நிஜ்ஜார் காலிஸ்தான் புலிப்படையைச் சேர்ந்தவர். அவர் தேடப்படும் பயங்கரவாதி’ என இந்தியா சொல்ல, இந்தியா கனடா இடையிலான உறவு வரலாறு காணாத அளவுக்கு விரிசல் அடைந்தது. ஏட்டிக்குப் போட்டியாக இருநாட்டு தூதரக அதிகாரிகளும் மாறி மாறி வெளியேற்றப் பட்டார்கள்.

நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து கனடாவின் வின்னிபெக் நகரில், சுக்தோல்சிங் கில் என்ற மற்றொரு சீக்கியத் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட, பரபரப்பு இன்னும் பக்கென பற்றிக் கொண்டது. 

இந்த கொலைகள் தொடர்பான விசாரணை, கனடாவில் இப்போதும் நடந்து வருகிறது. இந்த பரபரப்பே இன்னும் அடங்கவில்லை. அதற்குள், அடுத்தகட்டமாக அமெரிக்காவில் ஓர் ஆலாபனை தொடங்கியிருக்கிறது.

பிரிட்டனில் இருந்து வெளிவரும் ஃபைனான்சியல் டைம்ஸ் என்ற நாளிதழ் வெளியிட்ட ஒரு செய்திதான் இந்த பிரச்சினைக்குத் தொடக்கப் புள்ளி.

‘அமெரிக்காவில் காலிஸ்தான் தீவிரவாதி ஒருவரை கொலை செய்யும் முயற்சி முறியடிக் கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியாவை அமெரிக்கா எச்சரித்திருக்கிறது(!)’ என்ற செய்தி அது. 

நிகில் குப்தா என்று ஒரு இந்தியர். இவர் உலக அளவிலான போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் கும்பல்களுடன் தொடர்புள்ளவர். இவர், பெயர் தெரியாத இந்திய அரசு அதிகாரி ஒருவரின் தூண்டுதலின்பேரில் அமெரிக்கா வாழ் சீக்கியர் ஒருவரின் கதையை முடிக்க முயன்றார் என்பதுதான் புதிய குற்றச்சாட்டு.

நிகில் குப்தா, இதற்காக அமெரிக்காவில் இருக்கும் கூலிப்படை கிரிமினல் ஒருவரிம் பேசி கொலைக்கான ஏற்பாடுகளைச் செய்கிறார். கொலைக்கான கூலி ஒரு லட்சம் டாலர். முன்பணம் 15 ஆயிரம் டாலர் என்று பேரம் பேசப்படுகிறது. ஜூன் 9ஆம் தேதி இந்த சம்பவம் நடந்திருக்கிறது. 

சரி. இந்த டீலிங்கில் நிகில் குப்தாவுக்கு என்ன லாபம்? அவர் குஜராத்தில், தன் மீதுள்ள குற்ற வழக்குகளைத் தள்ளுபடி செய்யச் சொல்லி இந்திய அரசு அதிகாரியிடம் சொல்கிறார். ‘பாஸ் கிட்ட பேசி விட்டேன். வழக்குகள் எல்லாம் தள்ளுபடி’ என்கிறார் அந்த அதிகாரி.

அதுமட்டுமல்ல. கனடாவில் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட போது எடுக்கப் பட்ட வீடியோவை, அந்த அரசு அதிகாரி நிகில் குப்தாவுக்கு அனுப்பி வைக்கிறார். ‘இதே மாதிரிதான் ஆளைப் போட வேண்டும். இந்த வேலை முடிந்ததும் கலிபோர்னியாவிலும், நியூயார்க்கிலும் இன்னும் நிறைய டார்கெட் இருக்கிறது’ என்று நிகிலுக்கு அந்த அதிகாரி மெசேஜ் அனுப்புகிறார். அந்த செய்தி, டெல்லியில் ஓர் அரசு நிறுவனத்தின் கணினியில் இருந்து அனுப்பப்பட்டு இருக்கிறது. ஆம். கணினியின் ஐபி முகவரி, டெல்லியில் உள்ள ஓர் அரசு நிறுவன கணினியின் ஐபி முகவரி.

நிகில் குப்தா ஏற்பாடு செய்த கூலிப்படைக்காரர் ரொம்ப நல்லவர் போலிருக்கிறது. அவர் அமெரிக்க காவல்துறையைச் சேர்ந்த அண்டர்கவர் ஏஜெண்ட்(!) என்று கூறப்படுகிறது. அந்த ஆள், அமெரிக்க உளவுப் பிரிவிடம் இந்த தகவலைத் தெரிவித்து, தொலைபேசி அழைப்புகள், வீடியோ, மெசேஜ் உள்பட அனைத்து ஆதாரங்களையும் ஒப்படைக்கிறார்.

இதற்கிடையே நிகில் குப்தாவிடம் சிலர் அழகாகப் பேசி, அவரை  செக் குடியரசு நாட்டுக்கு வர வைக்கிறார்கள். அங்கே அந்த நாட்டு அதிகாரிகள் நிகில் குப்தாவை கைது செய்து அமெரிக்கா வசம் ஒப்படைக்கிறார்கள்.

அமெரிக்க நீதித்துறை, நிகில் குப்தா மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து,  அமெரிக்காவின் நியூயார்க் நகர மன்ஹாட்டன்  நீதிமன்றத்தில் நிகில் குப்தாவை, நேர் நிறுத்தியிருக்கிறது.  

‘அமெரிக்காவின், நியூயார்க் நகரில் வாழும் குர்பத்வந்த்சிங் பன்னூன் என்பவரைக் கொல்ல நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது. குர்பத்வந்த்சிங் பன்னூன் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். அவர் ஓர் அமெரிக்க குடிமகன்,  அவர் ஒரு வழக்கறிஞரும் கூட’ என்று அமெரிக்க அரசு குற்றம்சாட்டியுள்ளது.

‘நிகில் குப்தா சர்வதேச போதை, ஆயுதக்கடத்தல் கும்பல்களுடன் தொடர்புடையவர். இந்திய அரசு அதிகாரி ஒருவருக்கு அவர் நெருக்கமானவர்’ என அமெரிக்கா குற்றம் சுமத்த, இந்தியா இப்போது ஏக சங்கடத்தில் நெளிகிறது. 

அமெரிக்கா மாதிரியான நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அதிக பாதுகாப்பைத் தரும் நாடுகள். அமெரிக்க மண்ணில் அமெரிக்க குடிமகன் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தால் அதை தீவிரவாதம் அல்லது போர் தொடுப்பதற்கு சமமான குற்றமாக அமெரிக்கா கருதுவது வழக்கம். 

ஆக, நிகில் குப்தா பிரச்சினை இந்தியாவுக்கு நிஜமாகவே இப்போது பெரும்சிக்கல்.

‘இது மிக சீரியசான பிரச்சினை. இதுபோன்ற கொலை முயற்சிகள் இந்திய அரசின் கொள்கைகளுக்கு எதிரானது. மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரிக்க நவம்பர் 18ஆம் தேதி உயர்மட்ட விசாரணைக்குழு அமைத்திருக்கிறோம். விசாரணை முடிவில் உரிய நட வடிக்கை எடுப்போம்’ 

இப்படி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளரான ஆரிந்தம் பக்சி பக்குவமாக அமெரிக்காவுக்குப் பதில் அளித்திருக்கிறார். 

இதற்கிடையே, நிகில் குப்தா மீதான கொலை முயற்சி குற்றச்சாட்டுக்காக அவருக்கு பத்தாண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. 

சரி! கொலை முயற்சியில் இருந்து தப்பிய அந்த குர்பத்வந்த்சிங் பன்னூன் என்கிற புண்ணியவான் யார்? அவர் அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளில் இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவர். சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு (எஸ்.எஃப்.ஜே.) என்ற ‘லாப நோக்கமற்ற அமைப்பு’ ஒன்றை 2009ஆம் ஆண்டு, நியூயார்க் நகரில் பதிவு செய்து அவர் நடத்தி வருகிறார். 

அவரது எஸ்.எஃப்.ஜே., அமைப்பு சீக்கியர்களிடம் நன்கொடை வசூலித்து குவிக்க, இதற்கு வரிவிலக்கு அளிக்கலாமா என்றுகூட அமெரிக்க கருவூல வருவாய்த்துறை ஒருகட்டத்தில் யோசித்து இருக்கிறது. நல்லவேளை எஸ்.எஃப்.ஜே. உரிய விதத்தில் கணக்கு தாக்கல் செய்யாததால் அதற்கு வரிவிலக்கு அளிக்கப்படவில்லை.

அமெரிக்காவின் பார்வையில், அமெரிக்க மண்ணில் அமெரிக்க குடிமகனாக உள்ள பன்னூன் போன்ற ஒருவரை கொலை செய்ய முயற்சி நடந்தது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால், குர்பத் வந்த்சிங் பன்னூன் யார் என்பது பற்றி இந்தியத்தரப்பு சொல்லும் தகவல்கள் வேறு மாதிரியாக இருக்கின்றன. ஸ்ஸ்.. அப்பா… இப்பவே கண்ணைக் கட்டுதே ரகம் அவை.

‘பன்னூன் உலக அளவில் ஒரு மிகப்பெரிய வலைத்தொடர்பு வைத்து நிதி சேகரிக்கிறார். அவரது கைகள், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மலேசியா என நீண்டு கிடக்கின்றன. 

பன்னூன் சேகரிக்கும் நிதி, பஞ்சாப் மாநிலத்தில் பயங்கரவாதத்தை வளர்க்கவும், இளைஞர் களை மூளைச்சலவை செய்யவும் உதவுகிறது. 2020ஆம் ஆண்டு பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேச மாநிலங்களில் காலிஸ்தான் ஆதரவு பதாகைகள், நோட்டீஸ்கள் பரவலாக ஒட்டப்பட, கட்டப்பட பன்னூனே காரணம்.

பன்னூன், மலேசியாவில், பராஸ் ராஜ்புத் என்பவர் மூலமாக ஹர்விந்தர்சிங் என்ற தீவிரவாத நபரை வாட்ஸ்ஆப் அழைப்பில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். வெஸ்டர்ன் யூனியன் வழியாக ஹர்விந்தர்சிங்குக்குப் பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறது. அதன்மூலம் ஆகஸ்ட் 15ஆம்தேதி பஞ்சாபில் மிகப்பெரிய அளவில் காலிஸ்தான் பிரசாரத்தை முன்னெடுக்க இவர்கள் திட்டம் தீட்டியிருந்திருக்கிறார்கள். 

பஞ்சாப் காவல்துறை தலைமையகம் மீதும், சிம்லா நகரில், இமாச்சலபிரதேச முதல்வர் மீதும் ஆர்.பி.ஜி. (ராக்கெட் குண்டு) தாக்குதல் நடத்த திட்டமிட்டவர் பன்னூன். இந்திய தேசிய புலனாய்வு முகமை, இவர் மீது ஏற்கெனவே வழக்குத் தொடுத்திருக்கிறது.  

‘நவம்பர் 19ஆம்தேதி சீக்கியர்கள் யாரும் ஏர் இந்தியா விமானங்களில் போகக் கூடாது. அன்று உலகம் முழுவதும் ஏர் இந்தியா விமானநிறுவனம் தடைசெய்யப்பட இருக்கிறது. மீறிப்போனால் ஆபத்து’ என்று பன்னூன் பேசிய வீடியோ மெசேஜ் இருக்கிறது.

முக்கிய சீக்கிய தீவிரவாதி ஒருவருக்கு அடைக்கலம் தருவது பற்றி பன்னூன் பேசிய ஆடியோவும் இருக்கிறது. இந்தியாவில் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த, டுரோன் தயாரிப்பாளர்களிடம் பேச்சு நடத்தியவர் பன்னூன்.

பன்னூனின் எஸ்.எஃப்.ஜே அமைப்பு, சட்டத்துக்குப் புறம்பானது என 2019ஆம் ஆண்டு முத்திரை குத்தப்பட்ட அமைப்பு. அது இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு. பன்னூன், 2020ஆம் ஆண்டு அமைப்பு சாராத தனிநபர் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர்’

இப்படி அடுக்கிக்கொண்டே போகிறது இந்தியா.

பஞ்சாபில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகளின் போராட்டம் நடந்ததே நினை விருக்கிறதா? பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, விவசாயிகள் தொடர்பான 3 மசோதாக்களை விலக்கிக் கொண்டபிறகுதான் டிசம்பர் மாத இறுதியில் விவசாயிகள் போராட்டம் ஓய்ந்தது. 

‘பஞ்சாபில் இந்த விவசாயப் போராட்டத்தைத் தூண்டிவிட்டவரே பன்னூன்தான். அவரது நிதி உதவியுடன்தான் போராட்டம் நடந்தது’ என இந்திய அரசு சந்தேகிக்கிறது. விவசாயி களுக்கான ஹெல்ப்லைன் என்ற பெயரில், பஞ்சாப் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் முதல் 2 லட்சத்து 50 ஆயிரம் வரை கடனுதவி நடந்திருக்கிறது. இந்த நிதி, பன்னூன் சேகரித்த நிதி’ என்கிறது இந்திய அரசு.

இதுதவிர பாகிஸ்தான் நாட்டு உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்கும், தாவூத் இப்ராகிமுக்கும் பன்னூன் நெருக்கமானவர் என்ற கருத்தும் இருக்கிறது. 

ஆக மொத்தத்தில் குர்பத்வந்த்சிங் பன்னூன் மீது கூடைகூடையாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவரைக் கொல்லத்தான் முயற்சி நடந்து, ஆள் ஜஸ்ட்மிஸ் ஆகியிருக்கிறார்.

பன்னூன் மீது நடந்த கொலை முயற்சி தொடர்பாக இந்தியா உயர்மட்ட விசாரணைக்குழு அமைத்திருப்பதை அமெரிக்கா ஒருபக்கம் வரவேற்றுள்ளது.

‘இதை வரவேற்கிறோம். பிரச்சினை தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் இதுபற்றி ஆழமாக எதுவும் சொல்ல முடியாது’ என்றிருக்கிறார் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன்.

வழக்கமாக, அந்நிய மண்ணில் தீவிரவாதி ஒருவர் தீர்த்துக்கட்டப்பட்டால், அது தொடர்பான பஞ்சாயத்து பகிரங்கமாக வெளியில் வராது. பூட்டிய அறைக்குள் வைத்து இரு நாட்டு அதிகாரிகளும் அதைப் பேசித் தீர்த்துக் கொள்வார்கள்.

ஆனால் நிகில் குப்தா விவகாரம் ஏனோ அம்பலத்துக்கு வந்திருக்கிறது. பொதுவெளியில் பொலபொலவென அமெரிக்கா குற்றச்சாட்டை கொட்டியிருக்கிறது. 

இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத அமைப்புகளுக்கு, அமெரிக்கா மாதிரியான மேற்கு நாடுகள் அதிக இடம் கொடுப்பதாக இந்தியாவிடம் ஏற்கெனவே ஒரு மனத்தாங்கல் இருக் கிறது. 

‘மேற்கு நாடுகளில் இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாத அமைப்புகளைப்பற்றி அடிக்கடி புகார் கூறி வருகிறோம். ஆனால், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகள் அதை காதில் வாங்குவதே இல்லை’ என்ற குமைச்சலில் இருக்கிறது இந்தியா.

குர்பத்வந்த்சிங் பன்னூன் ஒருவேளை கொலை செய்யப்பட்டிருந்தால், அது ஒன்றும் உலக அரசியல் வரலாற்றில் நடந்த முதல்கொலையாக இருக்காது. 

காரணம், கடல் கடந்து, கண்டங்களைக் கடந்து பிறநாட்டு மண்ணில், இதுவரை ஏகப்பட்ட அரசியல் கொலைகள் நடந்திருக்கின்றன. உரிமை கோரப்படாத இந்த கொலைகளின் பின்னணியில் இருப்பவை பெரும்பாலும் மேற்கத்திய நாடுகள்தான் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அமெரிக்கா மீதே இதுதொடர்பாக ஆயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் உண்டு. 

இந்தநிலையில், இந்தியா மீது அமெரிக்கா ஒரு கொலைமுயற்சி குற்றச்சாட்டை முன்வைத்து குற்றம் குறை சொல்வதை நகைமுரண் என்றுதான் சொல்ல வேண்டும். வேறு என்ன சொல்வதாம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...