No menu items!

லிங்குசாமி இயக்குநர் ஆன கதை!

லிங்குசாமி இயக்குநர் ஆன கதை!

“பொதுவாக எல்லோருமே எனக்கு விவரம் தெரிஞ்ச நாளிலிருந்தே சினிமா மேலதான் ஆர்வம் இருந்துச்சுன்னு சொல்வாங்க. ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் எனக்கு விவரம் தெரியறதுக்கு முன்னாடியே இருந்து சினிமா மேல ஒரு ஈர்ப்பு இருந்துச்சுன்னுதான் சொல்வேன். பள்ளிக்கூடத்துல என்னோட ஐந்தாவது படிச்ச நண்பர்களை இப்போது பார்க்கும்போது கூட, ‘டேய் நீ அப்பவே பாட்டு பாடுவ, ஆட்டம் போடுவ, நீயாவே நிறைய கதை சொல்லுவ’ன்னு கமெண்ட் அடிப்பாங்க. எனக்கே ஞாபகம் இல்லாத விஷயத்தை மத்தவங்க சொல்லும்போதுதான், சினிமாவுக்கான விதை என்னுடைய அந்த பருவத்திலேயே விழுந்திருக்குன்னு தோணுது.” என்று சொல்கிறார் இயக்குநர் லிங்குசாமி.

இவர் இயக்குநரானது எப்படி, இவரது முதல் முயற்சி எப்படி திரைப்படமானது என்பதையும் மனம் விட்டு பகிர்ந்து கொள்கிறார்.

”எங்க ஊரான கும்பகோணத்துல அப்போது ரிக்கார்ட் டான்ஸ் நிகழ்ச்சி இருந்தா தூங்கிட்டு இருக்கிற என்னை எழுப்பி டான்ஸ் ஆடச் சொல்வாங்க. ரிக்கார்ட் டான்ஸ் ஆடுற பொண்ணுங்க இடிச்சு மேடையில இருந்து கீழே விழுந்த விழுப்புண்கள் இன்னமும் கூட இருக்கு. நிகழ்ச்சி ஒரு பக்கம்னா, என்னோட டான்ஸ் மூலமாக ஒரு கூட்டத்தைக் கூட்டிடுவேன். எல்லோருடைய கவனத்தையும் என் பக்கமா திருப்பணுங்கிற ஆர்வம் அப்பவே எனக்குள்ளே இருந்துச்சு. ஒன்பதாவது பத்தாவது படிக்கும்போது இப்படி டான்ஸ் ஆடுறது கேவலமான்னு தோணுச்சு. அதனால அப்படியே என் கவனம் கவிதை பக்கம் திரும்புச்சு. பேச்சுப்போட்டியில் கலந்துகிட்டு பரிசுகள் வாங்கினேன். கவிதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். நிறைய கவிதைகள் பிரசுமாச்சு. பன்னிரெண்டாவது படிக்கும்போதே சினிமாவுல இயக்குநராகணும் தோண ஆரம்பிச்சிடுச்சு.

பாக்யராஜ் சார்தான் எனக்கு ஆதர்ச நாயகன். எங்க ஊர்ல அவரோட மன்றங்கள்ல நானும் இருந்தேன். அவரை மனசுல நினைச்சிட்டு ஒண்ணுமே விளங்காத அந்த வயசுல சென்னைக்கு கிளம்பினேன். அப்ப மணிவண்ணன் சார் ‘காதலிக்க நேரமில்லை’னு ஒரு புராஜெக்ட்டுக்கு ஆறு பாட்டு ரெடி பண்ணிட்டார். அதுக்கேத்த கதையிருந்தால சொல்லுங்கன்னு கேட்டிருந்தார். இதை ஒரு பத்திரிகையில படிச்சேன். எங்க ஊர்ல நடந்த சம்பவத்தை வைச்சு, ஒரு கதை தயார் பண்ணிட்டு வந்தேன். ஆனால் அவரைச் சந்திக்கவே முடியாம போச்சு. உடனே பாக்ய ராஜ் சார் ஆபீஸ் வாசலிலேயே நிப்பேன். அவர் ஆபிஸில் திருவிழா மாதிரி கூட்டம் இருக்கும். அதனால் அதிலிருந்து தப்பிக்க ஆபீஸ் பின்பக்கமாக தப்பிச்சு போவார். எங்க ஊர்காரர் வெங்கடேஷ்னு ஒருத்தர் பாக்யராஜ் சார்கிட்ட அஸிஸ்டெண்ட்டாக இருந்தார்.

எங்கம்மா அருமையாக கதை சொல்வாங்க. நிறைய படம் பார்ப்பாங்க. அப்பாவுக்கு நடிகனாகணும்னு ஆசை. மாடர்ன் தியேட்டர்ஸ்ல நடிகனாக முயற்சி பண்ணினார். அதனாலேயே இயற்கையாகவே எனக்கு கதையை கொண்டு வர்ற பக்குவம் இருந்திருக்கும்னு நினைக்கிறேன்.

பாக்யராஜ் சாரை பார்த்தாலே எனக்கு கால்கள் நடுங்கும். அவர் நின்னா யாருக்கு பின்னாடியாவது ஒளிஞ்சிக்குவேன். அவர் மேல அவ்வளவு பைத்தியம். அதனாலயே அவரைப் பார்க்க முடியாமலே போயிடுச்சு. இதற்கிடையில ‘தம்பி உனக்கு படிப்புதான் முக்கியம். முதல்ல காலேஜை முடி. அப்புறம் வா’ன்னு சிலர் சொன்னாங்க. இயக்குநராகணும்னா காலேஜ் படிக்கணும் போலன்னு நினைச்சிட்டு அப்பாவி ஊருக்கு திரும்பிட்டேன். இயக்குநர்னா யாருன்னு தெரியாது ஆனால் நாம இயக்குநராகணுங்கிற முடிவுக்கு வந்து, இங்கே வீட்டிலேயும் எல்லோரையும் அதுக்கு ட்யூன் பண்ணிட்டேன்.

கும்பகோணம் ஆர்ட்ஸ் காலேஜூக்கு மூணு வருஷம் போனேன். ஆனால் படிக்கவே இல்ல. நல்லப் படம் வந்தா ஸ்ட்ரைக் பண்றதுன்னு அது ஓடிப்போச்சு. அப்பவே என் கவிதைகள் பத்திரிகைகள்ல பிரசுரமாக ஆரம்பிச்சது. வீட்டுல காசு வாங்கவே கூடாது. கதையோ, கவிதையோ எழுதி அதை வைச்சு சம்பாதிச்சு இருந்துக்கலாம்னு சென்னைக்கு வந்தேன். என்னோட படிச்ச மோகன் இங்கே சென்னையில இருந்தான். ரோகிணி தியேட்டர் பக்கம் சின்னதாக ஒரு குப்பைக்குளம் மாதிரி இருக்கும் அவனோட வீடு. ராபர்ட்னு ஒரு ஃப்ரெண்ட்டும் நானும் வந்தோம். மோகன் கஷ்டப்பட்டாலும் கூட எங்களுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்து, எங்களுக்காக வாய்ப்புகளும் தேடுவான்.

திரும்பவும் பாக்யராஜ் சார் ஆபீஸ¨க்கு போக ஆரம்பிச்சேன். அவரோட அஸிஸ்டெண்ட்கள் கூட பழக ஆரம்பிச்சேன். அந்த நேரத்துலதான் சாய் நகர்ல பிருந்தா சாரதி, மணி பாரதி, ராஜ் கமல், ஜீவன் பாலுன்னு நண்பர்கள் சிலபேர் சேர்ந்து இருந்தாங்க. அவங்க ரூமுக்கு ஷிப்ட் ஆனேன். இவங்க சினிமாவோட சம்பந்தப்பட்டதால, சினிமாவே எனக்கு நெருக்கமான ஃபீலிங் வந்துச்சு. இவங்க மூலமாக கிடைச்ச பத்திரிகை அறிமுகத்தால பேட்டிகள், கவிதைகள் எழுதினேன். அப்படிதான் செந்தில் சாரை பேட்டி எடுத்தப்ப நூத்தியம்பது ரூபாய் கொடுத்து வைச்சுக்கோப்பான்னு சொன்னார். அதுக்குபிறகுதான் ‘என்றும் அன்புடன்’ இயக்குநர் பாக்ய நாதன் சாரை சந்தித்தேன். என்னோட ஆர்வத்தைப் பார்த்துட்டு, அடுத்தப்படம் பண்ண போறேன். டிஸ்கஷனுக்கு வாங்கன்னு சொன்னார். ’வைகை கரையோரம்’னு படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ¨க்கு பண்றதா இருந்துச்சு. அந்த டிஸ்கஷன் நேரத்துல சீமான் சார் கூட அங்கே வந்துட்டு போவார். பாக்ய நாதன் சார் அப்போது ரொம்ப கஷ்டத்துல இருந்தார். சில சமயங்கள்ல பஸ்ஸ¨க்கு காசுக்காக கூட பழைய பேப்பர், பாட்டில்களை வித்து சமாளிச்சிருக்கோம். அப்போது மிகப்பெரிய வறுமை இருந்துச்சு. ஆனால் இந்த அனுபவமெல்லாம் எதிர்காலத்துல நாம கொடுக்கக்கூடிய பேட்டின்னு நினைப்பேன். பேட்டிக்கான மெட்டீரியல் ரெடின்னுதான் நினைச்சிருக்கேன்.

ஒவ்வோரு முறையும் ஊருக்கு போயிட்டு வரும்போது அம்மா, அண்ணன்கள்னு எல்லோரும் தனித்தனியாக பணம் கொடுப்பாங்க. இந்தப் பணம்தான் எங்களோட பெட்டிக்கடை, இட்லிக் கடை கடன்களை அடைக்க உதவும். தம்பி சந்திரபோஸ் அப்போ குமரன் சில்க்ஸ்ல வேலைப்பார்த்தான். அவனுக்கு எழுநூத்தியம்பது ரூபாய் சம்பளம் வர்ற அன்னிக்குதான் எங்களுக்கு தீபாவளி.

இந்த ரூம்ல இருந்து நம்பர் 18. சாரதாம்பாள் தெருவுக்கு பிருந்தா சாரதி, மணி பாரதியுடன் சேர்ந்து மாறினேன். அங்கே ஏழு இயக்குநர்கள் இருந்த இடம். என்னோட பக்கத்து ரூம்ல ’வெயில்’ வசந்த பாலன் இருந்தார். அங்கே ‘காதல்’ பாலாஜி சக்திவேல் வருவார். அந்த நேரத்துலதான் ஷங்கர் சார்கிட்ட இருந்து ஏ.வெங்கடேஷ் சார் தனியா வந்து ‘மகாபிரபு’ படத்தை இயக்கின நேரம். அந்த கதையைக் கேட்டு என் மனசுல பட்டதையெல்லாம் பட்பட்னு சொன்னேன். பரவாயில்லயே பையன் துடிப்பாந்தான் இருக்கான்னு வெங்கடேஷ் சார் என்னை டிஸ்கஷனுக்கு வரச்சொல்லிட்டார். ஏ. ஆர். ரஹ்மான்தான் அந்தப்படத்துக்கு இசையமைப்பதாக இருந்துச்சு. அதனால அவர்கிட்ட கதை சொல்ல எல்லோரும்கிளம்பினாங்க. ஒட்டுமொத்த சினிமாவே கையில கிடைச்ச சந்தோஷம். அந்த ரூம் ஜன்னல் திரையை விலக்கிட்டு ஒரு தம் பத்த வைச்சேன். ரூம் முழுக்க சிகரெட் புகை. திடீர்னு கதவைத் தட்டுற சத்தம். ஏ.ஆர். ரஹ்மான் சந்திப்பு கேன்ஸல் ஆனதால் மொத்த டீமும் திரும்பி வந்துட்டாங்க. எல்லோருக்கும் ஷாக். மறுநாளே வெங்கடேஷ் சார், ‘என்னயா இவன் வந்த உடனேயே இப்படி இருக்கானே. தேறுவானா?’ கேட்டிருக்கார். கடைசி அஸிஸ்டெண்ட்டாக சேர்ந்தேன். படம் முடிய மூணு வருஷம்கிட்ட ஆனதால, பாதி அஸிஸ்டெண்ட்கள் போயிட்டாங்க. அதனால படம் வெளியானப்ப டைட்டில் கார்டுல என் பெயர் முதல் அஸிஸ்டெண்ட்டாக வந்துச்சு. இந்தப்பட நேரத்துலதான் விஷால், அவங்க அண்ணன் விக்கி பழக்கம். விஷால் அப்ப ஸ்கூலுக்கு போயிட்டு இருந்தாப்ல.

’மகா பிரபு’ படம் முடிஞ்சதும் அடுத்து ‘செல்வா’ங்கிற படத்திலும் வொர்க் பண்ணினேன். அப்புறம்தான் நம்ம கதையை ஏன் படமாக எடுக்கக்கூடாதுன்னு தோணுச்சு. ’ஒருநாள் உட்லண்ட்ஸ் தியேட்டர்ல ‘ஹம் ஆப் கே ஹெய்ன் கோன்’ படத்தை பாலாஜி சக்திவேல் சாரும், நானும் போய் பார்த்தோம். மொத்த படத்தைப் பார்த்ததும், அடுத்தடுத்த நாட்கள் தொடர்ந்து பார்த்தேன். ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த விஷயங்களை வைச்சு இப்படி அழகாக படமெடுக்க முடியுமான்னு யோசிக்க வைச்சது. நம்ம குடும்பத்திலேயே இப்படி நிறைய விஷயங்கள் இருக்கே. அதை ஏன் கதையாக பண்ணக்கூடாதுன்னு கும்பகோணத்துக்கு கிளம்பிட்டேன். எங்க குடும்பம் பெரிய கூட்டுக்குடும்பம். அதனால நான் ஊருக்குப் போகும்போதெல்லாம் வீட்டுல ஆளாளுக்கு ஒவ்வொரு கதையைச் சொல்வாங்க. இது எல்லாமே ஒரு கதையாக எனக்கு தோணுச்சு. அதுதான் ‘ஆனந்தம்’.

கதைக்கான விதையைப் போட்டு ரெண்டு வருஷமாக அதை பாலீஷ் பண்ணிட்டே இருந்தேன். கும்பகோணத்துல நண்பர் ரவி லாட்ஜ் வைச்சிருந்தார். அவர்கிட்ட ஒரு ரூம் கொடுக்க முடியுமா. கதையை யோசிக்கணும்னு கேட்டேன். உடனே ஒப்புக்கொண்டார். மகாமக குளத்தைச் சுத்தி வருவேன். சீன்களை எழுதுவேன். அப்படி ஒரே நாள்ல பதினெட்டு சீன்களை எழுதினேன். அவ்வளவு வெறி. ஆனந்தம் கதையை முடிச்சிட்டு சென்னைக்கு கிளம்பினேன்.

இங்கே சென்னையில் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் தவிர மத்த எல்லா கம்பெனிக்கு ஏறி இறங்கிட்டேன். நான் நினைக்கிற ஸ்டார்ஸ் கொடுக்காம படம் பண்ணச்சொல்வாங்களோ என்ற எண்ணத்தாலதான் நான் சூப்பர் குட் பக்கம் போகல. ஆனால் என்னோட மேல் ரூம்ல ஹரின்னு ஒருத்தர் இருந்தார். ‘அண்ணே இந்தக் கதை சூப்பர் குட்ல வொர்க் அவுட்டாகும்ணா’னு அடிக்கடி சொல்வார். அப்பதான் ராஜகுமாரன் மூலமாக விக்ரமன் சாருக்கு ஒரு கதை தேவை. நீங்க அண்ணன் தம்பி கதை ஒண்ணு வைச்சிருக்கீங்களாமே. அதைக் கொடுக்க முடியுமான்னு கேட்டாங்க. இனி இயக்குநர் இல்லைன்னா எதுவுமில்லன்னு இருந்தேன். அப்பதான் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ படத்தை விக்ரமன் சார் ஆரம்பிச்சார். டிஸ்கஷனுக்கு ராஜகுமாரன் மூலமாக போனேன். சரி விக்ரம்ன் அஸிஸ்டெண்ட்டாக இருந்தா நாலுபேர் கதையாவது கேட்பாங்களே என்று திரும்பவும் கடைசி அஸிஸ்டெண்ட்டாக வேலைக்குத் திரும்பினேன். ப்ராபர்டிஸ் மட்டுமே நான் பார்த்துக்கிட்டாலும் மாங்கு மாங்குன்னு வேலைப்பார்ப்பேன்.

ஷ¨ட்டிங்ல நான் ஒரு விநாடி கூட சிரிச்சது இல்ல. சீரியஸாகவே இருப்பேன். இதை ரோஜா மேடம் கவனீச்சிட்டாங்க. ‘ஏம்பா இப்படி சீரியஸாகவே இருக்கீங்க. சிரிக்கவே மாட்டீங்களா?’னு கேட்டாங்க. ‘நீங்கல்லாம் லைஃப்ல முன்னுக்கு வந்துட்டீங்க. நான் இன்னும் வரல. இயக்குநர் ஆகல’னு சொன்னேன். ’என்னோட ப்ரதர் கிட்ட சொல்லி தெலுங்குல கதைச் சொல்ல ஏற்பாடு பண்ணட்டுமா’ன்னு கூட கேட்டிருக்காங்க. அந்தப்படத்தை முடிச்சதும்தான் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆபீஸ் வாசப்படியை மிதிச்சேன். நான் போன நேரத்துல சசி சார், பால சேகரன், எழில் என இயக்குநர்கள் இருந்தாங்க. இன்னும் சில இயக்குநர்கள் வெயிட்டிங் வேற. சௌத்ரி சார் ‘நான் ப்ளைட்டுல போகும்போதே படிச்சிடுறேன்யா’னு சொன்னார். கதையைக் கேட்டதும் சௌத்ரி சார் அழுதுட்டார். அடுத்த முப்பது நாள்ல மூணு தடவையாவது ஆனந்தம் கதையைக் கேட்டிருப்பார்.

நான் நினைச்ச ஆர்டிஸ்ட் மம்முட்டி, அஜித், சூர்யா, சௌந்தர்யா. ஆனால் செட்டாகல. அதே மாதிரி இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜ் கம்போஸ் பண்ணின ஒரே பாடலை மட்டும் கொடுத்து நல்லா பண்ணுவார்னு சொன்னேன். அப்ப ’மஜ்னு’ ரிலீஸாகல. ’மின்னலே’ வரல. இப்படிதான் ஆனந்தம் ஆரம்பிச்சது.

முதல் ஷெட்யூல் கும்பகோணத்துலதான். எல்லா ஆர்டிஸ்ட்டையும் நடிக்கவைச்சுதான் படமெடுக்கணும்னு கத்துக் கொடுத்தது, ரிகர்ஸல் பார்த்துட்டு ஷ¨ட்டிங் போகலாம்னு எனக்கு கத்துக் கொடுத்தது மம்முட்டி சார்தான். ’என்னயா கும்பகோணத்தை விட்டு வரவே மாட்டீயா’ன்னு சௌத்ரி சார் கேட்பார். ‘இவன் என்னை கோயில் கோயிலா கூட்டிட்டு போறான்’னு மம்முட்டி சார் திட்டுவார். முதல் ஷெட்யூல்ல எடுத்ததை எடிட் பண்ணிக்காட்டினேன். சௌத்ரி சாருக்கு சந்தோஷம். ஆனால் ஷ¨ட்டிங் நாள் நான் சொன்ன அறுபது நாளை தாண்டிடுச்சு. தங்க ஊசிங்கிறதுக்காக கண்ணுல குத்திக்க முடியாதுயான்னு சௌத்ரி சார் கோபப்பட்டார். அஞ்சு நாள் என்னைப் பார்க்கவே அனுமதிக்கல. அப்புறம் பார்த்து, ‘ சார் இது என்னோட முதல் படம். உடம்பு சரியில்லன்னாகூட டிரிப்ஸ் ஏத்திக்கிட்டே ஸ்பாட்டுக்கு வந்துடுவேன். பெரிய காம்பினேஷன் இருக்கு. அதான் லேட்’னு சொன்னேன். ஒ.கே பண்ணுயான்னு சொல்லிட்டார். படம் பார்த்தார். சௌத்ரிக்கு ரொம்ப திருப்தி. ஆனால் நான் காமெடி எடுக்காமலே ஏமாத்திட்டீயான்னு சொல்வார்.

படம் ப்ரிவியூ பார்த்துட்டு என் பெரிய அண்ணன் என்னைக் கட்டிப்பிடிச்சு தேம்பி தேம்பி அழுதார். படம் ரிலீஸான நேரத்துல, டிவிகளுக்கு பேட்டி கொடுக்கக்கூடாது ஒரு விஷயம் வந்துச்சு. அப்போ இயக்குநர்கள் மீட்டிங்குல நான் பேச எழுந்திரிச்சேன். ’யாருய்யா நீ..’னு பாரதி ராஜா சார் கேட்டார். அப்ப இவர்தான் ஆனந்தம் இயக்குநர்னு சொன்னாங்க. அத்தனை இயக்குநர்கள் முன்னாடியும் ‘யோவ் அது நீதானா.. உன் படம் கண்ணீரை வரவைச்சதை நிறுத்தவே முடியலய்யா’ன்னு பாராட்டியதை இன்றும் என்னால மறக்கவே முடியாது.

ஆனந்தம் படத்தின் கதைக்கு முதல் பகுதி ஒண்ணு இருக்கு. நாங்க குட்டிப் பசங்களாக இருந்தபோது கிடைத்த அந்த வாழ்க்கையை இன்னோரு படமாக எடுப்பேன்.’’ என புன்னகைக்கிறார் லிங்குசாமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...