திருமணமாகி கணவன், மனைவி, குழந்தைகள், மாமனார், மாமியார், நாத்தனார், மச்சினன் என்று கூட்டுக் குடும்பமாக வாழ்வது முன்பு நம் நாட்டின் முக்கிய அடையாளமாக இருந்த்து. ஆனால் இப்போது கூட்டுக் குடும்ப முறை காணாமல் போய் கணவன், மனைவி, குழந்தைகள் என்று சிறு சிறு குடும்பங்களாக வாழும் நிலை வந்துவிட்டது. ஆனால் ஜப்பானில் உள்ள இளம் தலைமுறையினர், இப்போது குடும்பத்துக்கு புதிய இலக்கணத்தை வகுத்துள்ளனர். அதன்படி குடும்பம் என்பது கணவனும் மனைவியும் சேர்ந்ததுகூட கிடையாது. அவர்கள் இருவரும் தனித்தழியாக வாழலாம். இந்த புதிய முறைக்கு அவர்கள் வைத்துள்ள பெயர், ‘சபரேஷன் மேரேஜ்’. ஒருசிலர் இதை ‘வீக் எண்ட் மேரேஜ்’ என்றும் அழைக்கிறார்கள்.
ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது. குடும்பம், கட்டுப்பாடுகள், பொருளாதார சிக்கல் என்ற வலையில் சிக்கிக்கொள்ளாமல் வாழ ஜப்பானிய இளம் தலைமுறையினர் விரும்புவதே இதற்கு காரணம். இளம் தலைமுறையினரின் இந்த குணத்தால், ஜப்பானில் திருமணங்கள் குறைந்து, குழந்தைகள் பிறப்பதும் வேகமாக சரிந்து மக்கள் தொகை குறைந்து வருகிறது. இதை சரிசெய்யவும், இளம் தலைமுறையினரை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியும் ஜப்பானிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சூழலில்தான் சபரேஷன் மேரேஜ் என்ற விஷயம் அங்கு தலையெடுத்துள்ளது.
இந்த முறைப்படி திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகள் ஒரே வீட்டில் வாழவவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருவரும் தனித்தனியாக வேறு வேறு வீட்டில் வாழலாம், பொருளாதார ரீதியாக ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டியதில்லை. மாறாக, சுதந்திரமாக முடிவுகளை எடுக்கலாம். வாரத்தில் ஏதாவது 2 நாட்கள் மட்டும் சேர்ந்திருக்கலாம். குடும்ப நிகழ்ச்சிகளில் மட்டும் ஒன்றாக கலந்துகொள்ளலாம். அதுவும் பரஸ்பரம் இருவரும் விருப்ப்ப்பட்டால் மட்டும் கலந்துகொண்டால் போதும். தேவைப்பட்டால் பொருளாதார வசதிகளை பரிமாறிக் கொள்ளலாம். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சட்டப்படி திருமணம் செய்துகொண்டு, கணவன் – மனைவி இருவரும் தனித்தனியாக எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுயமாக வாழ்க்கையை நடத்தலாம்.
தங்கள் தனிப்பட்ட சுதந்திரம் திருமணத்தால் பாதிக்க்க் கூடாது என்று கருதும் இளம் தலைமுறையினருக்கு இந்த வகைத் திருமணங்கள் மிகப்பெரிய வரமாக இருக்கின்றன. அதோடு இந்த வகைத் திருமணத்தால், கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்படுவதும் குறைவு என்று கூறப்படுகிறது. இதனால் இந்த வகை திருமணங்களுக்கு ஜப்பானில் வரவேற்பு அதிகரித்து வருகிறதாம்.