No menu items!

செந்தில் பாலாஜி விவகாரம்: அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

செந்தில் பாலாஜி விவகாரம்: அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைதான அமைச்சர் செந்தில்பாலாஜியை 8 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றம் கடந்த 16-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அமலாக்கத்துறை விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. செந்தில் பாலாஜியை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதால் அவரிடம் விசாரணை நடத்துவதில் அமலாக்கத்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்வதற்காக, ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்று அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை  முறையீடு செய்துள்ளது. இதனை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து நாளை மறுதினம் (ஜூன் 21-ம் தேதி) விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதனால், நாளை மறுநாள் இந்த மனு நீதிபதி சூரிய காந்த் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

கலைஞர் கோட்டம் திறப்பு: திருவாரூருக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நாளை செல்கிறார்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. அதில் கருணாநிதியின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோட்டத்தில் கருணாநிதியின் பொதுவாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம், 11 மணிக்கு சாலமன் பாப்பையா பட்டிமன்றம் நடை பெறுகிறது. அதன் பிறகு கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறந்து வைத்து தலைமை உரை நிகழ்த்துகிறார். கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைத்து பேசுகிறார். முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

அடுத்த 5 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை வானிலை மையம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

19.06.2023 முதல் 23.06.2023 வரை இலட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40  முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையை திறம்பட நடத்தி தப்பியதற்காக நன்றி சொல்ல கோவிலுக்கு சென்றதால் சிக்கிய தம்பதி

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கடந்த 10-ந் தேதி ஒரு நிறுவனத்தில் ரூ.8 கோடியே 49 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து லூதியானா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 12 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இக்கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது மந்தீப் கவுர் என தெரியவந்தது. இவர் மீது போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது.

மந்தீப் கவுர் ஒவ்வொரு முறை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும், அதற்கு நன்றி சொல்ல சீக்கிய குருத்துவாராவுக்கு செல்வது வழக்கம் என்பதை அறிந்துகொண்ட போலீசார், அவர் எந்த கோவிலுக்கு செல்கிறார் என்பதை கண்காணித்தனர். இதில் அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிரபல சீக்கிய குருத்துவாரா கோவிலுக்கு செல்வது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்த போலீசார் கோவில் வளாகத்தில் ஆங்காங்கே குளிர்பான பந்தல்கள் அமைத்தனர். அதில் ரூ.10 மதிப்புள்ள குளிர்பானங்களை பக்தர்களுக்கு வழங்கினர். இந்நிலையில் ஒரு குளிர்பான பந்தலுக்கு குடிக்க வந்த மந்தீப் கவுரையும் அவரது கணவரையும் கைது செய்தனர்.

கேரளாவில் 3,678 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஒருவாரம் தாமதமாக கடந்த 8-ந்தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியதுமே மாநிலம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநில சுகாதாரதுறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இதில் மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 377 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

காய்ச்சல் பாதிக்கப்பட்டோரில் பலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 3678 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க மாநில சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...