நவம்பர் 15-ம் தேதி உலகின் மக்கள் தொகை 800 கோடியை எட்டப் போகிறது. ஐநாவின் கிளை அமைப்பான World Population Prospects 2022 -ன் ஆய்வறிக்கையில் இது சொல்லப்பட்டுள்ளது. இதே வேகத்தில் போனால் 2030-ம் ஆண்டில் 850 கோடியாகவும், 2050-ல் 970 கோடியாகவும் உலகின் மக்கள் தொகை அதிகரிக்கும் என்று அறிவித்துள்ளது இந்த அமைப்பு.
சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மக்கள் தொகைப் பெருக்கம் குறைந்துகொண்டு இருக்கும் நேரத்தில் இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து, எதியோப்பியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் டான்சானியா ஆகிய நாடுகளில் மக்கள் தொகை மேலும் பெருகும் என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. கூடுதல் தகவலாக அடுத்த ஆண்டில் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா முறியடித்து, உலகைலேயே அதிக மக்கள் வாழும் நாடாக உருவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த உலகத்தின் மக்கள் தொகை இப்படி வேகமாக அதிகரித்து வருகிறதே என்று கவலைப் படுகிறீர்களா?… வேண்டாம். ஏனென்றால் கடந்த 1950-ம் ஆண்டில் இருந்து உலக மக்கள்தொகை 1 சதவீதத்துக்கும் கீழாகத்தான் அதிகரித்து வருகிறதாம். மக்களிடையே மலட்டுத்தன்மை அதிகரித்து வருவதை இதற்கு காரணமாகச் சொல்கிறார்கள்.
சுற்றுச்சூழலில் ஸ்கோர் செய்யும் ஊட்டி, ராமநாதபுரம்
இந்தியாவிலேயே காசு மாசு அதிகமுள்ள நகரம் எது என்று கேட்டால், உடனே டெல்லி என்றுதான் பலரும் பதில் சொல்வார்கள். காற்று மாசு காரணமாக டெல்லி நகர மக்கள் படும் வேதனைகளைப் பற்றி தினமும் பல செய்திகள் வருவதே இதற்கு காரணம். ஆனால் காற்று மாசால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரம் டெல்லி அல்ல என்கிறது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.
இந்த வாரியம் சமீபத்தில் எடுத்த கணக்குப்படி இந்தியாவிலேயே காற்று மாசால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக பிஹாரின் கடிஹர் நகரம்தான் இருக்கிறது. இந்த நகரில் காற்று மாசு குறியீட்டின் அளவு 360-ஆக உள்ளது காற்று மாசு குறியீட்டின் அளவு 354-ஆக உள்ள டெல்லி நகரம் இந்த பட்டியலில் இரண்டாவதாக உள்ளது. நோய்டா, குவாலியர், குர்கிராம் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நகரங்கள் இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடிஉத்துள்ளன.
அதே நேரத்தில் இந்தியாவில் காசு மாசு குறைவாக உள்ள நகரங்களின் பட்டியலையும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி ஐஸ்வால் நகரம் இந்தியாவிலேயே காற்று மாசின் அளவு குறைவாக உள்ள நகரமாக இருக்கிறது. இங்கு காற்று மாசு குறியீட்டின் அளவு 21-ஆக உள்ளது. காற்று மாசின் அளவு குறைவாக உள்ள டாப் டென் நகரங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஊட்டி, ராமநாதபுரம் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
புலியின் பெயர் ‘சிங்கம்’
புலியை சிங்கம் என்று சொன்னால் யாராவது ஒப்புக்கொள்வார்களா?… சட்டீஸ்கர் மக்கள் ஒப்புக்கொள்கிறார்கள். சட்டீஸ்கரின் பிலாய் நகரில் உள்ள மைத்ரி பாக் மிருகக்காட்சி சாலைக்கு புதிதாக பிறந்துள்ள வெள்ளைப் புலி குட்டிக்கு ‘சிங்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அஜய் தேவ்கன் நடித்து இந்தியில் வெளியான ‘சிங்கம்’ படம் சூப்பர் ஹிட் ஆனதால் புலிக்குட்டிக்கு இந்தப் பெயரை வைத்துள்ளனர். இந்த மிருக்ககாட்சி சாலைக்கு வரும் பார்வையாளர்களை அதிகம் கவரும் மிருகமாக இந்தப் புலி (சாரி… சிங்கம்) இருக்கிறதாம்.