No menu items!

சென்னை புத்தகக் காட்சி: Top 5 நூல்கள்

சென்னை புத்தகக் காட்சி: Top 5 நூல்கள்

சென்னை புத்தகக் கண்காட்சி கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த புத்தகக் காட்சியில் அதிகம் விற்பனையான டாப் 5 நூல்கள் எவை?  அனைத்து பதிப்பக நூல்களையும் விற்பனை செய்த டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், பரிசல் விற்பனை நிலையம் செந்தில்நாதன் இருவரிடமும் கேட்டோம். இருவரும் தந்த பட்டியல் இங்கே…

வீரயுக நாயகன் வேள்பாரி – சு. வெங்கடேசன்

எழுத்தாளரும் மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான சு. வெங்கடேசன் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் தொடராக எழுதிய நாவல். சாகித்ய அகாடமி விருது பெற்றது.

பறம்பு மலையை ஆட்சி செய்த குறுநில மன்னன் பாரியின் வரலாற்றை புனைந்து எழுதப்பட்டதுதான் இந்நாவல். வேள்பாரியின் புகழ் மீது பொறாமை கொண்டும் பறம்பு மலையின் அரிய பெரிய பொருள்களின் மீது ஆசை கொண்டும் – சேரனும் சோழனும் வெவ்வேறு காலகட்டத்தில் தனித்தனியே போர் தொடுத்து பாரியிடம் தோற்றுப் போகின்றனர். பிறகு சேர, சோழ, பாண்டியர் என மூன்று பெருவேந்தர்களும் ஒன்றாகச் சேர்ந்து பாரியை அழித்தொழிக்க பறம்பின் மீது முற்றுகையிடுகிறார்கள். ஆனால், மூவேந்தர்களின் பெரும் படைகளை, அளப்பரிய தன் வீரத்தாலும் போர் வியூகங்களாலும் முழு முற்றாக அழித்தொழிக்கிறான் வேள்பாரி.  

‘பொன்னியின் செல்வன்’ வெற்றியைத் தொடர்ந்து இந்நாவலை ஷங்கர் திரைப்படமாக எடுக்க இருக்கிறார். இதுவும் இந்நாவலின் அதிக விற்பனைக்கு காரணமாக இருக்கலாம்.

வெளியீடு: விகடன் பிரசுரம்

கழிவறை இருக்கை – லதா

‘வாழ்வின் அடிப்படைத் தேவைகளாக நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளவை மூன்று – உணவு, உடை, இருப்பிடம். ஆனால், என்னைப் பொருத்தவரை நமக்கு அடிப்படைத் தேவைகள் நான்காகும் – உணவு, காமம், இருப்பிடம், உடை – சொல்லப்பட்டிருக்கும் வரிசையில்’ என்றுதான் இந்நூலை தொடங்குகிறார் ஆசிரியர்  லதா.

ஆம், காமத்தை மிக வெளிப்படையாக இந்நூலில் பேசும் ஆசிரியர், திருமணத்தில் வெற்றி பெற்றவர்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள் என்பதையும் திருமண உறவில் தோல்வி அடைந்தவர்கள் ஏன் தோல்வி அடைந்தீர் என்பதையும் வெளிப்படையாக பேசுங்கள் என்கிறார். இந்த புத்தகத்தை வாசித்து முடித்ததும் அதற்கான ஊக்கம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

பெண்கள் பேசத் தயங்குகிற விஷயத்தை ஒரு பெண் பேசி இருக்கிறார். ஆண்களிடம் மட்டுமல்ல பெண்களிடம் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் பற்றியும் பேசி இருக்கிறார். எனவே, ஆண்களும் பெண்களும் அவசியம் படிக்க வேண்டியது. உணர வேண்டிய வாழ்க்கை பாடம். ஆண்- பெண்; கணவன் – மனைவி என்ற வரையறை தாண்டிய உளவியல், உடலியல் சார்ந்த தேடலும் ஆறுதலும் பற்றியும் பேசுகிறது இந்நூல்.

இந்நூலில் என்ன இருக்கிறது என கையில் எடுத்து சும்மா புரட்டிப் பார்ப்பவர்கள் அதன்பின்னர் வாங்காமல் போகமாட்டார்கள். டாப் 5இல் இரண்டாவது இடத்தை இந்நூல் பெற்றதில் ஆச்சர்யம் இல்லை.

வெளியீடு: Knowrap Imprints

கோசலை – தமிழ்ப் பிரபா

பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா என பன்முகம் கொண்ட தமிழ்ப் பிரபாவின் புதிய நாவல், ‘கோசலை’.

இந்நாவலின் நாயகி கோசலை, கம்யூனிஸ்ட் கட்சி முழுநேர ஊழியர் ஒருவரின் மகள். குள்ள உருவம், மாற்றுத் திறனாளி, ஏழை, ஒடுக்கபட்டவள் என துயரமே வாழ்க்கையாக கொண்டவள். ஆனால், அது அவளை முடக்கிவிடவில்லை. உயரத்தில் இருக்க விரும்புகிறாள். அவளுக்கு மேகம், மொட்டை மாடி வீடு, பால்கனி பிடித்தவை. இயல்பாகவே இரக்கமும் பச்சாதாபமும் வரவழைக்கும் ஒரு பாத்திரம். ஆனால், அவளுடைய இருண்ட பக்கங்களையும் நாவல் காட்டுகிறது. தன் மீதே கழிவிரக்கம் கொண்டவளாகவும் அதன் காரணமாக ன்னை நேசிப்பவர்களை சந்தேகிப்பவளாகவும் இருக்கிறாள், கோசலை.

புறக்கணிப்பையும் துரோகத்தையும் ஓடுக்குமுறைகளையும் தியாகத்தால் எதிர்கொள்ளும் கோசலை, அம்பேத்கரை படித்து, அவரிடம் இருந்து உத்வேகம் பெற்று அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்கிறாள். சிந்தாதிரிப் பேட்டை நூலகராக, அப்பகுதி மக்களின் கல்விக்கு உதவி செய்யும் செயற்பாட்டாளராக, ‘பேட்டை ராணி’ஆக வாழ்கிறார். தன் மீது வீசப்படுகின்ற வெறுப்பையெல்லாம் திரட்டி ஆற்றலாக மாற்றி, எக்காலத்திலும் நிலைப்பது அன்பு என்பதை உணர்த்துகிறாள். 

சென்னை நகரப் பின்னணிக் கதைகளையும் இடையிடையே  கொண்டுள்ள இதை வரலாற்று ஆவணம் என்றும் சொல்லலாம். அந்தளவு புனைவா வரலாறா என்று தெளிவாக வகைப்படுத்த முடியாத வகையில் இந்நாவலை எழுதியுள்ளார் தமிழ்ப் பிரபா. இந்த புத்தகக் காட்சிக்கு வெளிவந்த இந்நாவலின் முதல் பதிப்பு முழுவதும் புத்தகக் காட்சி முடிவதற்குள் விற்றுத் தீர்ந்துள்ளன.

வெளியீடு: நீலம் பதிப்பகம்

குற்றப்பரம்பரை – வேல. ராமமூர்த்தி

‘ஜூனியர் விகடன்’ இதழில் ‘கூட்டஞ்சோறு’ என்ற தலைப்பில் தொடராக வெளிவந்த நாவல். ‘குற்ற பரம்பரை’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள்தான் எழுதுகிறார்கள் என்றாலும்,  வரலாற்றில் மனிதனின் வாழ்வை அதன் உணர்வுபூர்வமாக சித்தரிக்க இலக்கியப் படைப்புகளால் மட்டுமே முடியும் என்பார்கள். அதற்கு தமிழில் எழுதப்பட்ட சிறந்த உதாரணம் இந்த நாவல். எழுத்தாளரும் பிரபல நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதியது. ‘குற்ற பரம்பரை’ நமக்கு ஒரு நூற்றாண்டு வாழ்வை உயிரோட்டமாய் உணர்த்துகிறது. இந்நூலில் கிராமிய வாழ்வை அழகாய் பிரதிபலிப்பதொடு வேல ராமமூர்த்தியின் கலை நின்று விடுவதில்லை அழகை உருவாக்கவும் செய்கிறார்.

பாரதிராஜா, பாலா என பலரால் திரைப்படமாக எடுக்க திட்டமிடப்பட்டது. இப்போது ஓடிடி தொடராக தயாராகி வருகிறது.

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்

சுளுந்தீ – இரா. முத்துநாகு

பதினெட்டால் நூற்றாண்டில் சக்கிலியக் குடியின் (வாடன்) நிலை, வாழ்க்கை என்னவாக இருந்தது என்பதை தெளிவாக பேசும் நாவல், ‘சுளுந்தீ’. இந்நாவலுக்கான ஆசிரியர் முத்துநாகுவின் உழைப்பு வியக்கவைக்கிறது. அந்தளவு நாவலின் பக்கங்கள் தோறும் விரவிக் கிடக்கும் பண்டுவ நுணுக்கங்கள் வியக்க வைக்கின்றன. இந்த சித்த பண்டுவ முறைகள் பெரும் அறிவுசார் சொத்துகளாகும். ஆறு மாதக் குழந்தையின் சளி போக்குதல் முதற்கொண்டு எண்ணற்ற மருத்துவக் குறிப்புகள் ஆசிரியரின் தேடலையும் உழைப்பையும் சொல்கின்றன.

வெளியீடு: ஆதி பதிப்பகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...