No menu items!

2.4 லட்சம் கோடி ரூபாய் – ஏமாற்றிய தொழிலதிபர்கள்

2.4 லட்சம் கோடி ரூபாய் – ஏமாற்றிய தொழிலதிபர்கள்

கடந்த பத்தாண்டுகளில் இந்திய தேசிய வங்கிகளின் வாராக் கடன் பத்து மடங்கு அதிகரித்துள்ளது. 2012-ல் 23 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது, 2022 மே மாதம் 2.4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ட்ரான்ஸ் யூனியன் சிபில் ரிப்போர்ட் (TransUnion Cibil) இந்த புள்ளி விவரத்தை தந்திருக்கிறது. இதில் ஆறுதல் தரும் விஷயம் என்னவென்றால் 2021 மே மாதம் வாராக் கடன் 2.6 லட்சம் ரூபாயாக இருந்தது. இப்போது 2.34 லட்சமாக குறைந்திருக்கிறது.

வங்கிகளில் கோடிக்கணக்கில் வாங்கிவிட்டு திருப்பிப் பெற முடியாத கடன்களை வாராக் கடன் என்று குறிப்பிடுகிறார்கள். இந்தக் கடன்கள் வங்கியின் கணக்குப் புத்தகத்தில் இருக்காது. அந்தக் கடன் கணக்கு தனியாக வைக்கப்பட்டு அதை வசூலிக்கும் முயற்சிகள் எடுக்கப்படும். இப்படி செய்வதன் மூலம் வங்கியின் கடன் அளவு குறைத்துக் காட்டப்படுகிறது.

வாரக்கடன்களை வசூலிக்க நேஷனல் அசட் ரீகன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி (National Asset Reconstruction Company Ltd (NARCL)) என்று ஒரு தனி நிறுவனம் உருவாக்கப்பட்டிருக்கிறது. வங்கிகளால் வசூலிக்க முடியாத கடன்களை வசூலிக்க இந்த மத்திய அரசு நிறுவனம் நடவடிக்கைகள் எடுக்கும்.

வங்கியில் கடன் வாங்கி கட்ட முடியாதவர்களை வங்கிகள் இரண்டு விதமாக பிரிக்கின்றன. ஒன்று, முழு முயற்சி எடுத்தும் கடனைக் கட்ட இயலாதவர்கள் (Defaulters). இரண்டாவது, வேண்டுமென்றே கடனை அடைக்காமல் ஏமாற்றுவது (Wilful Defaulters).

இந்த இரண்டாவது வகையான வேண்டுமென்றே கடனை அடைக்காதவர்கள் லிஸ்ட்டில்தான் விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி போன்றவர்கள் வருகிறார்கள்.

இப்போது வாராக் கடன் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் 2.34 லட்சம் கோடி சுமார் பன்னிரெண்டாயிரம் நபர்களிடம் சிக்கியிருக்கிறது. இவர்களிடமிருந்து இந்தப் பணத்தை மீட்க முடியுமா என்பது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது.
இவர்கள் அனைவரும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள். அரசு இயந்திரத்தை வளைக்க முடிந்தவர்கள் என்பதால் பென்ஸ், ஆவ்டி, பிஎம்டபுள்யூ கார்களில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் ஓட்டுமொத்த நாட்டுக்குமான சுகாதரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி 86 ஆயிரம் கோடி ரூபாய். அதைவிட இரண்டே முக்கால் மடங்கு வாராக் கடனாக நிலுவையில் இருக்கிறது.

இந்திய கிராமங்களின் கிராம மக்களின் வளர்ச்சிக்காக இருக்கும் ஊரக வளர்ச்சித் துறைக்கு 1.4 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதைவிட 42 சதவீதம் அதிகப் பணம் வாராக் கடனாக 12 ஆயிரம் தொழிலதிபர்களிடம் சிக்கி இருக்கிறது.

வாராக் கடன் பட்டியலில் இருப்பவர்களில் வீடு வாங்க ஒரு கோடி ரூபாய் போன்ற சிறு தொகைகளை வாங்கியவர்கள் ஒரு சதவீதம்கான். தொழில் செய்ய என்று சொல்லி நூற்றுக் கணக்காக கோடிகளை ஏமாற்றிய கேடிகள்தான் அதிகம்.

இந்த வாரக் கடன் பட்டியலில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது – அதாவது 95 சதவீதம் – பொதுத் துறை வங்கிகள்தாம். தனியார் வங்கிகளில் இது போன்ற ஏமாற்று கடன்கள் நடப்பதில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஸ்டேட் வங்கிக்கு 71ஆயிரம் கோடி வாராக் கடன் இருக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 39 ஆயிரம் கோடி, யுனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு 29 ஆயிரம் கோடி, பரோடா வங்கிக்கு 25 ஆயிரம் கோடி என பொதுத் துறை வங்கிகள் பல்லாயிரக் கணக்கான கோடிகளை வாராக் கடனாக வைத்துள்ளன.

கடனைத் திருப்பித் தரவில்லை என்று தெரிகிறது. வேண்டுமென்றே வாங்கியக் கடனைத் திருப்பித் தரவில்லை என்பதும் தெரிகிறது. இப்படி தெரிந்திருந்தும் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க இயலவில்லை?

இவர்களுக்கு பண பலமும் அரசியல் செல்வாக்கும் இருப்பதால் நீதிமன்ற வழக்குகள் நீண்டு கொண்டே செல்கின்றன. கைதாகுபவர்கள் சில கால சிறைவாசத்துக்குப் பிறகு வெளியில் வந்துவிடுகிறார்கள். பெரிய கைகள் வெளிநாடுகளுக்கு பறந்து சென்று அங்கு சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு தங்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பல்லாயிரம் கோடி ரூபாய் ஏமாற்றிய நீரவ் மோடியையும் லலித் மோடியையும் விஜய் மல்லையாவையும் மத்திய அரசால் இந்தியாவுக்கு கொண்டு வர முடியவில்லை என்பது சோகமான விஷயம்.

அவர்களுடைய சொத்துக்கள் ஏலம் விடப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான நேரங்களில் அவர்கள் ஏமாற்றிய தொகைக்கும் ஏலத்தில் கிடைக்கும் தொகைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

ஒரு சாமானிய மனிதன் ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதற்கு அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில் கோடிகளை ஏமாற்றிவிட்டு உலக அழகிகளுடன் வெளிநாடுகளில் கொண்டாட்டமாய் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை பிடிப்பதற்கு எந்த அரசும் தீவிர முயற்சிகள் எடுக்காமலிருப்பது இந்தியாவுக்கு சறுக்கலே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...