6 அடி உயரம். கட்டுமஸ்தான ஜிம் உடல், நுனி நாக்கு ஆங்கிலம் என்று பார்ப்பவர்களை வசீகரிக்கக்கூடிய அனைத்து அம்சங்களும் கொண்டவர் முகமது சயாத். இன்று செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருபவர். Instagram மூலம் பெண்களிடன் நட்பு கொண்டு அவர்களை படுக்கையில் வீழ்த்தியவர் இன்று சிறையில் கம்பிகளுக்கு பின்னால் நிற்கிறார்.
என்ன நடந்தது?
சென்னை கீழ்ப்பாக்கம் சாலையில் உள்ள ஒயிட் அப்பார்மெண்டில் குடியிருந்தார் முகமது சயாத். அப்பா, பாரிமுனையில் முந்திரி பாதாம், பிஸ்தா மொத்த வியாபாரம் செய்து வருகிறார். நல்ல வருமானம். ஒரே மகன். தாயில்லாத பிள்ளை. அப்பா வியாபாரத்தைப் பார்க்க தினசரி சென்று விடுவதால் வீட்டில் யாரும் இருப்பதில்லை. விழா நிகழ்வுகளுக்கு அலங்காரம் மற்றும் ஒலி அமைப்பு தொழிலை செய்து வந்தார் முகமது சயாத். தந்தை வியாபாரத்தை கவனிக்க சென்று விடுவதால் பல நாள்கள் வீட்டில் சயாத் மட்டும்தான். அதுவும் அவருக்கு காம இச்சைகளுக்கு வசதியாக மாறியது.
இளம் பெண்கள் அதிகம் உலவும் Instagramல் தனது கட்டுமஸ்தான உடலை பலவிதங்களில் படமெடுத்து பதிவிட்டு வந்தார். அதன் மூலம் பல பெண்களின் நட்பு அவருக்கு கிடைத்தது. வெறும் உடல் அழகு மட்டுமல்ல. சயாத் மாடலிங் துறையிலும் இருந்தார். மிஸ்டர் தமிழ்நாடு ஹாட்பாடி 2019 பட்டம் வென்றிருக்கிறார். மாடலிங் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். இதுவும் பெண்களை ஈர்க்க ஒரு வலையாக பயன்பட்டது. இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொள்ளும் இளம் பெண்களை காதலிப்பதாகவும் மாடல் துறையில் பெரிய ஆளாக்குவதாகவும் கூறி நம்ப வைத்து படுக்கைக்கு அழைத்து செல்வது இவரது பாணி.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள், நட்சத்திர ஹோட்டல்களில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 100 முறை அறைகள் எடுத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தன்னுடன் நேரம் செலவழிக்கும் பெண்களை வீடியோக்களாகவும் புகைப்படங்களாவும் எடுத்துவைத்துக் கொண்டு அவர்களை மிரட்டி படுக்கைக்கு அழைத்ததாகவும் புகார்கள் வந்துள்ளன.
இதுவரை குறைந்த அளவே பெண்களிடமிருந்து புகார்கள் வந்திருக்கின்றன. ஆனால் அதிகமான பெண்கள் இவரிடம் ஏமாந்திருக்கிறார்கள். குறைந்த அளவு பெண்களே புகார் கொடுக்க முன் வந்திருக்கிறார்கள் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
இந்த வழக்கை விசாரித்து வரும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயனிடம் ” மூன்று பெண்கள் முகமது சையத்தை பற்றி புகார் தெரிவித்தார்கள். தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி ஏமாற்றி விட்டார் என்று. முதலில் ஒரு பெண் புகார் கொடுத்தார். இவர் மற்றொரு பெண்ணிடம் நான் முகமது சையத்தை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று அவர் தோழியிடம் கூற அந்த பெண் அவர் என்னைத்தானே திருமணம் செய்து கொள்வதாக சொல்லி இருக்கிறார். மூன்றாமவரும் அதையே சொல்ல மூவரும் போலீஸில் புகார் கொடுத்தனர். முகமது சையத் ஆன் லைனில் ஹோட்டல், பண்ணை வீடுகள் புக் செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. முகமது சையத்தை விசாரித்தபோது அவர் செல் போன்களில் பெண்களோடு இருக்கும் படங்கள் கிடைத்துள்ளன. கடந்த 30 நாட்களில் இந்த பாலியல் குற்றம் அதிகமாக நடந்தற்கு ஆதாரம் கிடைத்து உள்ளது. மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.
புகார்கள், வழக்கு, சிறை என்பதையெல்லாம் சயாத் அச்சத்துடன் அணுகவில்லை என்கின்றன காவல்துறை வட்டாரங்கள்.
“பொதுவாக பெண்களை நான் வலுக்கட்டாயமாக படுக்கைக்கு அழைப்பதில்லை. நான் கட்டாயப்படுத்தி அழைத்தது மிகக் குறைவான பெண்களே.. அவர்களாக விருப்பப்பட்டு வந்த பெண்கள்தாம் அதிகம். யாரையும் ஏமாற்றவில்லை” என்று கூலாக கூறுகிறாராம் சயாத்.
அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெரிய பணக்கார குடும்பத்தின் பெண்களாக இருப்பதால் இந்த வழக்கு விசாரணைகள் எந்த அளவு தீவிரமாக இருக்கும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பெண்கள் துணிச்சலுடன் தங்கள் புகார்களை நீதிமன்றம் வரை கொண்டு செல்வார்களா? தொடர்ந்து வழக்கு விசாரணைகளில் பங்கு பெறுவார்களா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.