No menu items!

Pollution : இந்தியாவுக்கு வழிகாட்டும் சென்னை!

Pollution : இந்தியாவுக்கு வழிகாட்டும் சென்னை!

உலகளவில் காற்று மாசுபாடு காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நகரங்களின் பட்டியலை IQAir அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் முதல் 100 நகரங்களில் இந்தியாவின் 63 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. உலகில் மிகவும் மாசுபட்ட நகரமாக ராஜஸ்தானின் பிவாடி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் 2ஆவது இடத்தில் உள்ளது. சென்னை எப்படி?

உலகளவில் இந்தியாவின் காற்றுதான் மோசம்

உலகளவில் காற்றின் தரத்தை கண்காணிக்கும் நிறுவனமாக IQAir உள்ளது. இந்த நிறுவனம் 117 நாடுகளில் உள்ள 6,475 நகரங்களில் காற்றின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ‘ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 6,475 நகரங்களில் 222 நகரங்கள் மட்டுமே சராசரி காற்றின் தரத்தைக் கொண்டுள்ளன. பிரான்ஸின் நியூ கலிடோனியா,  கரிபியன் கடலில் அமைந்துள்ள அமெரிக்காவின் புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் வர்ஜின் ஐலண்ட்ஸ் தீவுகள் ஆகிய மூன்று பகுதிகளில் மட்டுமே காற்று சுவாசிக்க ஆரோக்கியமான அளவில் உள்ளன’ என்கிறது, IQAir.

ஒவ்வொரு நாட்டிலும் 97% நகரங்களில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட மோசமாக இருப்பதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவை மிக மோசமான காற்று மாசுபாட்டை கொண்டுள்ளன. இந்த நாடுகளில் அனுமதிக்கப்பட்ட காற்று மாசுபாட்டைவிட 10 மடங்கு அதிகம் உள்ளது என்கிறது, IQAir.

உலகளவில் அதிக காற்று மாசுபாடு உள்ள முதல் 15 நகரங்களில் 10 இந்திய நகரங்கள்தான். இந்த 10 நகரங்களும் உத்தரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவை.

இந்தியாவிலேயே குறைவான காற்று மாசு தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில்தான் பதிவாகியுள்ளது.

ஆனால், அதுவும் கூட உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் காற்று மாசு அளவைவிட மூன்று மடங்கு அதிகம்.

காற்று மாசு எப்படி அளவிடப்படுகிறது?

“காற்றில் மிதக்கும் துகள்களைக் கொண்டே காற்றின் தரம் அளவிடப்படுகிறது. 2.5 முதல் 10 மைக்ரோ மீட்டர் வரை விட்டம் கொண்ட துகள்கள் ‘பிஎம் 10’ என்று அழைக்கப்படுகின்றன. 2.5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான அளவுகொண்ட துகள்கள் ‘பிஎம் 2.5’ என்று அழைக்கப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைப்படி காற்றில் அனுமதிக்கப்பட்ட துகள்கள் (பிஎம் 10) அளவு 100 மைக்ரோகிராம், நுண் துகள்கள் (பிஎம் 2.5) அளவு 60 மைக்ரோகிராம்” என்று ‘வாவ் தமிழா’விடம்  தெரிவித்தார், அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் தகவமைவு ஆராய்ச்சித் துறை முன்னாள் தலைவர் பேரா. ராமச்சந்திரன்.

பேரா. ராமச்சந்திரன்

இந்தியாவின் காற்று மாசுக்கு முக்கியக் காரணம் வாகனப் புகை, நிலக்கரி மின் நிலையங்கள், தொழிற்சாலை கழிவுகள், பயோமாஸ், கட்டுமான தொழில் ஆகியனதான்.

சென்னை எப்படி?

சென்னையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது காற்று மாசு குறைந்துள்ளது நமக்கு ஆறுதல் தரும் செய்தி. இந்தியாவில் சென்னையில் மட்டுமே காற்றில் ‘பிஎம் 2.5’ அளவு குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ‘ஆரோக்கிய திறனுக்கான முன்முயற்சி’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் சென்னையில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவை விட 4 மடங்கு உயர்ந்து இருந்தது. அப்போது, சென்னையில் திரிசூலம், பாரிமுனை, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் 176 முதல் 228 மைக்ரோ கிராம் வரை காற்று மாசு பதிவானது. திருவொற்றியூர், காசிமேடு, துரைப்பாக்கம், குருவி மேடு, சோழிங்கநல்லூர், வேளச்சேரி, நொச்சிக்குப்பம், கொடுங்கையூர், மீஞ்சூர், உர்ணாம்பேடு, சேப்பாக்கம், பெரும்புதூர், தியாகரயநகர், அத்திப்பேடு, காட்டுக்குப்பம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் பிஎம் 2.5 மாசு 59 முதல் 128 மைக்ரோகிராமாக இருந்தது.

ஆனால் இப்போது நடத்தப்பட்ட ஆய்வில் சென்னையில் காற்று மாசு குறைந்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.  இன்று (23-3-2022) சென்னையில் ‘பிஎம் 10’ அளவு ராயபுரத்தில் 61, பெருங்குடியில் 66, மணலி 70, ஆலந்தூர் 83, கொடுங்கையூர் 83, அரும்பாக்கம் 87, மணலி கிராமம் 102 என்ற அளவில் குறைந்துள்ளது. இதில் மணலி கிராமம் தவிர மற்ற பகுதிகளில் திருப்தியான அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு நல்ல அறிகுறி. இந்தியாவில் வேறு எந்த நகரத்திலும் இப்படி குறையவில்லை.  

“சென்னையில் காற்றை மாசுபடுத்துவதில் வாகனப் புகைகளே அதிகப் பங்கு வகிக்கின்றன.

வாகனங்களிலிருந்து கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரோ கார்பன், நைட்ரஜன், மீத்தேன், ஆக்சிஜன் உள்ளிட்ட பல வாயுக்கள் வெளியேறுகிறது. நான்கு சக்கரம், இரு சக்கரம் என வாகனத்தின் தன்மைக்கேற்ப ஒவ்வொரு வாகனப் புகையிலும் இவற்றின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்று, ‘காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் 1981’ வரையறை செய்துள்ளது. ஆனால், முறையான சோதனை மற்றும் சரியான பராமரிப்பு இல்லாததால், சென்னையில் ஓடும் பெரும்பான்மை வாகனங்கள் இச்சட்டம் குறிப்பிடும் அளவைவிட அதிகமான கார்பனை வெளியிடக்கூடியதாக உள்ளன.

வாகனப் புகையை அடுத்து நிலக்கரி எரிப்பு, கட்டுமான பணிகள், மழை வீழ்ச்சி உட்படப் பல்வேறு காரணிகளும் சென்னை காற்று மாசுக்குக் காரணமாக இருக்கின்றன.

வடசென்னையில் தொழிற்சாலைகளால் மாசுபடுகிறது என்றால், தென் சென்னை கட்டுமான பணிகளாலும் போக்குவரத்து நெரிசலாலும் மாசடைகிறது’’ என்கிறார், பேரா. ராமச்சந்திரன்.

காற்று மாசு ஏன் ஆபத்தானது?

“காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள் (பிஎம் 2.5) ஒவ்வொரு ஆண்டும் அதிகமான மக்களைக் கொல்கின்றன,” என்கிறது IQAir அமைப்பு.

மாசடைந்த காற்றைச் சுவாசிக்கும்போது அதிலுள்ள ‘பிஎம் 2.5’ உள்ளிழுக்கப்பட்டு நுரையீரல் திசுக்களில் ஆழமாக செல்கிறது, அங்கு அது இரத்த ஓட்டத்திலும் நுழைகிறது. இது ஆஸ்துமா, இதய நோய் மற்றும் பிற சுவாச நோய்கள் உட்படப் பல உடல்நல பிரச்சினைகளை உருவாக்கக்கூடியது.

சென்னையில் காற்று மாசால் மட்டும் கடந்த 2020ஆம் ஆண்டு 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா முழுவதும் அதிக இறப்பை ஏற்படுத்தும் காரணங்களில் ஐந்தாவது இடத்தை காற்று மாசு பிடித்துள்ளது.

உலகளவில் காற்றின் தரம் எப்படி?

ஸ்காண்டிநேவிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், யுகே ஆகியவற்றில் காற்று மாசு 1 முதல் 2 மடங்கு அதிக உள்ளன. யுனைடெட் ஸ்டேட்ஸில் 2 முதல் 3 மடங்கு அதிகமாக உள்ளது.

அமெரிக்காவில் 2,400க்கும் மேற்பட்ட நகரங்களில் 2020ஐ ஒப்பிடும்போது ​​6% குறைந்துள்ளது.  இதுபோல் சீனாவிலும் கடந்த 2021இல் இருந்து காற்று மாசு குறைந்துள்ளது. குறிப்பாகத் தலைநகர் பீஜிங்கில் கடந்த 5 ஆண்டுகளாகவே காற்றின் தரம் அதிகரித்துள்ளது. பீஜிங்கில் வாகனப் புகையைக் கட்டுப்படுத்தியது, அனல் மின் நிலையங்களின் செயல்பாட்டைக் குறைத்தது ஆகியன முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றன.

நாம் என்ன செய்யலாம்?

“தற்போது, காற்று மாசுபாட்டில் இருந்து தப்பிக்கவும் களைப்பைப் போக்கி உற்சாகம் பெறவும், சில நாடுகளில் ஆக்சிஜன் மையங்களுக்குச் சென்று சிறிது நேரம் தூய காற்றைச் சுவாசித்து வரும் வழக்கம் உள்ளது. இந்தியாவிலும் இதுபோன்ற மையங்கள் வரத் தொடங்கிவிட்டன. நம்மூரிலும் இந்த நிலை வராமல் இருக்க இப்போதே நாம் சுதாரித்துக்கொள்ள வேண்டும்.

காற்றைத் தூய்மையாக வைத்திருக்க மரங்கள் ஓர் இயற்கைத் தீர்வு. எனவே, காற்று மாசடைவதைத் தவிர்க்க, நகரின் மொத்த நிலப்பரப்பில் 33.3 சதவிகிதம் நிலப் பரப்புப் பசுமைப் போர்வையுடன் இருக்க வேண்டும் என ஒன்றிய அரசு பரிந்துரைக்கிறது. ஆனால், சென்னையில் கிட்டத்தட்ட 7 சதவிகிதம் மட்டுமே பசுமைப் போர்வை உள்ளது. எனவே, சென்னையின் பசுமைப் போர்வையை அதிகரிக்க வேண்டியது மிக மிக அவசியம். நம் வீட்டுக்கு முன்னால் இடம் இருந்தால் ஒரு மரத்தை நட்டுப் பராமரிக்கலாம்.

உங்கள் வாகனத்திற்கு 15 வயதுக்கு மேல் ஆகிவிட்டால் அதைப் பயன்படுத்த வேண்டாம். அவற்றை மலிவு விலையில் விற்கவும் முயல வேண்டாம். பழைய வாகனங்கள் தற்போதைய சுற்றுச்சூழல் நிலைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவை அல்ல. முன்னேறிய நாடுகளில் மக்கள் தங்கள் பழைய வாகனங்களை மலிவு விலையில் விற்பதில்லை. அவற்றை மறுசூழற்சி செய்ய அனுப்பிவிடுகிறார்கள். இதனை நாமும் பின்பற்றலாம்.

4 ஸ்ட்ரோக் இன்ஜின்கள் உள்ள இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களையும் ஈயம் கலக்காத பெட்ரோலையும் (unleaded)  பயன்படுத்தலாம். அதுபோல் எல்.பி.ஜி. கேஸ் பயன்பாடும் காற்று மாசடைவதைக் குறைக்கும்.

குறைந்த தூரப் பயணத்திற்கு நடந்தோ சைக்கிளிலோ செல்லலாம்.

சிக்னல்களில் காத்திருக்கும் போது வாகனங்களின் என்ஜினை நிறுத்தலாம். அவை வெளியிடும் புகை பச்சை விளக்குக்காகக் காத்து நிற்கும் நம் ஆரோக்கியத்தையும் சேர்த்தே பாதிக்கிறது.

ஹெல்மெட், லைசன்ஸ், இன்ஸூரன்ஸ் வாகன சோதனை போல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாகனங்கள் புகை சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்” என்கிறார் பேரா. ராமச்சந்திரன்.

சில வருடங்களுக்கு முன்னால் தண்ணீர் மாசடைந்து வருவதைப் பற்றி விஞ்ஞானிகள் அறிவுறுத்தினார்கள். “இவர்கள் வேறு, எப்பப் பார்த்தாலும் எதாவது பூச்சாண்டி காட்டிக்கொண்டே’’ என அதை அலட்சியப்படுத்தினோம். அதன் விளைவு, இன்று எங்குச் சென்றாலும் ஒரு தண்ணீர் பாட்டிலுடன் செல்ல வேண்டிய நிலை. காற்று மாசு குறித்த எச்சரிக்கையையும் அதுபோல் அலட்சியப்படுத்தினால், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் புத்தகப் பைகளை முதுகில் சுமந்து செல்வது போல, ஆக்சிஜன் உருளையை நாம் அனைவரும் சுமந்து செல்ல நேரிடும் காலம் விரைவில் வரும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...