No menu items!

கிரிக்கெட் –  இந்திய அணி எடுக்கும் புது ரூட்

கிரிக்கெட் –  இந்திய அணி எடுக்கும் புது ரூட்

இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டு 2007. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சச்சின், கங்குலி, திராவிட், லக்‌ஷ்மண் போன்ற மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்ட இந்திய அணி மரண அடி வாங்கியது. அந்த உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றிலேயே வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளிடம் தோற்று வெளியேறியது.

இந்த நேரத்தில் தேர்வுக்குழுவின் அப்போதைய தலைவரான வெங்சர்க்காருக்கு ஒரு வித்தியாசமான சிந்தனை உதித்தது. மூத்த வீரர்களை டெஸ்ட் போட்டிக்காக மட்டுமே ஒதுக்கிவிட்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு முற்றிலும் ஒரு புதிய அணியை உருவாக்கினால் என்ன  என்பதே அந்த சிந்தனை.

இதைத்தொடர்ந்து தோனியின் தலைமையில் டி20 போட்டிகளுக்கு ஒரு அணியும், அனில் கும்ப்ளே தலைமையில் டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு அணியும் உருவாக்கப்பட்டது. அதன்பின் இரு அணிகளும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சாதித்தது நமக்கெல்லாம் தெரிந்த கதை 2012-ம் ஆண்டுவரை இப்படி இரு பிரிவுகளாக இருந்தாலும், அதன்பின் இருவகையான போட்டிகளிலும் ஒரே வீரர்கள் ஆடுவது வழக்கமாகிப் போனது. விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல் போன்ற வீரர்கள் இரு வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடி வருகின்றனர். இதனால் வீரர்களின் சுமை அதிகமாகி, அவர்களின் திறன் குறைந்து வருகிறது.  

விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்களின் சராசரி ரன்கள் வேகமாக குறைந்து வருவது இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

இந்த சூழலில் வெங்சர்க்காரின் பழைய பார்முலாவை பிசிசிஐ மீண்டும் எடுத்துள்ளது. அடுத்த மாதம் நடக்கவுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டித் தொடருக்கும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் இருவேறு அணிகளைத் தேர்ந்தெடுத்துள்ளார் தேர்வுக் குழ்வின் தலைவர் சேதன் சர்மா.

இதன்படி ரோஹித் சர்மாவின் தலைமையிலான டெஸ்ட் அணியில் விராட் கோலி, புஜாரா, விஹாரி, ஜடேஜா, அஸ்வின், பும்ரா போன்ற மூத்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதேநேரத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் கே.எல்.ராகுல் தலைமையில் ரிஷப் பந்த்,  இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயஸ் ஐயர்,   தினேஷ் கார்த்திக், உம்ரான் மாலிக், சாஹல், ஹர்த்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் என இந்த ஐபிஎல்லில் சிறப்பாக ஆடிய இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன்படி கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் மட்டுமே டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய இரு தொடர்களுக்கான அணிகளில்  இடம்பெற்றுள்ளனர்.

எதிர்காலத்துக்கு தேவையான டெஸ்ட் அணியை கட்டமைக்க இந்த வீரர்களூக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 இந்த ஆண்டின் இறுதியில் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில் முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட டி20 அணி உருவாக்கப்பட்டுள்ளது பிசிசிஐயின் வித்தியாசமான முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் இந்திய  அணி வென்றால், 2007-ம் ஆண்டில் நடந்ததைப் போல் 2022லும் முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியை கே.எல்.ராகுல் தலைமையில் இந்தியா களம் இறக்கும் என்று கூறப்படுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் டி20 போட்டிகளில் ஃபார்ம் இழந்திருக்கும் வேளையில், இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணிக்கு கிரிக்கெட் வல்லுநர்களிடையே வரவேற்பு எழுந்துள்ளது.

 “இந்த தொடரில் இந்திய அணி தோற்றாலும், இளம் வீரர்களைக் கொண்ட அணியையே இந்தியா தொடர்ந்து குறுகிய கால போட்டிகளில் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைப் போல் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தனித்தனி அணிகளை தயார்படுத்த வேண்டும்” என்பது கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரை பல திறமையான வீரர்களைக் கொண்டுள்ள நாடாக இந்தியா உள்ளது. வீரர்களுக்கு இங்கே பஞ்சமில்லை. எனவே கிரிக்கெட் வாரியத்தின் இந்த புதிய ரூட் தொடர வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பம்.

கிரிக்கெட் வாரியம் இதை நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...