No menu items!

12th man – ஓடிடி விமர்சனம்

12th man – ஓடிடி விமர்சனம்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தனிப்பட்ட சில ரகசியங்கள் இருக்கும்.  அந்த ரகசியங்கள் அவர்களுக்குள்ளேயே இருப்பதுதான் நல்லது. பகிரங்கமாக வெளியில் வந்தால் அதனால் பல சிக்கல்கள் உருவாகும் என்பதை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டுள்ள  படம் 12th man.

கல்லூரி காலம் தொட்டு இணைந்திருக்கும் 11 நண்பர்கள், பேச்சுலர் பார்டிக்காக ஒரு ரிஸார்ட்டுக்கு செல்கிறார்கள். பார்ட்டியின்போது தங்களுக்குள் எந்த ஒளிவுமறைவும் இல்லை என்று ஒருவர் சொல்ல, இல்லை தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் சில ரகசியங்கள் இருக்கின்றன என்று மற்றொருவர் சொல்கிறார்.  அது உண்மைதானா என்று ஒரு சர்ச்சை ஏற்படுகிறது. இந்த சர்ச்சைக்கு தீர்வுகாண அவர்கள் ஒரு விளையாட்டை விளையாடுகிறார்கள்.

பார்ட்டியில் கலந்துகொள்ளும் 11 பேரும் தங்கள் செல்போனை டேபிளில்  வைக்க வேண்டும். ஏதாவது அழைப்புகள் வந்தால் ஸ்பீக்கரில் போட்டு பேசவேண்டும்.  அதேபோல் வாட்ஸ்அப்பில் தகவல்கள் வந்தாலும் அதை அனைவருக்கும் படித்துக் காட்ட வேண்டும் என்பது போட்டியின் விதி.

இந்த வினோத விளையாட்டின்போது ஒருவருக்கு வரும் தொலைபேசி அழைப்பால் நண்பர்களுக்குள் சண்டை மூள்கிறது. அனைவரும் தங்கள் அறைகளுக்குள் போகிறார்கள். சிறிது நேரம்  கழித்து அவர்களில் ஒரு பெண், ரிசார்ட் அருகே இறந்து கிடக்கிறார். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்ற கேள்வி எழுகிறது. அதே ரிசார்ட்டில் வசிக்கும்  12-வது நபரான ஒரு காவல்துறை அதிகாரி (மோகன்லால்)  இதற்கு விடை காண்பதுதான் கதை.      

‘திருஷ்யம்’ (பாபநாசம்),  ‘த்ருஷ்யம் 2’ என மலையாளத்தில் 2 த்ரில்லர் வெற்றிகளைக் கொடுத்த மோகன்லால் – ஜீது ஜோசப் ஜோடியின் அடுத்த த்ரில்லர் படம் என்பதாலேயே இப்படத்தின்மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

அந்த எதிர்பார்ப்பை மோகன்லால் – ஜீது ஜோசப் ஜோடி முடிந்தவரை  நிறைவேற்றி உள்ளது.

படம் தொடங்கி அரை மணி நேரம் கழித்துதான் அறிமுகமாகிறார் மோகன்லால். அதுவும் சில நிமிடங்கள்தான். ஒரு குடிகார காமெடியனாக நண்பர்களுடன் விவாதம் செய்துவிட்டு போகும் அவர், பின்னர் இடைவேளையின்போதுதான் மீண்டும் வருகிறார். ஆனால் அதன்பின்னர் ஒட்டுமொத்த படத்தையும் தன் முதுகில் சுமக்கிறார். எந்த கவலையும் இல்லாத ஒரு குடிகாரன் பாத்திரம், அதீத திறமைசாலியான காவல்துறை அதிகாரியின் பாத்திரம் என்று இருவிதத்திலும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

 ‘த்ருஷ்யம்’, ‘த்ருஷ்யம் 2’, ‘மெமரீஸ்’, ‘தம்பி’ (தமிழ்) ஆகிய படங்களில் த்ரில்லருடன் சற்று மசாலா விஷயங்களையும் சேர்த்து கொடுத்திருந்த ஜீது ஜோசப், இதில் முழுக்க முழுக்க சீரியசாக களம் இறங்கியிருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு ஒரு நீண்ட வட்டமேசையைச் சுற்றி 12 கதாபாத்திரங்களையும் அமர வைத்தே விறுவிறுப்பாக கதை சொல்லி இருப்பதில் அப்ளாஸ் வாங்குகிறார்.

அதேபோல் ஒரு ரிசார்ட்டுக்குள் வைத்து 80 சதவீத படத்தை எடுத்திருந்தாலும் ரசிகர்களை கொஞ்சம்கூட நெளியவைக்காமல் சுவாரஸ்யமாக கதையை கொண்டுசென்றிருக்கும் அவரை நிச்சயம் பாராட்டலாம்.

பொதுவாக சஸ்பென்ஸ் கதைகளில் சந்தேகப்படும் நபர்களாக நான்கைந்து பேர்தான் இருப்பார்கள். ஆனால் இதில் 10 பேர் இருப்பதால் ஒவ்வொருவரின் பெயரையும், அவர்களுக்கும் இறந்துபோன பெண்ணுக்கும் இடையிலான தொடர்பை ஞாபகத்தில் வைத்திருப்பதும் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. இதனால் சில சமயங்களில் சில காட்சிகளை மீண்டும் ரீவைண்ட் செய்து பார்க்கவேண்டி உள்ளது.  

அதேபோல் படத்தின் ஆரம்பத்தில் அனைவரையும் நல்லவர்களாக காட்டிவிட்டு, போகப்போக அனைவரையும் கோசமானவர்களாக சித்தரிப்பதும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை.

இருப்பினும் சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை விரும்புபவர்களை இப்படம் நிச்சயம் ஏமாற்றாது. இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...