கலகத் தலைவன் (தமிழ்) – நெட்பிளிக்ஸ்
உதயநிதி நடித்து சில வாரங்களுக்கு முன் வெளியான கலகத் தலைவன் திரைப்படம் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
வஜ்ரா என்ற நிறுவனம் புதிய கனரக வாகனத்தை உற்பத்தி செய்கிறது. அந்த வாகனத்தால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பு உருவாகும் என்ற செய்தி வெளியாக, அந்நிறுவனத்துக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. சில உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த அந்த ரகச்சியம் வெளியில் கசிந்தது எப்படி என்ற விசாரணையில் நிறுவனம் இறங்குகிறது. இதை கண்டுபிடிக்க ஒருவரை நியமிக்கிறது. அவரால் கண்டுபிடிக்க முடிந்ததா? ரகசியத்தை வெளியிட்ட நாயகன் சிக்கினாரா என்பதுதான் படத்தின் கதை.
வார இறுதியில் கொஞ்சம் சமுதாய பிரச்சினைகளுடன் கூடிய ஒரு சீரியஸ் படத்தை பார்க்க விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.
கூமன் (Kooman) (மலையாளம்) – அமேசான் பிரைம்
த்ரிஷ்யம் (பாபநாசம்), மெமரீஸ், ட்வெல்த் மேன் உள்ளிட்ட க்ரைம் தில்லர் படங்களை இயக்கிய ஜீது ஜோசப், மலையாளத்தில் புதிதாக இயக்கியிருக்கும் பாடம் கூமன்.
தமிழக, கேரள எல்லையோர பகுதிகளில் சொல்லி வைத்தாற்போல ஒவ்வொரு அமாவாசைக்கு அடுத்த நாளும் யாராவது ஒருவர் மரத்தில் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். சுமார் 2 ஆண்டுகள் இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்க, இதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன என்று அறிய விசாரணையில் இறங்குகிறார் ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளான ஆசிப் அலி. முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் அவருக்கு உதவியாக இருக்கிறார். அந்த கான்ஸ்டபிளால் தற்கொலைகளுக்கு பின் உள்ள ரகசியத்தை கண்டுபிடிக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.
ஜீது ஜோசப்பின் முந்தைய படங்கள் அளவுக்கு இதில் த்ரில் இல்லையென்றாலும் ஓரளவு பரபரப்பாக கதை நகர்கிறது.
மீட் க்யூட் (Meet Cute) (தெலுங்கு) – சோனி லைவ்
நானி தயாரிப்பில் சோனி லைவ் இணையதளத்தில் வெளிவந்திருக்கும் ஆந்தாலஜி கதைகள்தான் மீட் கியூட். சுவாரஸ்யமான பல்வேறு முதல் சந்திப்புகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த கதைகளில் சத்யராஜ், ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தீப்தி காந்தா இயக்கியிருக்கிறார்.
படம்பார்க்க ஒரேயடியாக இரண்டு மணிநேரத்துக்கு மேல் ஒதுக்க முடியாதவர்கள், சராசரியாக சுமார் அரை மணி நேரம் கொண்ட குட்டிக் குட்டி கதைகளைகளாக பார்த்து ரசிக்கலாம். ஒவ்வொரு கதையும் ஒரு காதல் கவிதையைப் போல் நகர்கிறது. இந்த கதைகளை தமிழிலும் பார்க்கலாம்.
தட்கா (Tadka) (இந்தி) – ஜீ5
‘சால்ட் அண்ட் பெப்பர்’ என்ற பெயரில் மலையாளத்திலும், ‘உன் சமையலறையில் என்ற பெயரில் தமிழிலும் வெளியான படத்தின் இந்திப் பதிப்புதான் ‘தட்கா’. நானா படேகர், ஷ்ரேயா, டாப்ஸி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.