No menu items!

உலகக் கோப்பையுடன் விடைபெறுவாரா Lionel Messi?

உலகக் கோப்பையுடன் விடைபெறுவாரா Lionel Messi?

உலக நாடுகள் அத்தனையையும் கடந்த ஒரு மாத காலத்துக்கு கட்டிப் போட்டிருந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. நாளை நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் ஒரு பக்கம் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியும், மறுபக்கம் கிலியன் பாப்பேயின் பிரான்ஸ் அணியும் கோப்பையை கைப்பற்ற மோதுகின்றன.

அர்ஜென்டினாவோ, பிரான்ஸோ… இரு அணிகளில் எந்த அணி வென்றாலும் இது அவர்கள் கைப்பற்ரும் 3-வது சாம்பியன் பட்டமாகப் போகிறது . இந்த உச்சத்தை எட்டும் வாய்ப்பு எந்த அணிக்கு இருக்கிறது என்ற விவாதம் சர்வதேச கால்பந்து ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்திய கால்பந்து ரசிகர்களைப் பொறுத்தாவரை அர்ஜெண்டினா வெல்ல வேண்டும் என்று விரும்புபவர்களே அதிகம். மரடோனா காலம்தொட்டு இந்தியாவுக்கும், அர்ஜென்டினாவுக்கும் உள்ள பாசப் பிணைப்பு அது. மரடோனாவால் அர்ஜென்டினா அணிக்கு ரசிகர்களாக மாறிய இந்தியர்கள், மெஸ்ஸியின் காலத்தில் அதற்கு அடிமையாகவே மாறிவிட்டார்கள் என்று சொல்லலாம்.

இந்தியாவில் கிரிக்கெட்டைவிட கால்பந்து அதிகமாக ஆராதிக்கப்படும் கேரளா, கோவா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் மெஸ்ஸிக்கு கட் அவுட் வைக்கும் அளவுக்கு அர்ஜென்டினா அணியை இந்திய கால்பந்து ரசிகர்கள் ஆராதிக்கிறார்கள். அதேநேரத்தில் பிரெஞ்சு காலணியாதிக்கத்தில் இருந்த புதுச்சேரியில் மட்டுமே பிரான்ஸுக்கு அதிக ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக கடற்கரை பகுதியில் பிரம்மாண்ட திரையில் உலகக் கோப்பை போட்டியை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மெஸ்சியைப் பொறுத்தவரை, அவருக்கு இது கடைசி உலகக் கோப்பை. உலகின் தாலைசிறந்த கால்பந்து வீரருக்கான விருதை பலமுறை வாங்கினாலும் அர்ஜென்டினா அணிக்காக ஒரு கோப்பையைக் கூட வாங்க முடியாமல் இருந்தது மெஸ்ஸிக்கு ஒரு பெரிய குறையாக இருந்தது. இந்த குறை கடந்த ஆண்டு நடந்த கோபா அமெரிக்கா தொடரில் நிறைவேறியது. அந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரேசிலை வென்று அர்ஜென்டினாவுக்கு கோப்பையை வென்று கொடுத்தார் மெஸ்ஸி. அதேபோன்று இந்த முறை உலகக் கோப்பையையும் வென்று ஒரு நாயகனாக கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம் என்று மெஸ்ஸி நினைக்கிறார்.

உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் ஆடுவது மெஸ்ஸிக்கு இது 2-வது முறை. ஏற்கெனவே கடந்த 2014-ம் ஆண்டில் இறுதிப் போட்டிவரை அர்ஜென்டினா அணியை கொண்டுசென்ற மெஸ்ஸி, நூலிழையில் கோப்பையை தவறவிட்டார். அப்போது நடந்த தவறு, இம்முறை நடக்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார் மெஸ்ஸி. இறுதிப் போட்டிக்கு 2 நாட்கள் முன்பு சற்று உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் தீவிரமாக பயிற்சி பெற்ரு வருகிறார்.

2014-ம் ஆண்டுக்கும் இப்போது நடக்கப்போகும் இறுதிப் போட்டிக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கிறது. அப்போது அர்ஜென்டினா அணி மெஸ்ஸியை மட்டுமே நம்பி இருந்தது. ஆனால் இப்போது மெஸ்ஸி தனி ஆள் இல்லை. அவர் பாஸ் செய்து கொடுக்கும் பந்தை லாவகமாக வாங்கி கோல் அடிக்கும் ஆற்றல் வாய்ந்த ஜூலியன் அல்வாரஸ் அணியில் இருக்கிறார். அவர் இருப்பது மெஸ்ஸிக்கு கூடுதல் தெம்பை அளிக்கிறது. அத்துடன் பிரான்ஸ் அணிக்கு எதிராக உலகக் கோப்பையில் ஆடிய 12 போட்டிகளில் 3 முறை மட்டுமே அர்ஜென்டினா தோற்றுள்ளது. இதுவும் மெஸ்ஸியின் படைக்கு கூடுதல் தன்னம்பிக்கையை அளிக்கிறது.

அதேநேரத்தில் கடந்த உலகக் கோப்பை போட்டியில் அர்ஜென்டினாவை 4-3 என்ற கோல்கணக்கில் வென்ற நம்பிக்கையில் பிரான்ஸ் அணி களம் இறங்குகிறது. கால்பந்து விளையாட்டின் எதிர்காலமாக கருதப்படும் கிலியன் பப்பே அணியில் இருப்பது அவர்களின் மிகப்பெரிய பலம்.

பிரான்ஸ் அணியின் மற்றொரு பலம் போட்டி நடக்கும் நேரம். கத்தாரில் வெப்பம் அதிகமாக இருக்கும் நேரமான 8.30 மணிக்கு (இந்திய நேரப்படி) இறுதிப் போட்டி நடக்கிறது. இந்த உலகக் கோப்பை போட்டியில் நள்ளிரவு நடக்கும் போட்டிகளில்தான் அர்ஜென்டினா உள்ளிட்ட ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்க அணிகள் வெற்றி பெற்றிருக்கின்றன.

அந்த நேரத்தில் அதிக வெப்பம் இல்லாததே இதற்கு காரணம். மாறாக வெப்பம் அதிகமாக இருக்கும் மாலை நேரங்களில் நடந்த போட்டியில் தோல்வி அல்லது டிராவைச் சந்தித்துள்ளன. ஆப்பிரிக்க நாடான மொராக்கோவுடன் மாலையில் நடந்த போட்டியில் பிரேசில் தோற்றது இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப் போட்டி கத்தார் நேரப்படி மாலையில் நடக்கிறது. அப்போது இருக்கும் தட்ப வெப்பம், அர்ஜென்டினாவுக்கு சாதகமாக இருக்காது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

குளிரூட்டப்பட்ட மைதானம்தானே… வெளியில் இருக்கும் வெப்பம் உள்ளுக்குள் எப்படி பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

ஆனால், முழுமையாக குளிரூட்டப்பட்ட மைதானாமாக இருந்தாலும் வெளியிலிருக்கும் வெப்பம் உள்ளேயும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. பயிற்சி மைதானங்கள் குளிரூட்டப்பட்டவை அல்ல. அந்த மைதானங்களில் வெப்பத்தை தணிக்க தொடர்ந்து நீர் தெளிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அந்த வெப்பச் சூழலிலிருந்து போட்டி மைதானத்துக்குள் இருக்கும் குளிருக்குள் வரும்போது ஆட்டக்காரர்களால் வெப்ப மாற்றத்தை சமாளிக்க இயலவில்லை என்று கூறுகிறார்கள். பல மைதானங்களில் ஏசி மிகவும் குளிராக இருப்பதால் அணைக்க சொல்லி அங்கிருக்கும் ரசிகர்களே கூறியிருக்கிறார்கள். வெளியில் 30 முதல் 35 செல்ஷியஸ் வரை வெப்பம் இருந்தால் மைதானத்துக்குள் 20 டிகிரி செல்ஷியஸ் அளவில் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

வெப்பம் என்று கூறினால், குளிர் பிரதேசத்திலிருந்து வரும் பிரான்ஸ் அணியை பாதிக்காதா என்ற கேள்வி பலருக்கும் எழலாம். பிரான்ஸ் அணியில் கிலியன் பப்பே உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை வெப்பம் அவ்வளவாக பாதிக்காது. என்வே இது பிரான்ஸுக்கு சாதகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

இந்தத் தடைகளைத் தாண்டி உலகக் கோப்பையுடன் மெஸ்ஸி விடைபெறுவாரா என்று பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...