No menu items!

சேப்பாக்கம் ராசி இந்தியாவுக்கு தொடருமா?

சேப்பாக்கம் ராசி இந்தியாவுக்கு தொடருமா?

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை நடக்கவுள்ள 3-வது ஒருநாள் போட்டிக்காக முழுமையாக தயாராகி நிற்கிறது சேப்பாக்கம் மைதானம். இந்த தொடரில் இதுவரை நடந்த 2 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. நாளை நடக்கும் போட்டியில் எந்த அணி ஜெயிக்கிறதோ அந்த அணிதான் இந்த ஒருநாள் போட்டித் தொடரைக் கைப்பற்றும். இந்த சூழலில் சேப்பாக்கத்தின் ராசி இந்தியாவுக்கு வெற்றி தேடித் தரும் என்று நம்புகிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.

அது என்ன சேப்பாக்கத்தின் ராசி என்கிறீர்களா?…

இந்தியாவில் பல மைதானங்கள் இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றுத் தந்தது சேப்பாக்கம் மைதானம்தான். 1932-ம் ஆண்டுமுதல் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் ஆடி வந்தாலும் 1952-ம் ஆண்டில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில்தான் இந்திய அணி முதல் வெற்றியைப் பெற முடிந்தது. இப்போட்டியில் விஜய் ஹசாரே தலைமையிலான இந்திய அணி இப்போட்டியில் இங்கிலாந்தை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் மொத்தம் 12 விக்கெட்களை வீழ்த்திய வினு மங்கட் இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.

இந்தியாவின் மிகப் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று என்ற பெருமையும் சேப்பாக்கம் மைதானத்துக்கு இருக்கிறது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானம், டெல்லியில் உள்ள கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக சேப்பாக்கம் மைதானம் கட்டப்பட்டது. 1916-ம் ஆண்டு முதல் இங்கு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

7.52 லட்சம் சதுரஅடி பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானம், முதலில் ‘மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் கிரவுண்ட்’ என்றுதான் அழைக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரான எம்.ஏ.சிதம்பரத்தின் பெயர் இந்த மைதானத்துக்கு சூட்டப்பட்டது.

1934-ம் ஆண்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் முதல் முறையாக ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் மெட்ராஸ் மற்றும் மைசூரு அணிகள் மோதின.
2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக 2009-ம் ஆண்டு இந்த மைதானம் நவீன முறையில் மாற்றிக் கட்டப்பட்டது. ஒரே நேரத்தில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கும் வகையில் இந்த மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் மைதானம் இந்திய அணிக்கு மட்டுமின்றி இந்திய வீரர்களுக்கும் ராசியானதாக உள்ளது. இங்கு இந்திய வீரர்கள் குறிப்பிடத்தக்க பல சாதனைகளைப் பதிவு செய்துள்ளனர்.

இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய சுனில் கவாஸ்கர், 30-வது சதத்தை அடித்து டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்தது சேப்பாக்கம் மைதானத்தில்தான். 1983-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்தார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வீரேந்தர சேவாக் 318 ரன்களைக் குவித்ததும், இங்கிலாந்துக்கு எதிராக கருண் நாயர் 303 ரன்களை எடுத்ததும் இங்குதான். சேப்பாக்கம் மைதானம் தனக்கு ராசியான கிரிக்கெட் மைதானம் என்ரு சச்சின் டெண்டுல்கர் ஒருமுறை கூறியிருக்கிறார்.

இத்தனை ராசியான சேப்பாக்கம் மைதானம் நாளைய ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுத்தரும் என்று எதிர்பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...