No menu items!

அண்ணாமலை தனிக் கட்சியா? – மிஸ் ரகசியா

அண்ணாமலை தனிக் கட்சியா? – மிஸ் ரகசியா

“தமிழ்நாட்டு குடும்பத் தலைவிகளுக்கு மாசம் 1,000 ரூபா கிடைக்குப் போகுது போல… வாழ்த்துகள்” என்றவாறு ரகசியாவை வரவேற்றோம்.

“தகுதியான குடும்பத் தலைவிகளுக்குன்னு அதுல ஒரு வார்த்தை சேர்த்திருக்காங்களே.. அதனால என்னை மாதிரி பல குடும்பத் தலைவிகளுக்கு இந்த ஆயிரம் ரூபாய் கிடைக்குமாங்கிறது சந்தேகமாவே இருக்கு”

“நீ குடும்பத் தலைவியா. உனக்கு இன்னும் கல்யாணமே ஆகல. சந்தடி சாக்குல ஆயிரம் ரூபாய்க்கு குடும்பத் தலைவினு உன்னோட ஸ்டேட்டசை மாத்திக்கிறீயா?”

சிரித்தாள் ரகசியா.

”எல்லோருடைய கவலையைச் சொன்னேன். இந்த திட்டத்துக்காக மொத்தம் 7,000 கோடி ரூபாய் மட்டும்தான் ஒதுக்கி இருக்காங்க. அதனால பல குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்காம போயிடுமோனு அமைச்சர்கள் சிலர் கவலை தெரிவிச்சிருக்காங்க.”

“எல்லாருக்கும் கொடுக்க அரசாங்கத்துல பணம் வேணும்ல.”

“பணம் மட்டுமே பிரச்சினையில்லை. எதுக்கு நல்லா சம்பாதிக்கிறவங்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்கணும்கிற கேள்வியும் இருக்கு. கடந்த காலத்துல இலவச டிவி, ஃபேன்லாம் கொடுக்கும்போது எல்லோருக்கும்னு கொடுத்திருக்காங்க. பணக்காரங்களுக்கு கூட டிவி கிடைச்சது. இது அனாவசிய செலவுதானே. அதனால யாருக்குத் தேவையோ அவங்களுக்கு கொடுப்போம்னு நிதியமைச்சர் சொல்லியிருக்கிறார். அதை முதல்வரும் ஏத்துக்கிட்டார்”

”இப்பவே யாருக்குலாம் கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருப்பாங்களே?”

“கிட்டத்தட்ட ஆமா. இன்னும் முழுசா முடியல. தமிழ்நாட்டுல 2.12 கோடி ரேஷன் அட்டைகள் இருக்கு. அதுல ஒரு கோடி அட்டைகளுக்கு இப்போதைக்கு கிடைக்கிற வாய்ப்பு இருக்கு. அடுத்தக் கட்டத்துல இன்னும் 50 லட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள். மொத்தமா ஒன்றரைக் கோடி குடும்ப அட்டைகளுக்கு கிடைக்கும்னு திமுக தரப்புல சொல்றாங்க. அது பெரிய எண்ணிக்கைதானே”

”ஆமா, நிச்சயம். கலைஞர் பிறந்த நாள்ல ஆரம்பிப்பாங்கனு நினைச்சேம். அண்ணா பிறந்த நாள்ல ஆரம்பிக்கிறாங்களே?”

“கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதியில இருந்து இந்த திட்டத்தை தொடங்க முதல்வர் ஸ்டாலின் விரும்பி இருக்கார். ஆனா நிதியமைச்சரோ, நிதிநிலை இன்னும் சரியாகல. அதனால அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி இந்த திட்டத்தை தொடங்கலாம். அதனால நமக்கு கொஞ்சம் பணமும் மிச்சமாகும்ன்னு சொல்லி சம்மதிக்க வச்சிருக்கார்”

“பட்ஜெட் பத்தி அரசியல்வாதிங்க கருத்துகளைச் சொல்லிட்டாங்க. அதிகாரிங்க கருத்து என்ன?”

“தமிழக அரசுக்கு ஆலோசனை சொல்ல அமைக்கப்பட்ட பொருளாதார நிபுணர்கள் குழுவும், அதிகாரிங்களும் நிதியமைச்சரை பாராட்டறாங்க. எது தேவை, எது தேவையில்லைன்னு நிதியமைச்சர் சரியா கணிக்கறார். அதேசமயம் திமுக வாக்கு வங்கியை அதிகரிக்கற திட்டங்களுக்கு அவர் நோ சொன்னதில்லை. திமுக ஆட்சிக்கு வந்தப்ப வருவாய் பற்றாக்குறை 62 ஆயிரம் கோடியா இருந்துச்சு. இப்ப அதை 30 ஆயிரம் கோடியா குறைச்சிருக்கார்னு அதிகாரிங்க பாராட்டறாங்க. இதைப்பத்தி முதல்வர்கிட்டயும் அவங்க சொல்லி இருக்காங்க.முதல்வரும் ஹாப்பி”

“திராவிடக் கட்சிகளோட கூட்டணி வேணாம்னு அண்ணாமலை சொன்னது பெரிய பரபரப்பை கிளப்பி இருக்கே.?”

“அது மட்டுமா சொன்னார்? தனிப்பட்ட கருத்துனு சொல்லி ஏகப்பட்டதை சொல்லியிருக்கிறார். மூத்த தலைவர்களான நயினார் நாகேந்திரன்,வானதி சீனிவாசன் இவங்களுக்கு அவர் பேசுனது பிடிக்கல. கூட்டணி இல்லாம ஜெயிக்க முடியுமானு கேட்டிருக்காங்க. எலெக்‌ஷன் போட்டி போடாதவங்க மட்டும் அண்ணாமலை கருத்தை ஆதரிச்சிருக்காங்க”

“வானதி, நயினார்லாம் என்ன சொல்றாங்க?”

”கூட்டணி இல்லாம நாம ஜெயிக்க முடியாதுனு அழுத்தமா பேசியிருக்காங்க. தனியா நிக்கணும்னா முதல்ல கட்சியோட கட்டமைப்பை வலுப்படுத்தணும். இப்போ கட்சியோட கட்டமைப்பு வலுவா இல்லை. பல இடங்கள்ல பூத் கமிட்டிகூட இல்லைன்னு அவங்க பேசியிருக்காங்க. அண்ணாமலை மீது தமிழக அரசு வழக்கு போட்டதை கண்டிச்சு சமீபத்துல சென்னைல நடந்த போராட்டம் நடந்தது. சென்னையைச் சுற்றி இருக்கற 7 மாவட்டங்கள்ல இருக்கற தொண்டர்கள் இந்த போராட்டத்துல கலந்துக்குவாங்கன்னு கட்சி கணக்கு போட்டிருக்கு. ஒரு மாவட்டத்துல இருந்து 500 தொண்டர்கள் வந்தாலும் குறைஞ்சது 3,500 தொண்டர்களாவது இதுல கலந்திருக்கணும். ஆனா 500 பேர்தான் வந்துருக்காங்க. கட்சி நிலைமை இப்படி இருக்கும்போது எப்படி தனியா நிக்க முடியும்னு கேட்டிருக்காங்க”

“கரெக்டான கேள்விதான். அண்ணாமலை என்ன சொல்லியிருக்கிறாரு?”

“அண்ணாமலை தன்னோட கருத்துல உறுதியா இருந்திருக்கார். அண்ணாமலை தனிக் கட்சி ஆரம்பிக்கப் போறார்ன்ற டவுட் பாஜககாரங்ககிட்ட இருக்கு. இத்தனை நாள் வார் ரூம் மூலமா அண்ணாமலையை நல்லா பிரபலப்படுத்தியாச்சு. அண்ணாமலையும் பேசும்போது என் செல்வாக்கு பத்து சதவீதம்னா பாஜகவின் செல்வாக்கு இரண்டு சதவீதம்தான்னு சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் குறிப்பிட்டு அவர் தனிக் கட்சி ஆரம்பிக்கப்போறார்னு மேலிடத்துக்கு சிலர் ரிப்போர்ட் அனுப்பியிருக்காங்க”

“அதனால இப்போதைக்கு இந்த பிரச்சினையை பெருசாக்க வேண்டாம்னு எடப்பாடி அணிக்கு அவங்க தூது விட்டிருக்காங்க. கூட்டணி பத்தி ஏதும் சொல்ற இடத்துல அண்ணாமலை இல்லை. அதனால அவருக்கு பதில் சொறா மாதிரி ஏதாவது பேசி சிக்கலை இன்னும் பெருசாக்கிடாதீங்கன்னு சொல்லி இருக்காங்க.”

“அதிமுகவுல அண்ணாமலை பேச்சை எப்படி பார்க்கிறாங்க”

“அவங்களுக்கு எந்த கவலையும் இல்லை. பாஜக கூட்டணி இல்லாம போச்சுனா நல்லதுனு நினைக்கிறாங்க. அவங்களா கழண்டுக்கிட்டா இன்னும் வசதின்றது அவங்க ஆசை. பாஜக தலைவர்கள்தான் சிலர் எடப்பாடிக்கிட்ட பேசுனாங்களாம். அண்ணாமலையை பொருட்படுத்தாதிங்க. அவர் முடிவு எடுக்க மாட்டார். மேலிடம்தான் எடுக்கும். நாம கூட்டணில இருப்போம்னு சொன்னாங்களாம்”

“எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னாராம்?”

“தேர்தல் வரும்போது பாத்துக்கலாம்னு சிரிச்சிக்கிட்டே சமாளிச்சிருக்கார். அதிமுகவுக்கு என்ன வருத்தம்னா அண்ணாமலை செய்தியாளர்கள்கிட்ட பேசும்போது ஆளும்கட்சி எதிர்க் கட்சி ரெண்டும் தேர்தல்ல பணம் கொடுக்குதுனு பேசினார். அது எப்படி கூட்டணில இருந்துக்கிட்டே இப்படி பேசலாம்னு கடுப்பாயிருக்காங்க”
“அதிமுக விவகாரம் எந்த அளவுல இருக்கு? எடப்பாடி உற்சாகத்துல இருக்கிற மாதிரி தெரியுதே”
“மார்ச் இறுதிக்குள்ள எப்படியும் அதிமுக பொதுச்செயலாளர் ஆகிடணும்னு இபிஎஸ் உறுதியா இருக்கார். பொதுச் செயலாளர் தேர்தல்ல எடப்பாடி பெயரில் 222 வேட்பு மனுக்கள் தாக்கலாகி இருக்கு. ஒவ்வொரு வேட்பு மனுவுக்கும் 25 ஆயிரம் ரூபாய் செலவு. இதுல பெரும்பாலான வேட்புமனுக்களுக்கான செலவை இபிஎஸ்தான் பார்த்துக்கிட்டாராம். அதேமாதிரி அதிமுகவின் சட்ட போராட்டத்துக்கான வழக்கறிஞர் செலவையும் அவர்தான் பார்த்துக்கறாராம். கேட்டா, ‘என்னாலதானே இந்த வழக்கு. அதனால நானே செலவு செய்யறேன்’ன்னு சொல்றாராம்.”

“சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிக்கறார் போல.”

“பொதுச் செயலாளர் தேர்தல்ல முதல்ல தனது அணி சார்பா யாரையாவது நிக்க வைக்கலாம்னுதான் ஓபிஎஸ் நினைச்சிருக்கார். ஆனா அப்படி செஞ்சா எடப்பாடி தரப்பு அவரை போட்டியிட அனுமதிச்சு தேர்தலை நடத்தி ஜெயிச்சுடுவார். அப்படி ஜெயிச்சுட்டா நாம கோர்ட்டுக்கு போக முடியாது, நமக்கான கதவுகள் முழுமையாக அடைக்கப்பட்டு விடும்னு பன்ருட்டி ராமச்சந்திரன் எச்சரிச்சிருக்கார். அதுக்குப் பிறகுதான் கோர்ட்டுக்குப் போகலாம்கிற முடிவுக்கு ஓபிஎஸ் வந்திருக்கார்.”

“ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கு பிறகு திமுகல செந்தில் பாலாஜியோட மவுசு கூடிருச்சாமே?”

“உண்மைதான். பொதுவாக அரசியல் ரீதியான கொள்கை முடிவுகளை அறிவிக்கறது, எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்றது மாதிரியான விஷயங்களையெல்லாம் தங்கம் தென்னரசுதான் பார்த்துக்குவார். ஆனா இந்த முறை பட்ஜெட் பற்றிய விளக்கம், எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்றது மாதிரியான வேலைகளை செந்தில் பாலாஜிதான் பார்த்துக்கிட்டார். ஈரோடு கிழக்கு தேர்தல் வெற்றிக்கு பிறகு ஒரே நேரத்துல முதல்வர் மற்றும் இளையவரோட குட் புக்ஸ்ல அவருக்கு இடம் கிடைச்சதுதான் இதுக்கு காரணம்னு சொல்றாங்க.”

“பாம்பே ஜெயஸ்ரீக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிச்சது கர்நாடக சங்கீத உலகில் எரிச்சலை கொடுத்துருக்குனு சொல்றாங்களே..அப்படியா?”

“எங்கதான் எரிச்சல் இல்ல? அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல், வயலினிஸ்ட் வி.வி.சுப்ரமணியம், மிருதங்க வித்வான் குருவாயூர் துரை போன்றவங்கள்ல யாராவது ஒரு மூத்தவருக்கு இந்த விருதைக் கொடுத்திருக்கலாம்னு முணுமுணுப்புகள் கிளம்பியிருக்கு. இந்த விருதுலயும் லாபியிங் வந்திடுச்சோங்கிற அதிருப்தியும் சிலருக்கு இருக்கு.”

”எப்பதான் இந்த விருதுல லாபி இல்ல? பெரும்பாலான விருதுகள் லாபி பண்றதாலதானே கிடைக்குது”

சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...