இந்த நாடாளுமன்றத் தேர்தலில் களத்திற்கே வராமலும் இந்தியா முழுவதும் அதிகம் பேசப்படுபவர்கள் இருவர். ஒருவர் நம் பிரகாஷ் ராஜ்; இன்னொருவர் இந்தி யூ டியூபர் துருவ் ராதே. பிரகாஷ் ராஜை போலவே பாஜகவை மிகக் கடுமையாக விமர்சிக்கிறார் துருவ் ராதே. ‘வாட்ஸ்அப் மாஃபியா – மில்லியன் கணக்கான இந்தியர்கள் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டனர்?’ என்ற தலைப்பில் பாஜகவினர் பற்றி துருவ் ராதே கடைசியாக நேற்று வெளியிட்ட விடியோ, 24 மணி நேரத்துக்குள் 1 கோடியே 21 லட்சம் பார்வைகளை எட்டியுள்ளது!
யார் இந்த துருவ் ராதே?
இன்று உலகளவில் அறிமுகமான மிகச் சில யூடியூபர், விளாக்கர், சமூக ஊடக ஆர்வலர்களில் துருவ் ராதேவும் ஒருவர். குறிப்பாக சமூக அரசியல், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த யூ டியூப் வீடியோக்களுக்காக மிகப் பிரபலாக அறியப்படுகிறார், துருவ் ராதே.
இன்றைய (25-4-24) நிலவரப்படி, துருவ் ராதே சேனலை ஒரு கோடியே 84 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்; இதுவரை 258 கோடியே 94 லட்சம் பேர் அவரது வீடியோக்களை பார்த்திருக்கிறார்கள்.
துருவ் ராதேவை இன்ஸ்டாக்ராமில் 68 லட்சம் பேரும் ஃபேஸ்புக்கில் 28 லட்சம் பேரும் வாட்ஸ் அப் சேனலில் 16 லட்சம் பேரும் பின் தொடர்கிறார்கள்.
யூடியூபர், விளாக்கர், சமூக ஊடக ஆர்வலர் என்பதுடன் இணையதள டெவலப்பர், டிசைனர், காப்பிரைட்டர், ப்ராஜெக்ட் டீம் லீடர், டேட்டா அனலிஸ்ட், இ-காமர்ஸ் மேனேஜ்மென்ட் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆலோசகர் என பன்முகம் கொண்ட துருவ் ராதேவுக்கு 29 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
துருவ் ராதே குடும்பமும் கல்வியும்
இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் ஒன்றான ஹரியானாவில் உள்ள ரோஹ்தக்கில் 1994 அக்டோபர் 8 அன்று பிறந்தார் துருவ் ராதே. நடுத்தர குடும்பம்தான். தொழிலதிபர் தந்தையும் ஆசிரியையான தாயும் பணிகள் காரணமாக டில்லியில் வசித்தார்கள். எனவே, ராதேவும் டில்லியில்தான் வளர்ந்தார்; அவருக்கு ஒரு தம்பி இருக்கிறார்.
ராதே, பள்ளிக் கல்வியை டெல்லி பப்ளிக் பள்ளியிலும் ஆர்.கே. உயர்நிலைப் பள்ளியிலும் முடித்த பிறகு, 2013-2015 காலகட்டத்தில் டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். தொடர்ந்து 2015-2017இல் ஜெர்மனியில் உள்ள கார்ல்ஸ்ரூ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார்.
ராதேயின் இந்த வலுவான அடித்தளம் கொண்ட கல்விப் பின்னணியே அவரை ஒரு வெற்றிகரமான யூடியூபராகவும் கல்வியாளராகவும் ஆக்கியிருக்கிறது. ராதேயின் கல்விப் பின்னணி அவருக்கு பொருளாதாரம், அரசியல், பொறியியல், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் வலுவான அடித்தளத்தை அளித்துள்ளது. இந்த அடித்தளம்தான் அவருக்கு பல்வேறு தலைப்புகளில் தகவல் மற்றும் கல்வி சார்ந்த வீடியோக்களை உருவாக்க உதவியுள்ளது.
மேலும், கற்பது என்பதை கல்லூரியோடு முடிந்த ஒன்றாக ராதே கருதுவதில்லை. வாழ்நாள் முழுவதும் கற்பவர்களிலும் ராதேவும் ஒருவர். தனது அறிவையும் திறமையையும் மேம்படுத்த, “இன்றைய நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் புதிய வழிகளையும் தேடு”வதாக சொல்கிறார், ராதே.
இதனுடன், அவரின் அடர் பழுப்பு நிற முடி, பழுப்பு நிற கண்கள், உயரமான – ஒல்லியான உடல் (183 செ.மீ. (6 அடி) உயரம், 165 பவுண்ட் (75 கிலோ) எடை), நட்பான – யாரும் அணுக தயங்காத முக அமைப்பு, அடிக்கடி புன்னகைப்பது, ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்கள் போன்ற சாதாரண ஆடைகளையே அதிகம் அணிவது (எப்போதாவதுதான் சூட் அல்லது சட்டையுடன் தோன்றுகிறார்) இவை எல்லாம் சேர்ந்துதான் ராதே வெற்றிகரமான யூ டியூபராக உதவியிருக்கிறது என்று சொல்லலாம்.
ராதேயின் குடும்பமும் ஆரம்பத்திலிருந்தே அவரது யூடியூப் தொழிலுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. அவரது பெற்றோர்கள் அவரது கல்வியைத் தொடர ஊக்கப்படுத்தியது போல் கனவுகளைப் பின்பற்றவும் ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள். ராதேயின் சகோதரரும் ஒரு யூடியூபர். அவரும் ராதேயின் பல வீடியோக்களில் ஒத்துழைத்துள்ளார்.
ராதே, தனது குடும்பத்தைப் பற்றி அதிக தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்வதில்லை. இருப்பினும், தனது குடும்பம் தனக்கு மிகவும் முக்கியமானது என்றும், அவர்கள் தனது வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோவில் பேசும்போது, “எனது குடும்பமே எனக்கு மிகப்பெரிய உத்வேகம். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, இரக்கத்தின் முக்கியத்துவத்தை எனக்கு எனது பெற்றோர்கள் தான் கற்பித்தனர். அவர்கள் வழங்கிய ஆதரவிற்காக எனது வாழ்க்கை முழுவதும் அவர்களுக்கு நன்றியுடன் இருப்பேன்” என்கிறார், ராதே.
காதல் திருமணம்
ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள பெல்வெடெரே அரண்மனையில் நவம்பர் 2021இல், தனது நீண்டகால காதலியான ஜூலி எல்பிரை மணந்தார், துருவ் ராதே. ஜூலி ஒரு ஜெர்மன் குடிமகள். ஜூலியை ஜெர்மனியில் கார்ல்ஸ்ரூ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படிக்கும் போதுதான் முதன்முதலில் சந்தித்தார் ராதே. 2018இல் டேட்டிங் செய்து 2020இல் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.
தனது குடும்ப வாழ்க்கை பற்றி ராதே ஒரு நேர்காணலில், “திருமணம் ஒரு பெரிய பொறுப்பு. ஆனால், ஜூலியுடன் எனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்க உற்சாகமாக இருந்தேன். இருவரும் குடும்பத்தை சிக்கலின்றி, சிறப்பாக நடத்த உறுதி பூண்டுள்ளோம். ஜூலி எனக்கு மிகப்பெரிய ஆதரவாளர். அவளை எனது வாழ்க்கையில் பெற்ற வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி” என்று கூறியுள்ளார்.
ராதேவும் ஜூலியும் தற்போது ஜெர்மனியின் பெர்லினில் வசிக்கின்றனர்.
யூ டியூப்பர் அவதாரம்
2013 ஜனவரி 8இல் ‘துருவ் ராதே’ என்று தனது பெயரிலேயே யூ டியூப் சேனலை தொடங்கினார் துருவ். முதலில் தனது பயண வீடியோ ஒன்றை பதிவேற்றினார். அடுத்தும் ஒரு பயண வீடியோ. முதல் மூன்று வருடங்களில் இந்த இரண்டு வீடியோகளை மட்டுமே வெளியிட்டார்.
பின்னர் 2016 செப்டம்பரில் ‘BJP IT Cell Exposed: How lies and propaganda are spread’ என்ற வீடியோவில் இருந்து அரசியல் மற்றும் சமூக தலைப்புகளுக்கு மாறத் தொடங்கினார். குறிப்பாக உண்மைச் சரிபார்ப்பு (Fact Check), விளக்கமளித்தல் (Explanation) வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டார். 2022 முஹம்மது கருத்து சர்ச்சை, 2022 மோர்பி பாலம் சரிவு, 2019 புல்வாமா தாக்குதல், 2023 இந்திய மல்யுத்த வீரர்களின் போராட்டம், 2023 மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ராதே தனது வீடியோக்களில் உரையாற்றியுள்ளார்.
இந்த வீடியோக்கள் வெளியிடுவதன் நோக்கம் குறித்த கேள்விக்கு ஒரு நேர்காணலில், “இந்தியாவில் உள்ளவர்களுக்கு இணையத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பயிற்சியளிக்கப்படவில்லை. இதனால், அவர்கள் யூடியூப், வாட்ஸ்அப்பில் எதைப் பார்த்தாலும் கண்மூடித்தனமாக நம்புகின்றனர்” என்று கூறுகிறார், ராதே.
Dhruv Rathee சேனலில் இதுவரை 612 வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த வீடியோகளை இதுவரை 258 கோடியே 94 லட்சத்து 19 ஆயிரம் பேர் பார்த்துள்ளார்கள். அதிகபட்சமாக ‘Arvind Kejriwal Jailed! | DICTATORSHIP Confirmed?’ என்ற துருவ் வீடியோவை 3 கோடியே 2 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள்.
அரசியல் குறித்து தீவிரமான உரையாடல்களுக்கு இடையே, ‘ராதே பீ நியூஸ்’ என்ற நையாண்டியான ‘போலி செய்தி’ பிரிவையும் தொடங்கி நடத்தி வருகிறார். ‘யூ டியூப்பை அரசியல் தளமாகப் பயன்படுத்திய முதல் இந்திய பயனர்களில் ராதேயும் ஒருவர்’ என்கிறது ‘ThePrint”.
இதனிடையே 2017 முதல் 2020ஆம் ஆண்டின் முற்பகுதி வரை, The Print இணைய தளத்தில் சில கருத்துக் கட்டுரைகளையும் எழுதினார்.
ஜூலை 2020இல், ‘ராதே துருவ் ராதே வ்லாக்ஸ்’ என்ற மற்றொரு யூடியூப் சேனலைத் தொடங்கினார். இதில் தனது சர்வதேச பயண பதிவுகளைப் பகிர்ந்துகொண்டார். இந்த சேனலும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இதை 25 லட்சம் பின் தொடர்கிறார்கள். 214 வீடியோக்கள் பதிவேற்றியுள்ளார். இவற்றை இதுவரை 41 கோடியே 69 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள். இதில் துருவ் – ஜூலி திருமண வீடியோவை மட்டும் ஒரு கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்த்துள்ளார்கள்.
Spotifyஇல் ‘மஹா பாரத்’ எனப்படும் ஒரு போட்காஸ்டையும் துருவ் தொகுத்து வழங்குகிறார்.
தனது வீடியோக்கள் வெற்றிக்கு காரணமாக, “முடிந்தவரை எளிமையாக விஷயங்களை முன்வைப்பது, சிக்கல்களை எளிய வார்த்தைகளில் உடைப்பதுதான். எளிமையாக ஒரு காரியத்தைச் செய்வது மக்கள் கவனத்தை ஈர்க்கும் என்பதை பார்த்து நானும் ஆச்சரியப்படுகிறேன்” என்கிறார் ராதே.
தனது வீடியோக்களில் இந்திய அரசியல், கட்டுக்கதைகள், மதம், பொழுதுபோக்கு என பல்வேறு தலைப்புகளில் அச்சமின்றி ஆராய்வதற்காகவே துருவ் ராதே இன்று உலகளவில் அதிகமும் அறியப்படுகிறார். தேர்தல் பத்திரத்தை எதனால் மிகப்பெரிய ஊழல் என்று சொல்கிறாகள் என்பது குறித்து புரியும்படி விரிவாக ராதே அலசிய வீடியோ வெளியான 4ஆவது நாளில் 1.28 கோடி பார்வைகளை தாண்டியது. கடைசியாக நேற்று (23-4-24) வெளியிட்ட, ‘How Millions of Indians were BRAINWASHED? | The WhatsApp Mafia’ வீடியோ ஒரே நாளில் ஒரு கோடியே 21 லட்சம் பார்வைகளை கடந்து அந்த சாதனையை முறியடித்தது.
இவ்வளவு ஆதரவு இருந்தால் எதிர்ப்பும் இருக்கும்தானே…
2020ஆம் ஆண்டில், கங்கனா ரணாவத்தின் அறிக்கைகளை விமர்சித்து விவாதிக்கும் வீடியோவை ராதே வெளியிட்டார். பதிலுக்கு ரணாவத், ராதேக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியது குறிப்பிடத்தக்கது.
2022 செப்டம்பரில் பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடி குறித்து ராதே வெளியிட்ட வீடியோவை இந்தியாவின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் முடக்கியது. அதில், இந்தியாவின் சிதைந்த வரைபடம் இருப்பதாகவும், அதில் காஷ்மீரின் சில பகுதிகள் பாகிஸ்தானின் பகுதியாக அல்லது ‘சர்ச்சைக்குரியதாக’ சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய அரசு கூறியது.
சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் இரண்டாவது சீசனில், வைல்ட் கார்டு போட்டியாளராக ராதே பங்கேற்பதாக வதந்திகள் பரப்பப்பட்டது. அந்த தகவலை மறுத்த ராதே, “கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும், என் வாழ்நாளில் பிக்பாஸ் போன்ற முட்டாள்தனமான நிகழ்ச்சிக்கு செல்லமாட்டேன் என்பதை தெளிவாகச் சொல்கிறேன். இந்த நிகழ்ச்சி சமூகத்தில் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது ” என்று விளக்கமளித்தார்.
தொடர்ந்து, துருவ் ராதே மனைவி ஜூலிக்கு பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல் அனுப்பப்பட்டது.
ஆபத்துகள் இருந்தபோதிலும் ராதே கலங்காமல் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்.
தமிழில் துருவ் ராதே
துருவ் ராதேவின் அரசியல் வீடியோக்கள் இந்தி மொழி கடந்தும் வரவேற்பு பெறத் தொடங்கியதை உணர்ந்து தமிழ், தெலுங்கு, பெங்காலி, மராத்தி, கன்னடம் ஆகிய ஐந்து இந்திய பிராந்திய மொழிகளில் தனது டப்பிங் வீடியோக்களை வெளியிடுவதற்கான ஐந்து புதிய யூ டியூப் சேனல்களை ஏப்ரல் 18, 2024 அன்று ராதே தொடங்கியுள்ளார்.
தமிழில் ‘ஜெயிலில் அரவிந்த் கெஜ்ரிவால்! சர்வாதிகாரம் உறுதி செய்யப்பட்டதா?’ என்ற தலைப்பில் துருவ் வெளியிட்ட முதல் வீடியோ 6 நாட்களில் 6 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
ஆப்பிரிக்காவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் உயரதிகாரியுமான பாலசுப்பிரமணியம் முத்துசாமி, “இச்சிறுவன் எனது முதல் குழந்தையை விட இளையவன் என்பதே என்னை வியக்க வைக்கும் முதல் செய்தி. இந்தியாவில் 2024க்குப் பிறகு மக்களாட்சி நிலைத்து நிற்கும் என்றால், அதற்கு முக்கியக் காரணங்களில் துருவ் ராதேவும் ஒன்று என உறுதியாகச் சொல்வேன்” என்கிறார்.
‘டைம்’ இதழ் 2023இல் வெளியிட்ட அடுத்த தலைமுறை தலைவர்களின் பட்டியலில் துருவ் ராதேவும் சேர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.