போதைப் பொருள் கட த்தல் வழக்கில் கைதாகியிருக்கும் ஜாபர் சாதிக் வழக்கு சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
சென்னையில் இயக்குநர் அமீர் மற்றும் புகாரி ஹோட்டல் உரிமையாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையைச் சேர்ந்தவர்கள் சுமார் 25 குழுக்களாக தனித்தனியே சோதனை நடத்தியிருக்கிறார்கள்.
வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களின் மூலப்பொருட்களை ஜாபர் சாதிக் கடத்தியிருக்கிறார் என்பதே குற்றச்சாட்டு. இதனால் ஜாபர் சாதிக் வழக்கில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் விசாரணையை நடத்திவருகிறது.
இதன் மூலம் ஜாபர் சாதிக் சம்பாதித்ததை யார் யாருக்கெல்லாம் கொடுத்திருக்கிறார், என்னென்ன தொழில்களில் முதலீடு செய்திருக்கிறார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காகவே இப்போது அமீர் மற்றும் புகாரி ஹோட்டல் உரிமையாளர் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
இப்போது அமலாக்கத்துறையும் சோதனையை நடத்தியிருப்பதால், தமிழ் சினிமா வட்டாரத்தில் ஒரு திடீர் பயம் உருவாகி இருக்கிறது. இயக்குநர் அமீரை டெல்லிக்கு வரவழைத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பல மணி நேர விசாரணையை மேற்கொண்டனர். இது நடந்தது ஏப்ரல் 2-ம் தேதி. இப்போது அவரது அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனையை நடத்தியிருக்கிறது.
இதையடுத்து, அமீரை மீண்டும் விசாரணைக்கு வருமாறு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் அமீர் தரப்பில் இருந்து விசாரணைக்கு வர கால அவகாசம் கேட்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.