Dunki (டங்கி – இந்தி திரைப்படம்) – நெட்பிளிக்ஸ்
ஆமிர்கானை வைத்து ‘3 இடியட்ஸ்’ படத்தை எடுத்த ராஜ்குமார் ஹிரானியின் லேட்டஸ்ட் படம் டங்கி. ஷாரூக்கான், தப்ஸி, விக்கி கவுசால் உள்ளிட்டோர் நடித்த இப்படம் இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்தியர்களின் வெளிநாட்டு மோகத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ராஜ்குமார் ஹிரானி. பஞ்சாப்பில் வசிக்கும் தப்ஸிக்கும், அவரது நண்பர்களுக்கும் லண்டனுக்கு போய் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை. நேர்மையான முறையில் அது நடக்காமல் போக கள்ளத்தனமாக அவர்கள் லண்டன் போக உதவுகிறார் ஷாரூக் கான்.
25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியா திரும்ப அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் குடியுரிமை சிக்கல்களால் அது கஷ்டமாகிறது. தங்களை கள்ளத்தனமாக லண்டன் கொண்டுபோன ஷாரூக்கானின் உதவியை அவர்கள் நாடுகிறார்கள். அவர் எப்படி அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவருகிறார் என்பதுதான் படத்தின் கதை. இதன் நடுவே ஷாரூக் – தப்ஸி காதல் கதையையும் இனிமையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
பீல் குட் டைப் கதைகளை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.
சிங்கப்பூர் சலூன் (தமிழ்) – அமேசான் ப்ரைம்
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சத்யரா, லால், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.
சொந்தமாக சலூன் வைக்கவேண்டும் என்பது ஆர்.ஜே.பாலாஜியின் சிறுவயது ஆசை. இதற்காக மாமனாரிடம் இருந்தும், கடன் வாங்கியும் பணம் சேர்த்து சலூன் திறக்க முயல்கிறார். ஆனால், எதிர்பாராத திருப்பத்தால் கடையைத் திறக்க முடியாமல் போகிறது. கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு முடிவெடுக்கும் பாலாஜி, பிறகு அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
காமெடி படங்களுக்கான ஹீரோ என்ற இமேஜில் இருந்து ஆர்.ஜே.பாலாஜி வெளியில் வர இப்படம் உதவியிருக்கிறது.
மலைக்கோட்டை வாலிபன் (மலையாளம்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியின் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ஃபேண்டஸி வகை திரைப்படம் மலைக்கோட்டை வாலிபன். கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியான இப்படம் போதிய அளவில் வசூல் செய்யவில்லை. இந்த சூழலில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியாகி உள்ளது.
பலசாலியான மலைக்கோட்டை வாலிபன், தனது தம்பி மற்றும் குருநாதருடன் பல்வேறு ஊர்களுக்குச் சென்று மல்யுத்த போட்டிகளில் வெற்றி பெறுகிறார். ஆனால் அவனது ஊர் மக்கள் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள். அவர்களை அடிமைத்தளையில் இருந்து மீட்க, ஆங்கிலேயர்களை மல்யுத்த போட்டிக்கு அழைக்கிறான் மலைக்கோட்டை வாலிபன். அவனால் வெற்றிபெற முடிந்ததா என்பதுதான் இப்படத்தின் கதை.
லாஜிக் விஷயங்களைப் பார்க்காமல் பொழுதுபோக்குக்காக மட்டும் பார்பவர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.
The kerala story (தி கேரளா ஸ்டோரி – இந்தி) – ஜீ 5
கடந்த ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் இப்போது ஜீ5 ஓடிடியில் வெளியாகி உள்ளது.
கேரளாவில் உள்ள இந்து பெண் ஒரு இஸ்லாமிய இளைஞரை காதலித்து மணக்கிறார். திருமணத்துக்குப் பிறகு அந்த பெண் ஐஎஸ் அமைப்பில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு, வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறாள்.