இறுகப் பற்று (தமிழ்) – நெட்பிளிக்ஸ்
விவாகரத்துகள் அதிகரித்து வரும் சூழலில், தம்பதிகளுக்கு இடையில் தோன்றும் பிரச்சினைகளையும், அதைத் தீர்ப்பதற்கான வழிகளையும் சொல்கிறது இறுகப்பற்று.
மனைவி தன்னைவிட புத்திசாலியாக இருப்பதால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையால் அவரைப் பிரிய விரும்பும் கணவன், ஜிம்முக்கு போய் உடலைக் குறைக்க விரும்பாமல் குண்டாக இருக்கும் மனைவியை விவாகரத்து செய்ய விரும்பும் கணவன், மனைவி தன்னை பரிசோதனைப் பொருளாக நடத்துவதால் அவளிடம் இருந்து வேறுபட்டு நிற்கும் கணவன் என்று 3 தம்பதிகளின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைக் காட்டுகிறது இப்படம். கூடவே மனம்விட்டு பேசி, மனதில் உள்ளவற்றை சொன்னால் பிரிவுகள் இல்லாமல் பல காலம் இணைந்து வாழலாம் என்ற அறிவுரையையும் சொல்கிறது.
வன்முறைக் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களுக்கு நடுவில், மெல்லிய சாரலாய் குடும்ப வாழ்க்கையைப் பேசும் படமாக வெளியாகி இருக்கிறது இறுகப்பற்று.
பரம்பொருள் (தமிழ்) – அமேசான் ப்ரைம்
சிலைக் கடத்தலை மையமாக வைத்து அரவிந்த் ராஜ் இயக்கத்தில் சரத்குமார், ஆதி நடித்துள்ள படம் பரம்பொருள். ’போர்த் தொழில்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் காக்கிச் சட்டையில் சரத்குமார் நடித்துள்ள படம் என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை முடிந்தவரை நிறைவேற்றி இருக்கிறது ‘பரம்பொருள்’.
தங்கையின் சிகிச்சை செலவுக்காக போலீஸ் அதிகாரியான சரத்குமார் வீட்டில் திருடச் செல்கிறார் ஆதி. அப்போது சரத்குமாரிடம் கையும் களவுமாக சிக்குகிறார். பணம் சம்பாதிப்பதை குறிக்கோளாக கொண்டிருக்கும் சரத்குமாருக்கு, ஆதி ஏற்கெனவே சிலை கடத்தல் தொடர்புடைய ஒருவரிடம் வேலை பாத்தவர் என்பது தெரிய வருகிறது. அதனால் அவரை வைத்து கடத்தல் சிலை ஒன்றை விற்க திட்டமிடுகிறார். அவர்களால் சிலையை விற்க முடிகிறதா? அதற்கு அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதுதான் படத்தின் கதை.
போர்த்தொழில் படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சரத்குமார், இதில் வில்லத்தனம் மிக்க போலீஸ் அதிகாரியாக பழைய வில்லன் அவதாரத்தை எடுத்திருக்கிறார். சிலை கடத்தல் தொடர்பான பல விஷயங்களை இந்த படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
பரபரப்பான சஸ்பென்ஸ் கதையை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.
கூமர் (Ghoomer – இந்தி) – ஜீ 5
’சீனி கம்’, ‘ஷமிதாப்’, ‘பா’ போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய பால்கியின் புதிய படம் கூமர். அபிஷேக் பச்சன், கவுரி ஷிண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கூமர்’ திரைப்படம் இப்போது ஜீ5 ஓடிடியில் வெளியாகி உள்ளது.
சிறுவயதில் இருந்தே சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக இருக்கிறார் அனைனா. இந்திய அணிக்காக ஆட தகுதிபெறும் நேரத்தில், விபத்தில் ஒரு கையை இழக்கிறார். இதனால் வாழ்க்கையை வெறுக்கும் அனைனாவை மீட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட்டில் சிறந்த வீராங்கனையாக உருவாக்க நினைக்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீர்ரான அபிஷேக் பச்சன். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா என்பதுதான் படத்தின் கதை.
விளையாட்டை அடிப்படையாக கொண்ட இந்த படம், பார்ப்பவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுகிறது.
MY3 (தமிழ் வெப் சீரிஸ்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
ஹன்சிகா மோத்வானி, பிக்பாஸ் முகேன், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த வெப் சீரிஸ், டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது.
பெரும் பணக்காரரான முகேன், இளம் வயதில் ஒரு விபத்தில் பெற்றோரை இழக்கிறார். அதே விபத்தில் மனிதர்கள் யார் தொட்டாலும் அலர்ஜி ஏற்படும் நோய் அவருக்கு வருகிறது. அதனால் மனிதர்களை அதிகம் சந்திக்காமலேயே வாழ்கிறார். இந்த நேரத்தில் ரோபோடிக் இஞ்ஜினீயரான சாந்தனு உருவாக்கியுள்ள ஒரு பெண் ரோபோவைப் பற்றி கேள்விப்படுகிறார். தனக்கு துணையாக இருக்க, அந்த ரோபோவை வாங்க ஒப்பந்தம் செய்கிறார்.
கடைசி நேரத்தில் அந்த ரோபோ கோளாறானதால், அதைப் போலவே இருக்கும் ஹன்சிகாவை ரோபோ என்று பொய் சொல்லி முகேனுடன் அனுப்பி வைக்கிறார்கள். இதைத்தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள்தான் இந்த வெப் சீரிஸின் கதை.
காமெடி நிறைந்த கலகலப்பான கதையை விரும்புபவர்களுக்கு ஏற்ற வெப் சீரிஸ் இது.